மாமியார் தயவால் வேட்பாளரான மருமகன்

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரும், பாலிவுட் நடிகையுமான, பீனா காக்கின் மருமகன், அஜ்மீர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகியுள்ளார். பின்னணியில் மாமியார் உள்ளார்.

லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் வாரிசு அரசியலை தாண்டி, குடும்ப அரசியல் கொடி கட்டி பறக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குடும்ப அரசியலை எந்த கட்சியும் விட்டு வைக்கவில்லை. அப்பா, மகனுக்கும்; அம்மா, மகளுக்கும்; தாத்தா, பேரனுக்கும்; அப்பா, மகளுக்கும் என, தேர்தலில், 'சீட்' வாங்கி கொடுத்துள்ளனர்.

அதிர்ச்சி



இந்த வரிசையில், மாமியார் முன்னாள் அமைச்சராக இருப்பதால், அவரின் மருமகனுக்கு, தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் சீட் வழங்கியுள்ளது. இந்த குடும்ப அரசியல், ராஜஸ்தான் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துஉள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜோத்பூர் தொகுதியில், அசோக் கெலாட் மகன், வைபவ் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வர், வசுந்தரராஜேவின் மகன், துஷ்யந்த், ஜலாவார் தொகுதியில் வேட்பாளராகியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மகன், மன்வேந்திர சிங், பர்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில், ராஜஸ்தானின் முன்னாள் சுற்றுலா துறை அமைச்சரும், பாலிவுட் நடிகையுமான, பீனா காக் மகள், அம்ரிதாவின் கணவர், ரிஜு ஜுன்ஜுன்வாலா, அஜ்மீர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராகியுள்ளார். இது அவருக்கு முதல் போட்டி!

இந்த தொகுதியில், ஏற்கனவே, ரகு சர்மா என்பவர், எம்.பி.,யாக இருந்தார். அவர் தற்போது, ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சராக உள்ளார். மீண்டும், எம்.பி., தேர்தலில் போட்டியிட, சர்மா விரும்பவில்லை. தொகுதியை யாருக்கு வழங்கலாம் என, காங்., மேலிடம் ஆலோசனை நடத்தியது.

வெற்றி



இதை அறிந்த, பீனா காக், மேலிடத்தில், மருமகன் ஜுன்ஜுன்வாலாவுக்கு, 'ஸ்ட்ராங்' பரிந்துரை செய்துள்ளார். அவர் எதிர்பாராத விதமாக, முதல் முயற்சியிலேயே, பீனா காக் வெற்றி பெற்று உள்ளார்.பா.ஜ., சார்பில், பாகீரத் சவுத்ரி போட்டியிடுகிறார். இவர், அஜ்மீர் தொகுதி மக்களுக்கு பரிச்சயமான முன்னாள், எம்.எல்.ஏ., என்பதால், ஜுன்ஜுன்வாலாவை எளிதில் தோற்கடிக்க முடியும் என, பா.ஜ., நம்பிக்கையுடன் உள்ளது.ஜுன்ஜுன்வாலாவுக்கு, அஜ் மீர் தொகுதி சொந்த ஊரல்ல என்பதும், பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.

- அபா சர்மா -
சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)