கணிப்புகள்... நிபந்தனைக்கு உட்பட்டவை!

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது, 21 வயது நிறைந்தவர்களுக்கு ஓட்டுரிமை என, பிரதமர் நேரு தீர்மானித்தார். அப்போது, கவர்னர் ஜெனரலாக இருந்த, மவுன்ட் பேட்டன், 'நாட்டில், 90 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். தேர்தலில் போட்டியிடும் ஜமீன்களும், மிட்டா, மிராசுகளும் விலை கொடுத்து ஓட்டுகளை வாங்கி விடுவர். இது, எல்லை மீறிய ஜனநாயகம்' என, எச்சரித்தார்.

அதற்கு நேரு, 'ஏழைகளை பார்ப்பதே பாவம் என, பணக்காரர்கள் நினைக்கின்றனர். ஓட்டுரிமை கொடுத்தால் தான், ஒரு முறையாவது அவர்களின் வீடு தேடி செல்வர்' என பதில் அளித்து, அதை செயல்படுத்தினார்.இதே போல, 'படித்தவர்களுக்கே ஓட்டுரிமை வழங்க வேண்டும்' என்றார், முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத். 'ஜனநாயகத்தில் தலைகள் மட்டுமே, கணக்கில் கொள்ளப்படுகின்றன. தலைக்குள் என்ன இருக்கிறது என, யாரும் சிந்திப்பதில்லை' என, நேருவை சாடினார்.

ஆனால், அன்று வாக்காளர்கள் மனசாட்சிப்படி நேர்மையாக ஓட்டளித்தனர். மவுன்ட் பேட்டனின் எச்சரிக்கை, இன்றைய சூழலுக்கு தான் பொருந்துகிறது. ஆனால், அவர் சொன்னது போல ஏழை, படிக்காதவர் ஓட்டுகள் மட்டும் அல்ல; நடுத்தர வர்க்கம், ஏன் சில பணக்காரர்களின் ஓட்டுகளும் விலை போகின்றன.காரணம், 'கொடுப்பதை மறுப்பானேன்' என்கிறது ஒரு தரப்பு. 'உழைச்ச காசா அது; கொள்ளைஅடிச்சது தானே...' என, சமரசம் கொள்கிறது மற்றொரு தரப்பு.நம் வீட்டுக்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால், அதில், எவ்வளவு தரம் பார்க்கிறோம், எத்தனை கடைகளில் விசாரிக்கிறோம்! ஆனால், நம் நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலில், 'பணம் கொடுப்பவருக்கு ஓட்டு' என்ற ,'சித்தாந்தம்' சரியா?ஓட்டுக்கு லஞ்சம்... வாக்காளர்கள் உருவாக்கியதா; அரசியல்வாதிகள் கண்டுபிடிப்பா?

இந்த கலாசார அவலத்தின் வேரை தேடுவது, முட்டையில் இருந்து கோழியா அல்லது கோழியில் இருந்து முட்டையா என்பதற்கு, விடை தேடுவதற்கு சமம்.ஓட்டுகளை பெற, தேர்தல் வாக்குறுதிகளாக இலவச, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பொங்கல் பரிசு, 'டிவி' என, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அரசு கஜானாவை காலி செய்தன. இல்லாத ஏழைகளுக்கு, இந்த பொருட்கள் போய் சேர்வது சரி; 'சமுதாய ஏற்றதாழ்வை போக்கும் திட்டம்' என, சாக்குப்போக்கு சொல்லலாம்.ஆனால், இந்த பொருட்களை அதிக விலையில் வாங்கி, 'பிராண்ட்' தரத்துடன் வைத்துள்ளவர்களும், 'இலவசமாக கொடுப்பதை ஏன் விட வேண்டும்...' என, வரிசையில் நின்று வாங்கிச் செல்வதை என்ன சொல்வது! தேர்தல் வாக்குறுதிகளாக வந்தன இலவசங்கள்; அதனுடைய நீட்சி, ஓட்டுக்கு பணம்.

