இரு தொகுதிகளில் ராகுல் போட்டி ஏன்?

உத்தரபிரதேச மாநிலம், அமேதியில் போட்டியிடும், காங்கிரஸ் தலைவர், ராகுல், கேரள மாநிலம், வயநாட்டிலும் போட்டியிடுவார் என, அறிக்கப்பட்டுள்ளது. 'தொகுதிக்கு என்ன செய்தீர்கள்' என, அமேதி தொகுதி மக்கள் கேள்வி கேட்பர் என்பதாலும், தோல்வி பயத்தாலும், ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார் என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. ராகுலின் முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள்:


பலத்தை வெளிப்படுத்தும்


இந்தியா முழுவதும், தனக்கு செல்வாக்கு உண்டு என்பதை நிரூபிக்கத்தான், வடக்கில் ஒரு தொகுதியிலும், தெற்கில் ஒரு தொகுதியிலும், ராகுல் போட்டியிடுகிறார். காங்., தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின், மாநில அளவிலும், கட்சி பலம் அடைந்து வருகிறது.


சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் - ம.பி., - சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தல்களிலும், காங்., அமோக வெற்றி பெற்று, அங்கு ஆட்சி அமைத்துள்ளது.ராகுல் மீது நாட்டு மக்களுக்கு,முழு நம்பிக்கை பிறந்து உள்ளது. ராகுலின் தந்தை ராஜிவ், பாட்டி இந்திரா, தாயார் சோனியா போன்றவர்கள் அடைந்த வெற்றி, ராகுலையும் தொடரும்.


தேசிய ஒருமைப்பாடு, மதசார்பின்மை, அஹிம்சை மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில், ராகுல் மிகுந்த அக்கறையுடன் பாடுப்பட்டு வருகிறார்.நாட்டு மக்கள் அனைவரையும், ஒன்றாக கருதுகிறார் என்பதை பறைசாற்றும் வகையில், அவர், இரண்டு தொகுதிகளில்
போட்டியிடுகிறார்.


இந்திய அரசியலில் மிகப் பெரிய தலைவர்கள், பிரதமர் வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளர்கள் எல்லாம், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதில் தவறு இல்லை.ஏற்கனவே, சோனியா, அத்வானி, மோடி போன்றவர்கள், இரண்டு தொகுதிகளில் போட்டி யிட்ட வரலாறு உண்டு. ராகுல், வயநாட்டில் போட்டியிடுவதன் வாயிலாக, கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் வெற்றிக்கு சாதகமாக அமையும். இரண்டு தொகுதிகளில் ராகுல் போட்டியிடும் முடிவு, அவரது முழு பலத்தை வெளிப்படுத்தவே தவிர, தோல்வி பயத்தினால் அல்ல.


குமரிஅனந்தன்,

முன்னாள் தலைவர்,தமிழக காங்கிரஸ்.


தோல்வி பயம் காரணம்


லோக்சபா தேர்தலில்,எங்கள் கூட்டணிக்கு, 100 சதவீதம் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் சாதனைகளின் அலை வீசுகிறது. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம், மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. தேர்தலுக்கு முன், பா.ஜ., வெற்றி செய்தி, ராகுலுக்கு எட்டி யுள்ளது. தோல்வி பயத்தில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.


தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை, ராகுலுக்கு இருந்திருக்குமானால், அவர் கண்டிப்பாக, ஒரு தொகுதியில்தான் போட்டியிட்டு இருப்பார்; இரண்டு தொகுதிகளில், போட்டியிட மாட்டார். பா.ஜ.,வை நேருக்கு நேராக, எதிர்கொள்ள ராகுலுக்கு துணிச்சல் இல்லை. காங்.,
கூட்டணி ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் போட்டியிட, அவர் விரும்பவில்லை; அப்படியானால், அந்த மாநிலத்திலும், பா.ஜ., வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.


'தமிழகத்தில், ராகுல் போட்டியிட வேண்டும்' என, காங்., கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அவருக்காக, விருப்ப மனுவும் கொடுத்தனர். ஆனால், தமிழகத்திலும் எங்கள் கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது, ராகுலுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான், தமிழகத்திலும், அவர் போட்டியிடவில்லை.


இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிற முடிவு, ராகுல் பலவீனத்தை தான் காட்டுகிறது. கேரள மாநிலத்தில், கம்யூனிஸ்டை எதிர்க்க முடிவு செய்துள்ளார். ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதன் வாயிலாக, கூட்டணியில், குழப்பத்தை உருவாக்கும்.தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரசுடன், கம்யூனிஸ்டுகள் இணைந்து செயல்படுவதும் தடுக்கப்பட்டுவிடும். மேலும், கேரள மாநிலத்தில் உள்ள, 20 லோக்சபா தொகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டு, காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். எனவே, கேரளா மாநிலத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றி உறுதி

.
தமிழிசை சவுந்தரராஜன்,


தலைவர், தமிழக பா.ஜ.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)