சினிமா பிரபலங்களின் சார்பு நிலை சரியா?

'மலையாள திரைப்பட இயக்குனர், ஆசிக் அபு, தமிழ் திரைப்பட இயக்குனர், வெற்றிமாறன் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்ட சினிமா இயக்குனர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள், இணையதளம் ஒன்றை துவக்கி, அதன் வாயிலாகவும், பிரசாரம் செய்து வருகின்றனர். திரைப்பட கலைஞர்கள் பொதுவானவர்கள்; அவர்கள் தற்போது, ஒரு சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள்:வரவேற்கத்தக்க செயல்


பா.ஜ., ஆட்சியில், திரையுலகம் சுபிட்சமாக இல்லை. ஏழு ஆண்டுகளாக, தமிழக அரசு, கலைமாமணி விருதுகளை வழங்கவில்லை. சட்டசபையில் நான் குரல் கொடுத்த பின், விருது அறிவிப்பு வந்தது; ஆனால், இன்னும் வழங்கப்படவில்லை.


பிரதமர் மோடி, சினிமாக்காரரை போல, தன்னை அழகுப்படுத்தி கொள்கிறார்; விலை உயர்ந்த, 'கோட்' அணிகிறார்; அழகான தலைப் பாகைகளை, தலையில் மாட்டி அழகு பார்க்கிறார். ஆனால், திரையுலகிற்கு, மத்திய அரசின் மானிய திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன.நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல, கலை, பண்பாடு, மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சியும் முக்கியம்.


காங்கிரஸ் ஆட்சியில், டில்லியில் நடந்த சுதந்திர தினவிழா, குடியரசு தின விழாக்களில், தமிழக நாட்டுப்புற கலைஞர்கள், தங்கள் திறமைகளை காட்டி, முதல் பரிசை பெற்று வந்தனர். ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்தபோது, கரகாட்டம் ஆடும் கலைஞரின் தலையில் உள்ள செம்பை, தன் தலையில் வைத்து ரசிக்கும் அளவிற்கு, கலை உணர்வு, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் வெளிப்படுத்தப்பட்டது.


தற்போது, கலை தொடர்பான பரிசுகளை கலைஞர்கள் பெற முடியாமல் உள்ளனர்.முக்கியமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.,விற்கு எதிராக யாராவது கருத்து சொன்னால், அவர்கள் கொல்லப்படுகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப் படையாக கண்டனம் தெரிவித்தார்.


நல்ல தமிழ் பட தலைப்புகளுக்கு வரி விலக்கு, திரைப்பட தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி, திரையுலகத்திற்கு தி.மு.க., அரசு அரணாக இருந்தது. எனவே, திரைப்பட இயக்குனர்கள் ஒருங்கிணைந்து, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, ஓட்டு அளிக்க கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.


வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.,மாநில செயலர்,கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை,
தி.மு.க.,100 பேர் தீமானிக்கும் விஷயமல்ல


திரைப்பட கலைஞர்கள், தங்கள் கருத்துக்களை, தனி மனிதராக சொல்ல உரிமை உள்ளது. ஆனால், கூட்டாக சேர்ந்து சொல்வதென்றால், ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து விட்டு, அந்த கருத்தை கூறியிருக்கலாம்.


திரைப்பட இயக்குனர்கள் என்ற, பொதுவான அந்தஸ்தை வைத்து, ஒரு சார்பு நிலையுடன் முடிவு அறிவித்தை ஏற்க முடியாது. கூட்டறிக்கை வெளியிட்டதும் தவறு.நாட்டின் பிரதமர் யார் என, 100 இயக்குனர்கள் தீர்மானிக்கிற விஷயமல்ல. பா.ஜ., தேசிய அளவில் பெரிய கட்சி. லோக்சபா தேர்தல் முடிவு என்பது, தமிழகத்தின் வெற்றியை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. மற்ற மாநிலங்களும் இணைந்து தான், தீர்மானிக்க உள்ளன.


மத்தியில், பா.ஜ., அரசும், மாநிலத்தில், அ.தி.மு.க., அரசும் சிறப்பாக செயல்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணம், அ.தி.மு.க., ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அனுமதி பெற, ஐந்து, ஆறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. தற்போது, தலைமை செயலகத்தில், ஒரே இடத்தில், எளிதாக அனுமதி பெற முடிகிறது.


முதல்வர், இ.பி.எஸ்.,சை, மக்கள் எந்த நேரத்திலும் சந்தித்து, பிரச்னைகளை சொல்ல முடியும். திரைக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வேறு எந்த ஒரு மாநிலத்திலும் அறிவிக்காத வகையில், கலைமாமணி விருதுகளை தமிழக அரசு, வாரி, வாரி வழங்கியிருக்கிறது.


தேர்தல் முடிந்த பின், அரசு சார்பில் பிரமாண்ட விழா நடத்தி, விருதுகள் வழங்கப்படும். அடித்தட்டு மக்களின் கஷ்டங்களை உணர்ந்த பிரதமராக இருந்ததால் தான், கழிப்பறை இல்லாத வீடுகள் நாட்டில் இல்லை என்ற நிலை, உருவாகி வருகிறது. இது போன்ற நல்ல திடட்ங்களை செயல்படுத்தி வரும், பிரதமர் மோடியின் அரசு, மீண்டும் வேண்டும் என்பது தான் திரைக்கலைஞர்களின் விருப்பம்.


மனோபாலா,திரைப்பட நடிகர், இயக்குனர்,நட்சத்திர பேச்சாளர், அ.தி.மு.க.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)