நுகர்வு கலாசாரம்:கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கூட்டணி கட்சிகளின் பலம், ஓட்டு சதவீதத்தை கணக்கிட்டு, யாருக்கு வெற்றி என, சாதாரண தொண்டர்கள் கூட, கணித்து விட முடிந்தது. தற்போதைய கணிப்புகளோ, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை. பொருட்கள் விற்பனை விளம்பரங்களில், சலுகை அறிவிப்பு இருக்கும். அதில், சிறியதாக நட்சத்திர குறியீடு கொடுக்கப்பட்டு, கீழ்பகுதியில் அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கும்; 'நிபந்தனைக்கு உட்பட்டவை' என. தற்போது நிபந்தனைக்கு உட்பட்டு, கணிப்புகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

ஆரத்தி தட்டுகளுக்கு அன்பளிப்பு, கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு கவனிப்பு, இறுதிக்கட்ட பட்டுவாடா என, கச்சிதமாக முடிப்பவர் முடிசூடலாம்; அதற்கு முன் வந்த கணிப்புகள் பொய்க்கும்.மொத்தத்தில், நுகர்வு கலாசாரம் போல மாறிவிட்டது தேர்தல். கடுகளவு மதிப்புள்ள இலவசம் இணைத்து, பொருட்களை வாங்கத் துாண்டுவது நுகர்வு கலாசாரத்தின் உத்தி. தேர்தல்களிலும் அதுதான் நடக்கிறது. 100க்கும், 200க்கும் நாம் விலைபோகிறோம். அரசியல்வாதிகளின் திட்டமிடலில் வீழ்த்தப்படுகிறது தேர்தல் ஜனநாயகம்.

புதைகுழிக்குள், 'கெத்து'நம் முன்னோர், 8, 9ம் நுாற்றாண்டுகளிலேயே, தேர்தல் நடத்தி கிராமசபை உறுப்பினர்களை தேர்வு செய்தவர்கள். பாண்டிய மன்னர்களும், உத்திரமேரூரில் பராந்தக சோழனும், குடவோலை முறையில் தேர்தல் நடத்தினர்.'ஒழுக்க கேடானவர்கள், அரசுக்கு சரிவர கணக்கு காட்டாதவர்கள், பங்கேற்க முடியாது' என்பது, குடவோலை முறையின் அடிப்படை கொள்கை. இதை வரலாற்று புத்தகத்தில் பதிவு செய்து, 'தமிழர் நாகரிகம் சிறந்தது' என, நெஞ்சு நிமிர்த்துகிறோம். தேர்தல் நேரத்திலோ, அந்த, 'கெத்து' புதைகுழிக்குள் போய்விடுகிறது.

தேர்தல் களம் என்பது, கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே என்பது, எழுதப்படாத விதியாகி விட்டது. எதிர்காலங்களில் கட்சிகள் நடத்தும் வேட்பாளர் நேர்காணலில், 'கோடீஸ்வரர்கள், மிட்டா, மிராசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டாலும் வியப்பு இல்லை. காமராஜர், கக்கன் போன்ற சாமானியர்கள், நேர்மையாளர்களுக்கு இனி இடம் இல்லை.

கறை வேண்டாம்:'துாய்மை இந்தியா, பாலித்தீன் தடை' என, சூழல் காக்கும் அறிவிப்புகளை, வெளியிடுகிறது அரசு. நாம் அவற்றை பின்பற்றுகிறோமா? வெட்ட வெளியில், 'திறந்து விடுவதும்' 'பேஷனாக' பாலித்தீன் பை பிடிப்பதும், நம்மை விட்டு இன்னும் போகவில்லையே. தனிமனித ஒழுக்கம் இருந்தால், இதற்கெல்லாம் சட்டமும், திட்டமும் தீட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் சீரழிவுகளையும் தனிமனித ஒழுக்கம் தடுக்கும்.நாம் நேர்மையாளராக இல்லாதபோது, நாம் தேர்வு செய்யும் அரசியல்வாதி மட்டும் எப்படி இருப்பார்? ஓட்டு போட்ட பின் கைநீட்டி விரலை காட்டி மைக்கறை இட்டு கொள்வோம். தேர்தலுக்கு முன், 'கைநீட்டி' கறைபடிவதை தவிர்ப்போம்.

- பா.கார்த்திகேயன் -
சமூக ஆர்வலர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)