தேர்தல் நாடகமா முதல்வர் இ.பி.எஸ்., வாக்குறுதி?

தீர்ப்பு தற்காலிகமானதே: நிரந்தரமாக கைவிட்டிருக்க வேண்டும்

'சேலம் - சென்னை இடையேயான, எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 'எட்டு வழிச்சாலை அமைவதால், அப்பகுதியில் தொழில்துறையும், உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும்; வேலைவாய்ப்புகள் பெருகும் என, நம்பினோம். ஆனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியது, மாநில அரசின் கடமை; உத்தரவை செயல்படுத்துவோம்' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துகள்:

வளர்ச்சி பணிகளுக்கு எதிராக, நீதிமன்றம் என்றைக்கும் இருந்த தில்லை. எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள், நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டிருந்தால், நாட்டில் இன்றையை வளர்ச்சி நடந்தேறி இருக்காது. கற்காலத்தில் தான் நாடு இருந்திருக்கும். இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றி அல்ல; யாருக்கும் தோல்வி அல்ல. இது, தற்காலிகமானதே.நீதிமன்றத்தின் தீர்ப்புகளை, அரசு சட்ட ரீதியாக மதிக்க வேண்டும். சட்டத்தை மதிக்கும் வகையில், தீர்ப்பை ஏற்கிறோம் என, முதல்வர் கூறியுள்ளார். இது, தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகமல்ல. இதனால், சாலை திட்டப் பணிகள், நிரந்தரமாக கைவிடப்படும் என்றும் அர்த்தமல்ல. நாட்டின் வளர்ச்சியே, மக்களின் வளர்ச்சி.செயல்படுத்தப்படும் திட்டங்களை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; மக்களுக்கு விரோதமானவர்கள். இந்த திட்டம் மக்களுக்கு விரோதமான திட்டம் அல்ல என்பதை ஆதாரப்பூர்வமாக, நீதிமன்றத்தில் நிரூபித்து, மீண்டும், இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.நாட்டின் எந்தப் பகுதியிலும், மத்திய அரசு எடுத்து வரும், வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை, தமிழகம் போல, எந்தக் கட்சிகளும் துாண்டிவிடவில்லை. இந்த பிரச்னையை, விவசாயிகளுக்கு ஆதரவாக, கனிவோடு கவனித்து, மத்திய அரசு, இந்த திட்டத்தை தொடர, மாநில அரசு சட்டரீதியான முயற்சியை எடுக்கும்.'சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதி மன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்ற உறுதி மொழியை, முதல்வரிடமிருந்து, இந்த வழக்கை தொடர்ந்த அன்பு மணி பெறுவாரா... அவ்வாறு பெற முடியாவிட்டால், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, பா.ம.க., விலகுமா...' என, ஸ்டாலின் கேள்வி எழுப்பியது, அன்புமணிக்கும், அ.தி.மு.க.,வுக்கும் கொம்பு சீவி விடும் முயற்சி.ஏற்கனவே, தி.மு.க., அரசுக்கு எதிராக நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை, அலட்சியப்படுத்தியவர்கள் தான், தி.மு.க.,வினர். கெயில் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது, தி.மு.க., அரசு தான். விவசாயிகளிடம், ஸ்டாலின் தான், மன்னிப்பு கேட்க வேண்டும்.எஸ்.ஆர்.சேகர்,மாநில பொருளாளர்,தமிழக, பா.ஜ.,

மத்திய - மாநில அரசுகள் இணைந்து, 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த இருந்த, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, விவசாய தொழிலாளர்களின் வயிற்றில், பாலை வார்க்கச் செய்துள்ளது.விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பது, இந்த தீர்ப்பின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன், முதல்வர், இந்த திட்டத்தை கைவிட்டிருக்க வேண்டும்.விவசாயிகள் நலன் மீது, மாநில அரசுக்கு அக்கறை இருக்குமானால், விவசாய மேம்பாட்டு திட்டங்களை, மாநில அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும். மேட்டூர், வைகை போன்ற அணைகளை துார் வாரியிருக்கலாம். அந்த அணைகளில், 30 அடிக்கு மணல் தேங்கியுள்ளது. வாய்க்கால்கள் துார் வாராமல் விடப்பட்டுள்ளன.ஆந்திர அரசு, விவசாயிகள் நலன் கருதி, பாலாற்றில் ஆங்காங்கே, தடுப்பணைகள் கட்டி வருகிறது. அதை நிறுத்த வேண்டும் என, தமிழக அரசு குரல் கொடுக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக, காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில், தடுப்பு அணைகள் கட்ட, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.தடுப்பு அணைகள் கட்டுவதன் வாயிலாக, அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இது, விவசாயிகளுக்கு பயன்படும் திட்டமாக அமையும்.ஆனால், 'மத்திய - மாநில அரசுகள், தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களில், அக்கறை செலுத்தவில்லை. அதனால் தான், வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக, ஆண்டிற்கு, 72 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை, நாங்கள்வழங்குவோம்' என, ராகுல் கூறியுள்ளார்.ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் மற்றும் சிதம்பரம் போன்றவர்களும், 'ராகுலின் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம்' என, கூறியுள்ளனர்.எனவே, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்காமல், உண்மையாக, விவசாயிகள் பாதிக்கப்படக் கூடிய நிலையை தவிர்க்க, மத்திய - மாநில அரசுகள் முன் வர வேண்டும்.ஜி.காளன்,முன்னாள், எம்.எல்.ஏ.,தலைவர், தமிழக காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)