காங்.,- தி.மு.க., ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி அழைப்பு

ஆண்டிபட்டி: ''காங்.,- தி.மு.க.,வின் வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் தாங்கள் தான் பிரதமர் ஆவோம் என வரிசையில் காத்திருக்கின்றனர்,'' என தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார் (தேனி), ராஜ்சத்யன் (மதுரை), தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமி (விருதுநகர்), பா.ஜ., வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), பா.ம.க., வேட்பாளர் ஜோதிமுத்து (திண்டுக்கல்) மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர்கள் தேன்மொழி (நிலக்கோட்டை), மயில்வேல் (பெரியகுளம்), லோகிராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியதாவது:

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்கிறேன். மைதானத்தில் வெப்பமும் அதிகம்; உங்கள் உற்சாகமும் அதிகம். உங்களை பார்க்கும் போது நாளை நமதே, நாற்பதும் நமதே என தோன்றுகிறது.

சதுரகிரி, பெருங்காமநல்லுார்:மேற்கு தொடர்ச்சி மலையில் சுந்தரமகாலிங்கம் அருளாசி வழங்கும் புண்ணிய பூமி. இந்த மண் ஆன்மிக மண். துணிச்சலுக்கு பெயர் பெற்ற மண். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் நுாறு ஆண்டுகளாகின்றன. அதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பெருங்காமநல்லுாரில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெ., வுக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்கள் ஏழைகளுக்காக வாழ்ந்தனர். அவர்களது திட்டங்களால் ஏழைகள் வறுமையிலிருந்து மீண்டனர்.

2014ல் நான் உறுதிமொழி வழங்கினேன். என் மீது காட்டும் அன்பும், பாசத்திற்கும் வட்டியும் முதலுமாக திருப்பி தருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். இப்போது அதற்கான கணக்குகளை சொல்ல உள்ளேன். எதிராளிகள் நமக்கு செய்த துரோகம், ஊழல் கணக்குகளையும் கூற விரும்புகிறேன்.

எதிரிகள் சேர்ந்துள்ளனர்:ராணுவத்தினர் முதல் விவசாயிகள் வரை ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு, கண்ணியம், வளத்தை கொண்டிருக்கிற புதிய இந்தியாவை உருவாக்க கனவு காண்கிறோம். ஆனால் காங்.,- தி.மு.க., கூட்டணி இந்த வளர்ச்சியை ஏற்று கொள்ள முடியவில்லை. 1979ல் காங்கிரசாரால் தி.மு.க., அவமானப்படுத்தப்பட்டது. இன்று அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. '2ஜி' ஊழலில் தி.மு.க., தலைவர்கள் சிறையில் இருந்தனர். அப்போது காங்., தலைவர்களை விமர்சனம் செய்தனர். தற்போது ஊழலுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளனர். மோடிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் எஜமானை (ராகுல்) பிரதமராக முன்மொழிந்தார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க., காங்., கூட்டணியில் உள்ள தலைவர்கள் கூட ஏற்கவில்லை. கூட்டணியில் அனைவரும் தாங்கள்தான் பிரதமர் என வரிசையில் காத்திருக்கின்றனர்.

துக்ளக் சாலை ஊழல்:மத்திய ஆட்சியில் தந்தை நிதி அமைச்சராக இருந்தார். மகன் நாட்டை கொள்ளையடித்து கொண்டிருந்தார். எப்போது எல்லாம் அவர்கள் ஆட்சி செய்கிறார்களோ நாட்டை கொள்ளையடிக்கின்றனர். இப்போதுள்ள ம.பி., அரசு அவர்களுக்கான ஏ.டி.எம்., ஆக மாறியிருக்கிறது. குழந்தைகள், ஏழைகளுக்கான நிதி ஆதாரங்களை தேர்தல் செலவுக்கு பயன்படுத்துகின்றனர். இதை 'துக்ளக் சாலை ஊழல்' என மக்கள் பேச துவங்கியுள்ளனர். அந்த டில்லி துக்ளக் சாலையில் எந்த தலைவர் வசிக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும்.

