வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்படுமா? தி.மு.க., திக்... திக்...!

சென்னை: தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து தேர்தல் நிறுத்தப்படலாம் என்பதால் தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். மார்ச் இறுதியில் வருமான வரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் கதிர்ஆனந்த் தன் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த தொகையை விட கூடுதலாக வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஏப்., 1ல் துரைமுருகனுக்கு நெருக்கமான தாமோதரன், பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. இதில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக வார்டு வாரியாக பெயர் குறிப்பிட்டு பண்டல், பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டிருந்த 11.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, வேலுார் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கதிர் ஆனந்த் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலுாரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை போலீஸ் வழக்கு குறித்த விபரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கையாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினார்.

வருமான வரி துறையினர் மற்றும் போலீசாரும் தனி அறிக்கை அளித்தனர். அவற்றை தொகுத்து, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று அனுப்பி வைத்தார்.


இது குறித்து, அவர் கூறுகையில், ''வேலுார் விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அளித்துள்ளோம். மேல் நடவடிக்கை குறித்து, ஆணையம் தான் முடிவு செய்யும்,'' என்றார். இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்க உள்ளது. வேலுாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது, என, தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
அமலாக்க துறைக்கு பரிந்துரை? துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் சிங்கப்பூர், இந்தோனேஷியா, துபாய், தோகா, லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அமலாக்கத் துறை விசாரணைக்கு வழக்கை பரிந்துரை செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)