/ செய்திகள் / காத்திருந்து காத்திருந்து ஏமாந்த பா.ஜ.,!

காத்திருந்து காத்திருந்து ஏமாந்த பா.ஜ.,!

- நமது நிருபர் - வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில், கடைசி நேரம் வரை இழுத்தடிப்பதற்கு பெயர் போன கட்சி, காங்கிரஸ். கடந்த ஆண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், முதல்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், அக்டோபர் 17. வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்ட நாள் அக்டோபர் 16! தமிழகத்திலும், வேட்பு மனு தாக்கலுக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பல சர்ச்சைகளுக்கு பின், நேற்று தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. வழக்கமாக கட்டுக்கோப்பான கட்சியாக தோற்றமளித்து, இதிலெல்லாம் முந்திக்கொள்ளும் பா.ஜ.,வும், காங்கிரஸை போல் நேற்று தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பா.ஜ., தொகுதி தேர்வில் தடுமாற்றத்திற்கு பின், வேட்பாளர் பட்டியல் விவகாரமும் சுவாரசியமான விவாதப் பொருளாகி உள்ளது. இந்த தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., 16 தொகுதிகளில், தேர்தலை இதுவரை சந்திக்காதவர்களை நிறுத்தி இருக்கிறது. தேர்தலை சந்தித்து தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த பாலகணபதி, முருகன், தமிழிசை, முருகானந்தம், ராம சீனிவாசன், போஜராஜன், ராதாகிருஷ்ணன் என ஏழு பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. வானதி, நாகேந்திரன், காந்தி, விஜயதாரணி ஆகிய நால்வர் மட்டுமே தேர்தலில் பா.ஜ., சார்பில் வெற்றி கண்டவர்கள். வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் தாமதமானதால், அதிரடியான பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பா.ஜ., தொண்டர்களும் அனுதாபிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். பட்டியல் தாமதமானதற்கு, அ.தி.மு.க.,வின் பாராமுகமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தொகுதி எண்ணிக்கையிலும் தேர்விலும் கடும் அதிருப்தியில் இருந்த கட்சி மேலிடம், 'வேட்பாளர்களையாவது சரியாக தேர்வு செய்யுங்கள்' என்று உத்தரவு போட்டது. தொகுதி பங்கீட்டிற்கு மார்ச் 23 - 24ல் சென்னையில் இருந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பீயூஷ் கோயல், வேட்பாளர் தேர்வில் அப்போது தலையிடவில்லை. அ.தி.மு.க., தலைமையிடம் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம் என்பது பற்றி மட்டுமே, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் 41 தொகுதிகள் அடங்கிய பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதில், இடம்பெற்றுள்ள தொகுதிகளில் இருந்து 27ஐ கேட்டுப் பெறுமாறு சொல்லிவிட்டு டில்லி கிளம்பிச் சென்றார். தொகுதிகளை பா.ஜ.,வினர் கேட்டுப் பெறுவதற்கு முன்பாக, 25ம் தேதியே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திடுமென ஒருதலைபட்சமாக தொகுதிகளை அறிவித்து விட்டார். பழனிசாமி அறிவித்த பட்டியலுக்கும் பா.ஜ., எதிர்பார்த்த பட்டியலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது போல் இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பீயூஷ் கோயல், பழனிசாமியிடம் பேசி தொகுதிகளை மாற்றச் சொல்லவும் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார். ஆனால், பா.ஜ.,வினரை பே ச்சுக்கு வரச் சொல்லிவிட்டு, பழனிசாமி பிரசாரத்திற்கு வெளியூர் கிளம்பி விட்டார். அன்றிலிருந்து, பழனிசாமியை தொடர்புகொள்ள முயற்சித்தும், இதுபற்றி பேச முன்வரவில்லை. அவருடைய அழைப்பிற்கு காத்திருந்து பயனில்லை என்று, வேட்பாளர் பட்டியலையாவது இறுதி செய்வோம் என, பீயூஷ் கோயல், மார்ச் 31 அன்று மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது தான், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதிலும், வெட்டு குத்து அளவுக்கு மோதல் இருப்பதை உணர்ந்தார். தேர்வு ஆலோசனைக்காக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அவசர அவசரமாக, புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டரில் வரவழைக்கப்பட்டார். அப்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பெயர்கள் உள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலை எடுத்துக்கொண்டு, மேலிட ஒப்புதலுக்காக, பீயூஷ் கோயல், அன்றே டில்லிக்கு திரும்பிச் சென்றார். அ.தி.மு.க.,வின் அணுகுமுறையை கேட்ட அமித் ஷா அதிர்ச்சி அடைந்து, பழனிசாமியிடம், 'நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை. எதுவுமே எங்களுக்கு சாதகமாக செய்யவில்லை. இனி மற்றவற்றை தேர்தலுக்கு பின் பார்த்துக்கொள்ளலாம்' என பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலவரத்தை அறிந்த பிரதமரும் கடுப்பாகிவிட்டார். சென்னைக்கு வரும்போது, பிரசாரம் செய்யலாம் என்ற திட்டத்தில் இருந்த பிரதமர்,'வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யாமல் இருந்தால் எப்படி. தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை. வேட்பாளர்களை முடிவு செய்து, அவர்களை வேலையை பார்க்கச் சொல்லுங்கள்' என கூறிவிட்டார். தலைநகர் சென்னையில், மயிலாப்பூர் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கும் பா.ஜ.,வுக்கு சூழல் சாதகமாக இல்லை என மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதால், அங்கு பிரசாரம் செய்ய வேண்டாம் என, பிரதமர் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க., தரப்பு கண்டுகொள்ளவில்லை என்றாலும், தமிழக பா.ஜ.,வினர் சுதாரித்து, இன்னும் வேகமாக அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்பது பா.ஜ., மேலிடத்தின் கருத்து. தமிழக பா.ஜ.,வில் உள்ள அதிகார மையங்களுக்கு இடையேயான போட்டியாலும், வேட்பாளர்களை முடிவு செய்வதில் கடும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில், தன் பெயர் அடிபடாமல் இருக்கவே அண்ணாமலை முற்றிலும் ஒதுங்கி, கேரளா மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு தமிழகம் வந்த பிரதமர், இன்று மதியம் வரை சென்னையில் தங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அவர், தேர்தலுக்கு பின், அதிரடியாக சில மாற்றங்களை செய்ய முடிவெடுப்பார் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Nagarajan S
ஏப் 04, 2026 19:27