தி.மு.க., சிறுபிள்ளைத்தனமாக காரியங்களை செய்து மக்களை திசை திருப்புகிறது. ஆனால் உங்கள் காவலாளியான நான் உஷார் ஆக உள்ளேன். அவர்கள் திருட்டுத்தனம் செய்தால் இந்த காவலாளியால் பிடிக்கப்படுவர். இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். காங்.,- தி.மு.க., வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தேனி மக்கள் வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள். நாட்டின் பாதுகாப்பில் எந்த சமாதானமும் செய்ய முடியாது. பயங்கரவாதிகளை ஒழிக்க எல்லா முயற்சிகளையும் செய்வோம். காங்கிரசும் நேர்மையின்மையும் சிறந்த நண்பர்கள். அனைவருக்கும் நிதி, நியாயம் கிடைக்க வேண்டும் என காங்., கட்சியினர் பேசுகின்றனர். அவர்கள் 60 ஆண்டுகளாக அநியாயமும் அநீதியும் செய்ததாக வெளிப்படையாக ஒப்பு கொண்டுள்ளனர்.

1984ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யார் நியாயம் வழங்குவர் என காங்.,கிரசுக்கு கேள்வி கேட்கிறேன். தலித் இன படுகொலைக்கு காங்., நியாயம் வழங்குமா. எம்.ஜி.ஆர்., அரசை ஒரு குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என காங்., கலைத்ததே... அதற்கு யார் நியாயம் வழங்குவர் என காங்கிரசை கேட்கின்றனர். போபால் விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் நியாயம் வழங்குவர்.

வைகை சீரமைப்பு:இந்த பகுதி மக்கள் மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்ற நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி மதுரை-போடி அகல ரயில் பாதை பணி தீவிரப்படுத்தப்பட்டு நடக்கிறது. கரூர் -திருச்சி மின்மயமாக்கும் பணி நடக்கிறது. சென்னை- மதுரை தேஜஸ் ரயில் துவக்கப்பட்டுள்ளது. மதுரை செட்டிகுளம் தேசிய நெடுஞ்சாலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை விமானநிலையம் மேம்படுத்தப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தேனி மக்கள் பயன்பெறுவர். மதுரை ஜவுளி பூங்கா மூலம் இப்பகுதி மக்கள் பயன்பெறுவர். இந்த பகுதி விவசாயிகளின் நீர்பாசன பிரச்னை குறித்து நன்றாக தெரியும். கங்கை போல வைகையை சீர்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

சதுரகிரி கோயில் மேம்பாடு:பாசனத்திற்கு தண்ணீர் இல்லையே என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். 10 ஆயிரம் ஏக்கர் பரப்பை பாசனத்திற்கு கொண்டு வந்த தே.ஜ., கூட்டணி ஒரு பக்கம். ஓட்டுக்களை பெற்று தண்ணீர் தராதவர்கள் மற்றொரு பக்கம். நமக்கு தண்ணீர் தராதவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஐயப்ப பக்தர்கள் விரைவாக சென்று தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேம்படுத்தப்படும். இதுபோன்ற வளர்ச்சிக்கு தற்போது மோடி ஏன் தேவைப்படுகிறார். இந்த வளர்ச்சியை கடந்தகால ஆட்சியாளர்கள் சரியான திசையில் கொண்டு செல்லவில்லை.

இந்த மண் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மண். காங்கிரசால் இந்த மண்ணை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த முடியவில்லை. வெளியூர்காரரை கொண்டு வந்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க., பா.ஜ,, கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர். புதிய இந்தியாவை படைக்கும் பயணத்தில் நம்மை இணைத்து கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அவரது பேச்சை பா.ஜ., மாநில செயலர் சீனிவாசன் மொழி பெயர்த்தார். வணக்கம், நமஸ்காரம் என பேச துவங்கிய பிரதமர் வணக்கம் எனக்கூறி முடித்தார்.

ராமநாதபுரத்தில் மோடி:பா.ஜ.,வேட்பாளர்கள் தமிழிசை (துாத்துக்குடி), எச்.ராஜா (சிவகங்கை), நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்) மற்றும் மனோஜ் பாண்டியன் (நெல்லை-அ.தி.மு.க.,) மற்றும் இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் சதன் பிரபாகர் (பரமக்குடி) ஆகியோரை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

