பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்'

சென்னை: 'பாரதிய ஜனதா, 320 தொகுதிகளில் வெற்றி பெறும்; மீண்டும் மோடிதான் பிரதமர் ' என, அந்த கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும், கேமராவை பார்த்து பேட்டி அளிக்கின்றனர். கேமரா அங்கிருந்து அகன்றதும், அவர்கள் முகத்தில் இருள் படர்கிறது. காரணம், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது.


பா.ஜ.,வின் ஆணிவேரான,ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஊரில் செயல்படும் 'நாக்பூர் டுடே - வெப்சைட்' சமீபத்தில், கருத்து கணிப்பை வெளியிட்டது. ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்களும், பா.ஜ., தொண்டர்களும் எடுத்த நாடு தழுவிய சர்வேயின் பிரதி ஒன்று தனக்கு கிடைத்திருப்பதாக கூறி, அதில் உள்ள தகவல்களை வெளியிட்டது. பா.ஜ., 'மெஜாரிட்டி' இடங்களை பிடிக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்த அந்த சர்வே, தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட, பா.ஜ., ஜெயிக்காது என கணித்துள்ளது. 'நாக்பூர் டுடே' வெளியிட்ட செய்தி தவறானது என்றால், ஆர்.எஸ்.எஸ்., அல்லது பா.ஜ., தரப்பில் இதற்குள் மறுப்பும், வழக்கும் வந்திருக்கும். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எனவே, செய்தி உண்மை தான் என, புரிந்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் துவண்டு போயிருக்கின்றனர்.


அமித் ஷாவும், மோடியும் இதற்காக கவலைப்படவில்லை. முதல் கட்ட தேர்தலுக்கே இன்னும், சில நாட்கள் அவகாசம் இருப்பதால், கள நிலவரத்தை சாதகமாக மாற்றி விடலாம் என நம்புகின்றனர். உடனே தலையிட்டு, 'ரிப்பேர்' வேலைகளை தொடங்க, மாநில வாரியாக முக்கிய தலைவர்களுக்கு, 'அசைன்மென்ட்' கொடுத்துள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, பா.ஜ., பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தது ரஜினிக்காகத் தான். ஊழல் கட்சிகளோடு உறவு வைப்பதைவிட, அதிகார கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ரஜினியை அரவணைத்து களம் காண்பது, ஓட்டுகளை அள்ள உறுதியான வழி என அக்கட்சி கணக்கு போட்டிருந்தது.


ஆனால், ரஜினி அந்த வலையில் சிக்கவில்லை. 'சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்குவேன். அந்த கட்சி, தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் போட்டியிடும்' என, அறிவித்து விட்டார். தனது ரசிகர்களை ஒவ்வொரு கட்சியும் இழுக்க முயன்றதை கவனித்தவர், 'லோக்சபா தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு இல்லை' என்றும் அறிவித்து விட்டார். சரி, அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மோடியும் விட்டுவிட்டார். எதிர் பக்கம் போகாதவரை பிரச்னை இல்லை என அமித்ஷாவும் அமைதியாகி விட்டார். இந்த நிலையில் தான், கள நிலவரம் சரியில்லை என்ற கலவரமான செய்தி வந்து அமைதியை கெடுத்தது. ரஜினியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரஜினி, நெருக்கடி முற்றுவதால் எரிச்சல் அடைந்திருக்கிறார். 'என்னங்க, உங்க ஆளுங்க இப்படி, 'பிரஷர்' குடுக்கறாங்க... நான் என்ன பண்றது?' என, தன்னை அவ்வப்போது சந்திக்கும், பொருளாதார எழுத்தாளரை கேட்டிருக்கிறார். அவரும் மனம் திறந்து பதில் சொன்னாராம். 'பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டும். மோடி அதற்கு சம்மதிக்காமல் ஒதுங்கிவிடுவார். பிறகு, உங்கள் நண்பர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ்., பின்புலத்தோடு பிரதமராவார். அப்போது இணைந்து செயல்படுவது குறித்து நீங்கள் யோசிக்கலாம். அதுவரை பொறுமை காப்பது நல்லது' என, கூறியிருக்கிறார்.அந்த ஆலோசனை சரியாக பட்டதோ என்னவோ, அதன் பின் ரஜினி எவரையும் சந்திக்க மறுத்து வருகிறார். மொபைல் போனை, 'ஆப்' செய்து விட்டார். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக, மும்பைக்கு ரஜினி செல்ல இருக்கிறார். ஓட்டுப்பதிவு நாளில் மட்டும், சென்னைக்கு வருவார் என்றும், அதன்பின், இமயமலை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், ரஜினி தரப்பில் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் படப்பிடிப்பை துவங்குவதே, பா.ஜ.,வின் நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக தான் என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள்!

நீங்க சி.எம்., நான் பி.எம்.,இடையில் நடந்த, ஒரு சந்திப்பு, பா.ஜ., தலைமைக்கு ரஜினி குறித்த நம்பிக்கையை அளித்தது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, சில வாரங்களுக்கு முன் சந்தித்தார் ரஜினி. இருவரும், மராத்தியில் நீண்ட நேரம் உரையாடினர். பேச்சு, நதிநீர் இணைப்பு பக்கம் திரும்பியது. நதிகளை இணைக்க தான் எடுத்துவரும் முயற்சிகளை கட்கரி விவரித்தார். ஆர்வத்துடன் கேட்டுக் கொண்ட ரஜினி, 'கங்கை -- காவிரி இணைப்பு உண்மையில் சாத்தியமா?' என்று விசாரித்தார். கட்கரி சிரித்துக் கொண்டே, 'நீங்கள் தமிழ்நாடு, 'சீயெம்'; நான், 'பீயெம்' என்றால், நொடியில் முடிவு எடுத்து வேலை தொடங்கலாம்' என்றாராம். தமிழகம் திரும்பிய ரஜினி, 'நதி நீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்கு, லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுங்கள்' என்று கூறியதன் பின்னணி இதுதான்.மோடி, கட்கரி உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்களுடன் உள்ள நட்பை அடிப்படையாக்கி ரஜினிக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளது அக்கட்சி.

-விவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)