நமக்கு மோடி என்ற வீரன் உள்ளார் அது போதும்: ராஜ்நாத்சிங் பெருமிதம்

மதுரை: ''நாம் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. நமக்கு மோடி என்ற வீரன் உள்ளார். அது நமக்கு போதும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.

மதுரை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து பா.ஜ., சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத வித்தியாசமான தேர்தலை நாம் எதிர் கொண்டுள்ளோம். இந்தியாவை 55 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் தமிழ்நாட்டில் துரத்தி அடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பின்வாசல் வழியாக ஆட்சி செய்து வருகின்றனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மீண்டும் கருணாநிதி என மூன்று முறை ஆட்சிகளை கவிழ்த்தது காங்., ஆனால், அக்கட்சியுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது எதனால் என தெரியவில்லை.

மத்தியில் காங்., ஆட்சி அமையும் என எதிர்பார்க்கும் கட்சிகளுக்கு சம்மட்டி அடி காத்திருக்கிறது. இந்தமுறை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. திருவள்ளுவரின் திருக்குறள் அனைவரையும் ஈர்க்கிறது. அது கலாசாரம், பாரம்பரியம் என அத்தனை பழமையையும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இந்தியாவை ஆங்கிலேய அரசு சீரழித்தது. ஆங்கிலேயர் போல் காங்., இன்றளவும் இந்தியாவை சீரழிக்கிறது. காங்., ஒரு மூழ்கும் கப்பல். மோடி தலைமையிலான ஐந்தாண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

'டாப் 10' நாடுகளில் காங்., ஆட்சியில் இந்தியா 9 வது இடத்திலும், மோடி ஆட்சியில் 6 வது இடத்தில் முன்னேறி உள்ளது. தற்போது 5 வது இடத்தில் உள்ளது. 2020ல் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3 வது இடத்தை பிடிக்கும். பண வீக்கம் குறைக்கப்பட்டுள்ளது. 2006 - 14ம் ஆண்டில் காங்., அரசு 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டித்தந்தது. மோடி அரசு 1 கோடியே 30 லட்சம் வீடுகளை கட்டித்தந்துள்ளது.

1947 - 2014 வரை 42 சதவீதம் கழிப்பறைகளை மட்டுமே கட்டினர். தற்போது 98 சதவீதம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2022 க்குள் அனைவருக்கும் வீடுகள், அனைவருக்கும் சமையல் காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார கொள்கை மூலம் இடைத்தரகர்களிடம் செல்லவிருந்த ஒரு லட்சத்து 10 கோடி ரூபாய் மக்கள் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 10 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

புல்வாமா சம்பவத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு நம் வீரர்கள் ஆளாகினர். 15 நாட்களில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது. 1971 ல் பிரதமராக இருந்த இந்திரா பாக்., மீது போர் தொடுத்தார். அதை பார்லிமென்டில் வாஜ்பாய் மனதார பாராட்டினார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாமை சூறையாடிய மோடியை காங்., பாராட்டவில்லை. வாஜ்பாயிடம் இருந்த பெருந்தன்மை இவர்களுக்கு இல்லை. பாக்., போர் விமானத்தை வீழ்த்திய அபிநந்தன் செயலுக்கு நாடே தலை வணங்குகிறது.


விண்வெளி ஓடத்தை அழிக்கும் தொழில்நுட்பம் சீனா, ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2014 ல் நம் விஞ்ஞானிகள், எதிரி நாட்டின் செயற்கை கோள்களை அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் நமக்கு அவசியம். அதை உருவாக்க அனுமதி தாருங்கள், என கேட்டனர். சீனா, ரஷ்யா, அமெரிக்கா கோபம் அடையும். எனவே, வேண்டாம் என மறுத்து விட்டார். ஆனால் மோடி விஞ்ஞானிகளுக்கு முழு சுதந்தரம் கொடுத்ததால் ஏவுகணை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. எதிரிகளின் செயற்கை கோள்களை 3 நிமிடங்களில் அழிக்கும் திறன் பெற்றுள்ளோம்.

மதுரைக்கு 'எய்ம்ஸ்' மருத்துவமனையை மோடி அர்ப்பணித்தார். உ.பி.,யை அடுத்து தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் உருவாக்கப்படுகிறது. வளர்ச்சி திட்டங்களில் வடக்கு, தெற்கு என வேறுபாடு பார்க்கவில்லை. சர்வதேச விமான நிலையம், கைத்தறி தொழில் மேம்பாடு அடைய பாடுபடுவோம். இந்தியா யார் மீதும் துப்பாக்கியை பிரயோகிக்காது. ஆனால், இந்தியாவின் மீது எதிரிகளின் ஒரு துப்பாக்கி குண்டு விழுந்தாலும், இங்கிருந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் எதிரிகள் மீது பாய்ந்து துவம்சம் செய்து விடும். நாம் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. நம்மிடம் மோடி என்ற வீரன் உள்ளார். அது நமக்குப்போதும், என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)