அப்துல்கலாம், பாரதம் பற்றி கனவு கண்டார். அந்த கனவுகளை நனவாக்கி இந்தியாவை புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும். 'மிஷன் சக்தி' மூலம் செயற்கைக்கோளை நாம் தாக்கி அழித்த செயலை அப்துல்கலாம் இருந்திருந்தால் கண்டு மகிழ்ந்திருப்பார். தற்போதைய இந்தியா 2014 ல் இருந்த இந்தியாவை விட மாறுபட்டு இருக்கிறது. இன்று ஏழை தாய்மார்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகையில்லாத சமையல் செய்ய உதவியுள்ளோம்.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு உயர் தர சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது 130 கோடி மக்களின் ஆசியினால் நடந்தது. ராமேஸ்வரம்- தனுஷ்கோடி சாலை இணைப்புக்கும், சுற்றுலா தலமாக்கவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பாம்பனில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. 100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம், சிறப்பு மிக்க பாலமாக மாற்றப்பட உள்ளது. மே 23 ல் மீண்டும் பொறுப்புக்கு வரும் மோடி அரசு 'ஜல்சக்தி திட்டம்' மூலம் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும்.

மீனவர்களுக்கு சலுகை அட்டை:மீனவர்கள் கடினமான உழைப்பாளிகள். தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலில் தொழில் செய்கின்றனர். விவசாயிகளுக்கு கிஸான் கார்டு வழங்கியது போல், மீனவர்களுக்கும் வழங்கப்படும். 'இஸ்ரோ'வின் நவீன தொழில்நுட்பத்தில் மீனவர்களுக்கு தேவையான தகவல்கள் உள்ளூர் மொழியிலே வழங்கப்படும்.

ராமநாதபுரத்தில் மூக்கையூர், பூம்புகார் பகுதியில் மீன் பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலில் எல்லை தெரியாமல் கடந்து சென்று விடுகின்றனர். அப்படி சென்று கைது செய்யப்பட்ட 1,900 பேரை மீட்டுள்ளோம். காங்., அரசு மீனவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை செய்யவில்லை. மீனவர்களின் துன்பங்கள் தீர்க்கப்படவில்லை. மூன்று விஷயங்களில் பா.ஜ., அரசு கவனம் செலுத்துகிறது. 'மேம்பாடு, அனைவரின் மேம்பாடு, அனைவருடன் சேர்ந்த மேம்பாடு' என்பதே அது.

கலப்பட கூட்டணி:நாம் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம். காங்.,- தி.மு.க.,- முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு நாட்டைப்பற்றி தொலைநோக்கு பார்வை இல்லை; அது கலப்பட கூட்டணி. மோடியின் மீது வெறுப்புடன் இருக்கின்றனர். மோடியை வெறுப்பதாக நாட்டையே வெறுத்துக் கொண்டிருக்கின்றனர். 'மோடியை அகற்ற வேண்டும்' என இரவு, பகலாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நாட்டை பாதுகாக்க முடியாதவர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது. காங்., ஆட்சியில் பயங்கரவாத செயல்கள் நடந்த போது அமைதியாக இருந்தனர். காலம் மாறிவிட்டது.

ஜிகாதி பங்கரவாதிகள் தாக்கினால் அவர்களை தேடி தக்க பதிலடி கொடுப்போம். நாம் இந்திய பண்பாடுகளை மதிப்போம், பெண்களுக்கு மதிப்பளிப்போம். முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இருந்த முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டது. நமக்கு நாடுதான் முதன்மை. அவர்களுக்கு குடும்பம் தான் முக்கியம். அந்த ஒரு குடும்பத்தினர் மட்டுமே இருக்க வேண்டும் என செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் வடக்கு - தெற்கு என்ற வேற்றுமையை உருவாக்கினர். இதை காப்பதில் தே.ஜ. கூட்டணி எப்போதும் பாடுபடும். காங்.,- தி.மு.க.,- முஸ்லிம் லீக் கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது, பயங்கரவாதத்திற்கு துணை போவதற்கு சமம். இது அரசியலில் கிரிமினல்களை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அமைச்சர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர், அன்வர் ராஜா எம்.பி., அ.இ.மூ.மு.க., தலைவர் சேதுராமன், கல்வி மக்கள் வளர்ச்சிக்கழக தலைவர் தேவநாதன் யாதவ் கலந்து கொண்டனர். மோடியின் பேச்சை எச்.ராஜா மொழி பெயர்த்தார்.

