ஆட்சி மாற்றம் கோரும் பிரசாரம் எடுபடுமா?

ஒரே கல்லில், நாங்கள் இரண்டு மாங்காய்களை அடிப்போம். அதாவது, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால், ஒரு மாதத்தில் அல்ல, ஒரு நொடியில், அ.தி.மு.க., அரசு அகற்றப்படும்' என, தேர்தல் பிரசார கூட்டங்களில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசி வருகிறார். காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், இதே கருத்தை முன் வைத்து, பிரசாரம் செய்கிறார். ஆட்சி மாற்றம் குறித்த, எதிர்க்கட்சி தலைவர்களின் பிரசாரத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எழுந்துள்ள கருத்துக்கள்
பூச்சி முருகன்,தலைமை நிலைய செயலர்,தி.மு.க.,

-மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடப்பதால், உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது. இடைத்தேர்தலில், தி.மு.க., 100 சதவீதம் வெற்றி பெற்றதும், சட்டசபையில், கட்சியின் பலம் அதிகரிக்கும். ஆளுங்கட்சியின் பலம் குறையும் என்பதால், தாமாகவே, அ.தி.மு.க., ஆட்சி கவிழும்.தி.மு.க., கூட்டணி, 40 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறும் போது, ராகுல் பிரதமராவதும், இடைத்தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெறும் போது, ஸ்டாலின் முதல்வராவதும் உறுதி. இப்படி தான், ஒரே கல்லில், நாங்கள் இரண்டு மாங்காய்களை அடிப்போம்.தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடராம் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 18 சட்டசபை தொகுதிகளில், சில தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்ய, சதி நடந்து வருகிறது.அ.தி.மு.க.,வின், 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கக்கோரிய வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பு, அவர்களுக்கு எதிராக வரும் பட்சத்திலும், ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும். லோக்சபா தேர்தலுக்கு பின், மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தை போல, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது, ஒட்டு மொத்த, தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.இது தான், ஆட்சி மாற்றத்திற்கான எச்சரிக்கை மணி. ஆளுங்கட்சியும், அதனுடன் கூட்டணி அமைத்த கட்சிகளும், தோல்வி பயத்தில் துவள ஆரம்பித்து விட்டன.கேபிள், 'டிவி' கட்டணம், 100 ரூபாயிலிருந்து, 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெண்கள், 'டிவி' சீரியல்களை பார்க்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த தேர்தலில், ஆண்களை விட, பெண்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாகவே இருக்கும். எனவே, தமிழகத்தின் ஆட்சி மாற்றம் குறித்து, ஸ்டாலினின் செய்யும் தீவிர பிரசாரம், தி.மு.க., கூட்டணிக்கு, நிச்சயம் கைக்கொடுக்கும்.

தமிழ்மகன் உசேன்,அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலர்,அ.தி.மு.க.,

ஸ்டாலின் கனவு பலிக்காதுஊழல் புரிந்ததற்காகவே, தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்ட வரலாறு உண்டு. 1980ல் நடந்த, லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி வெற்றி பெற்றதும், தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சி, அப்போதைய பிரதமர், இந்திராவின் கைங்கர்யத்தால் கவிழ்க்கப்பட்டது.'என்ன தவறு செய்தேன்' என்ற, ஒரே கேள்வியை கேட்டு தான், மேடைதோறும், எம்.ஜி.ஆர்., பிரசாரம் செய்தார். மீண்டும், எம்.ஜி.ஆர்., முதல்வரனார். அன்றைக்கு, மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி, எம்.ஜி.ஆர்., ஆட்சியை கருணாநிதி கலைத்தது போல, தற்போது, ஸ்டாலின், அ.தி.மு.க., அரசை கலைக்கலாம் என, கனவு காண்கிறார்; அவரது கனவு பலிக்காது. போகாத ஊருக்கு, அவர் பாதை தேடுகிறார்.நடைபெறவுள்ள, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமல்ல, நுாறாண்டு காலம் நீடிக்கும். எனவே, ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி கிடையாது. 2016ல், நடந்த சட்டசபை தேர்தலில், ஜெ., அளித்த வாக்குறுதிகளை, அவரது மறைவுக்கு பின், அப்படியே முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.பொங்கல் பரிசு பணமாக, 1.70 கோடி பேருக்கு, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தடுக்க, தி.மு.க., நீதிமன்றத்தின் உதவியை நாடியதை மக்கள் மறக்கவில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் விவசாயிகளுக்கு, 2,000 ரூபாய் வழங்குவதற்கும், தி.மு.க., முட்டுக்கட்டை விதித்தது. தேர்தலுக்காக, தற்காலிகமாக, அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல், ஆட்சிக்கு இடையூறு செய்து வரும் தி.மு.க.,வை, மக்கள் கனவிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் எனக்கருதி, ஆட்சி அகற்றப்படும் என்ற, பொய்யான தகவலை, ஸ்டாலின் கூறுகிறார்; அவரது பிரசாரம் எடுபடாது. அவரது உளறல் பேச்சுக்கு லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் முடிவு முற்றுப்புள்ளி வைக்கும்.***வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)