ஹிந்துக்களுக்கு தி.மு.க., விரோதியா?

சமீபத்தில், அரக்கோணத்தில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகையில், 'ஹிந்துக்களுக்கு, தி.மு.க., எதிரி போன்ற தோற்றத்தை, சிலர் உருவாக்கி கொண்டிருக்கின்றனர். என் மனைவி, தினமும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு நாள் கூட தவறுவதில்லை. அவரை, நானும் தடுப்பதில்லை. அது, அவரது விருப்பம். சிலர் வேண்டுமென்று, திட்டமிட்டு, ஹிந்துக்களுக்கு விரோதியாக, தி.மு.க., இருக்கிறது என, பிரசாரம் செய்கின்றனர்' என, கூறியுள்ளார். ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இதோ...
நரம்பு இல்லாத நாக்கு
ஒரு தலைவர் என்பவர், தன் செயல், சிந்தனை, பேச்சு வாயிலாக, அனைவரையும் மாற்றும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். ஆனால், தன் குடும்ப உறுப்பினர்களையே, தன் கொள்கை பக்கம் ஈர்க்க முடியாதவர்கள், வெட்கமின்றி, அவர்கள் கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை என சொல்வது, ஒரு தலைவருக்கு அழகல்ல. 'நான், ஒரு ஹிந்து; என் பிள்ளைகள் ஹிந்து' என, ஸ்டாலின் சொல்வாரா?

அவரது தந்தை கருணாநிதி, ஹிந்துவுக்கு பொருள் திருடன் என்றார். சேது சமுத்திர திட்டம் விவகாரத்தில், 'ராமர், எந்த கல்லுாரியில் படித்தார்' என, தேவையில்லாமல், கருணாநிதி விமர்சித்ததையும், மக்கள் மறந்து விடவில்லை. தற்போது, ஓட்டு வங்கிக்காக, 'ஹிந்துக்களின் பாதுகாவலர்' என, ஸ்டாலின் பேசி, பசுந்தோல் போர்த்திய புலியாக மாறியுள்ளார்.

'சாமி கும்பிடுபவர்களின் ஓட்டுகள், எங்களுக்கு தேவையில்லை' என, அப்பட்டமாக, சொன்னவர் ஸ்டாலின். தற்போது, சாமி கும்பிடுபவர்களின் ஓட்டுகள், தங்கள் கட்சிக்கு வேண்டும் என்பதற்காக, 'ஆண்டவனுக்கும், ஆண்டவனை வணங்கக் கூடியவர்களுக்கும், நாங்கள் எதிராக இருந்தது இல்லை' என்கிறார். அவரது நாக்கு, மாற்றி மாற்றி பேசுகிறது. நரம்பு இல்லாத நாக்கு, எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதை, ஸ்டாலின் நிரூபித்து விட்டார்.

ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், ஒரு தாய் நாட்டின் மக்கள். மதத்தால், ஜாதியால், இனத்தால், நாம் மாறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. 'காணுகின்ற சகோதரனிடத்தில், அன்பு காட்டாதவர், காணாத தேவனிடத்தில், எவ்வாறு அன்பு காட்ட முடியும்?' என, விவிலியம் சொல்கிறது. 'அன்பே சிவம்' என, ஹிந்து மதம் போதிக்கிறது. மனிதநேயத்தையும், மானுட பண்பையும், இஸ்லாம் மதம் பறை சாற்றுகிறது.

ஆனால், தேர்தல் பிரசாரத்தில், ஸ்டாலினோ, தரந்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்; அவதுாறுகளை அள்ளி வீசுகிறார். தனி நபர் மீது விமர்சனம் செய்கிறார். பொய்யான தகவல்களை தொடர்ந்து சொல்லி, தி.மு.க.,வின் தனித்துவத்தை இழக்க வைத்து விட்டார்.

வைகைச்செல்வன்,

முன்னாள் அமைச்சர்,

தலைமை செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,

நாத்திகத்தை ஆதரிக்கவில்லை
தி.க., கடவுள் மறுப்பு கொள்கையை, கடைப்பிடிக்கிறது. தி.மு.க.,வில், நாத்திகம், ஆத்திகம் கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் உள்ளனர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது, அண்ணாதுரையின் வேதவாக்கு. இது தான், தி.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

ஈ.வெ.ராமசாமி, நாத்திகவாதி. அவரது சீடரான கருணாநிதியும், தன் வாழ்நாள் முழுவதும், பழுத்த நாத்திகவாதியாகவே வாழ்ந்தார். தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், சபரிமலை, பழனி முருகன் கோவில்களுக்கு மாலை அணிந்து, அதற்கான உடைகளையும் உடுத்தி வந்து, கருணாநிதி முன் நிற்பார். அவர்களை, 'கோவிலுக்கு செல்லக் கூடாது' என, கருணாநிதி ஒரு போதும் சொன்னது இல்லை.

தி.மு.க., தொண்டர்களில் பலர், காலை, மாலை நேரங்களில், கோவில்களுக்கு சென்று, சாமி கும்பிடுகின்றனர். சாமி கும்பிடுவது, அவரவரின் தனிப்பட்ட உரிமை; தனி மனித சுதந்திரம். அதில், தி.மு.க., தலையிடாது.கருணாநிதியை போலவே, ஸ்டாலினும், யாரையும் கோவிலுக்கு செல்லக் கூடாது என, சொன்னதில்லை. அவர் நாத்திகத்தையும் ஆதரிக்கவில்லை; ஆன்மிகத்தையும் ஆதரிக்கவில்லை.

அனைத்து மதத்தினருக்கும், ஸ்டாலின் பாதுகாவலராக இருக்கிறார். எனவே, ஸ்டாலின் பேச்சை, நாங்கள் முழு மனதோடு ஆதரிக்கிறோம். தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடந்த, முதல் பொதுக்குழு கூட்டத்தில், 'எந்த மதத்தினருக்கும், தி.மு.க., எதிரானது அல்ல' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆன்மிகவாதியான புட்டபர்த்தி சாய்பாபா, ஒரு கட்டத்தில், கருணாநிதியின் கோபாலபுரம் வீடு தேடி வந்து சந்தித்தார். அப்போது, 'கருணாநிதியை, இரண்டாம் ராஜராஜ சோழனாக பார்க்கிறேன்' என, சாய்பாபா குறிப்பிட்டார்.நாங்கள், பிரசாரத்திற்கு செல்லும் போது, அனைத்து மதத்தினரையும் சந்திக்கிறாம்.

ஹிந்து கோவில்களுக்கு சென்று, சாமி கும்பிடுகிறோம். தர்கா, சர்ச்சுக்கு சென்றும் பிரார்த்தனை செய்கிறோம். எனவே, நாங்கள், மதம், ஜாதி சார்ந்த அரசியல் நடத்தவில்லை. ஓட்டு வங்கிக்காக, தி.மு.க., மீது வீண் பழி சுமத்துகிறவர்களை, மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.

ஜெ.அன்பழகன்,எம்.எல்.ஏ.,

சென்னை மேற்கு மாவட்ட செயலர், தி.மு.க.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)