கூட்டத்தை பார்த்த மோடி 'குஷி'* பத்திரிகையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மருமகள், மகன், குடும்பத்தினர் அங்கு வந்து அமர்ந்து ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் பத்திரிகையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளானதுடன், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமலும் தவித்தனர்.

* கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் தேனி - ஆண்டிபட்டி ரோட்டில் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த மக்கள் குடிநீர் வினியோகம் செய்ய கிடைக்க வலியுறுத்தி, ரோடு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

* துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், பா.ம.க., தலைவர் ஜி.கே., மணி என்பதற்கு பதில் ஜி.கே.வாசன் என தவறுதலாக கூறிவிட்டு, பின், சரியாக பேசினார். அதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பிரதமர் மோடி மேடைக்கு வந்த பின்பே வந்தாலும், மோடிக்கு வணக்கம் வைத்துவிட்டு அமர்ந்தார்.

* ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பிரதமர் மோடி உற்சாகம் அடைந்தார். அவர் பேசுகையில், ''மைதானத்தில் வெப்பமும் அதிகம். தொண்டர்களும் அதிகம். நான் ஹெலிகாப்டரில் வரும் போதே மைதானத்தில் குவிந்துள்ள தொண்டர்களையும், ரோடுகளில் வரும் தொண்டர்கள் கூட்டத்தையும் கவனித்தேன். என் மீது இத்தனை அன்பு கொண்ட உங்களுக்கு நன்றி,'' என்றார்.

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களை மோடி குறிப்பிட்ட போதெல்லாம் கூட்டத்தில் ஆரவாரம் எழுந்தது.

தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் வாழ்த்துக்கள்:* பிரதமர் மோடி பேச்சை துவங்கிய போது,'இந்த நாள் சிறப்பு மிக்க ராமநவமி நாள். நான் காசியின் எம்.பி..,யாக அதனோடு தொடர்புடைய ராமநாதபுரத்திற்கு வந்துள்ளேன். ஆயிரம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்கது ராமநாதபுரம். இது அப்துல்கலாம் மண். இங்கு வருவதில் எனக்கு பெருமை,' என்றார்.

* பேசி முடிக்கும் போது,' தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்; அட்வான்ஸ் ஈஸ்டர் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டார்.

* ராமநவமியை முன்னிட்டு மோடிக்கு வில், அம்பு பரிசை பா.ஜ., தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

* மோடியின் பேச்சில் ஓரிடத்தில் கூட ராகுல் என்ற பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக காங்., தி.மு.க., முஸ்லிம் லீக்., கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடினார்.
ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நினைவுச் சின்னம்: மோடி பேசும் போது தனது ஆட்சியில் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமிற்கு உலகத்தரத்திற்கு நினைவிடம் அமைத்ததை பெருமையாக குறிப்பிட்டார். அவர் கூறுகையில், 'தலைநகர் டில்லியில் பல இடங்களில், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நினைவிடங்கள் உள்ளன. நாட்டின் பல இடங்களில் அந்த குடும்பத்தினர் பெயரில் சாலைகள் உள்ளன. ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் ஆர்.வெங்கட்ராமன், கேரளாவின் ஆர்.கே.நாராயணன் ஆகியோர் காங்கிரஸ்காரர்கள் தான்! ஆனால், நாம் கலாமிற்கு உருவாக்கியது போன்று, யாருக்காவது காங்கிரஸ் அரசு நினைவுச் சின்னங்களை உருவாக்கியுள்ளதா' என்றார்.
கருணாநிதி ஆட்சியை கலைத்தது காங்., 'மோடி சர்வாதிகார ஆட்சி செய்கிறார்' என்று ஸ்டாலின் பேசிவருவதற்கு பதிலடியாக, நேற்று மோடி பேசுகையில், ''மாநிலங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மாநில அரசுகளை காங்கிரஸ் பல முறை கலைத்துள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை, ஏன் கருணாநிதி ஆட்சியை கூட கலைத்தது காங்கிரஸ் தானே. கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும் காங்கிரசால் முன்பு கலைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.
விளையாடும் காங்.,-கம்யூ., மோடி பேசுகையில், 'கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சபரிமலை கோயில் விவகாரத்தில் விளையாடுகின்றன. நம் நம்பிக்கையை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மோசமான சக்திகளின் இந்த முயற்சி பா.ஜ., என்ற கட்சி இருக்கும் வரை நடக்காது. நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)