2024 நாடாளுமன்ற தேர்தலில், பிஜேபியுடன் சேராத அதிமுக இப்போது சேர்ந்து, அமித்ஷா வைக்கூட மதிக்காமல், பியூஸ் கோயலையும், பிஜேபி தலைமையையும் கேட்காமல், எடப்பாடி தானாகவே 27 தொகுதிகளை பிஜேபிக்கு ஒதுக்கியுள்ளார். ஆனால் இது முன்னாள் அதிமுகவின் தற்போதைய பிஜேபியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியாமலா நடந்திருக்கும்? அண்ணாமலையை ஓரங்கட்டிவிட்டு பிஜெபியினரின் உள்குத்து வலையாக இருக்கும். நடப்பதெல்லாம் பார்த்தல் அதிமுக பிஜேபி, பாமக கூட்டணி ஆட்சிக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது? தமிழக மக்கள் பாவம் மீண்டும் திமுக விடம் மேலும் 5 ஆண்டுகளுக்கு மாட்டிக்கொள்ளப்போகிறார்களோ ?


vivek
ஏப் 04, 2026 15:59

எல்லாவற்றுக்கும் மூலகாரணம் பாதயாத்திரங்கிற பெயரில் மெகா வசூல் வேட்டை நடத்தியது. இடைத்தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமகவை காண்டாக்கி மேலிடத்தை வெறுப்பேத்தியது. தலைமைப் பண்பு இல்லாத செயல்கள். மேலிடம் இவரை கழட்டி விட்டது.


முருகன்
ஏப் 04, 2026 14:41

தேர்தலுக்கு பிறகு மாற்றம் நிச்சயமாக இருக்கும்


Madras Madra
ஏப் 04, 2026 12:03

தேவை இல்லாமல் செங்கோட்டையனை ஷா சந்தித்ததற்கு பழி வாங்கி விட்டார் EPS தமிழகத்தை எப்பதான் பாஜக புரிந்து கொள்ள போகிறது ?


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2026 10:37

பழனிசாமியை இதற்காக தான் கார்ப் குடும்பத்தின் பி டீம் என்று கூறினேன் , தெளிவாக இருப்பதாக நினைத்து சொதப்பி கொண்டுள்ளார் என்று மாத்திரம் உணருகிறேன் , மீண்டும் அந்த சர்வாதிகாரி கையில் தமிழகத்தை தூக்கி கொடுப்பதில் ஏற்கனவே ஒரு hint கொடுத்துள்ளார் பழனிசாமி , அது ஜூனியர் பெண் பித்தனை முதல்வர் ஆக்குவது என்று பேசியதை குறிப்பிடுகிறேன்


venugopal s
ஏப் 04, 2026 10:24

இதனால் தான் தேசியக் கட்சிகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இங்கு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட டெல்லியில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஒரு வட இந்திய தலைவர் முடிவு செய்வார் என்றால் அப்படிப்பட்ட கட்சியே நமக்கு தேவையில்லை!


Bharath Sundar
ஏப் 04, 2026 08:58

வானதி ,தமிழிசை, நயினார் , முருகன் இவர்கள் சுயநலமே காரணம் மீண்டும் அண்ணாமலை தலைமை ஏற்காவிட்டால் பாஜக வளராது. .


vivek
ஏப் 04, 2026 08:42

கைப்புண்ணுக்கு எதுக்கப்பா உளவுத்துறை? கட்ச் வளந்திடிச்சின்னு கத்த பேசினா கட்சி வளந்திடுமா? தாமரை சின்னத்தில் நின்ற எல்லா தொகுதியிலும் டெப்பாசிட் போகப் போறது 100% சர்வ நிச்சயம்.


vivek
ஏப் 04, 2026 08:36

கட்சியை பெருசா வளர்த்தூட்டேன்னு அண்ணாமலை சொன்னது பெரிய உருட்டு, ஊரிலே இருந்த ரவுடிகளையெல்லாம் மிரட்டி நல்ல வசூல் பண்ணி பேருக்கு பதவியைக் கொடுத்தார் என்று அஅனைவருக்கும் தெரியும். பூத் லெவல் வரைக்கும் ஆள் போட்டாச்சின்னு சொன்னது முழுப் பொய்யின்னு கட்சி மேலிடத்துக்கு தெரிந்து கடுப்பானார்கள். போதாக்குறைக்கு பாஜக அண்டியிருக்கும் கூட்டணி கட்சியை தாறுமாறாக பேசி சென்ற தேர்தல் நேரத்தில் பாஜகவை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது. அண்ணாமலை நாலைந்து வாடஸ்அப் குரூப்பை வைத்து கொண்டு வெட்டியாக இவரை விட்டால் ஆளில்லை என்று ஒரு பிம்பத்தை வளர்த்து விடுகிறார். உண்மை நிலவரத்தை மேலிடம் தெரிந்து வைத்திருப்பதால் இவரை ஓரங்கட்டி வைத்திருக்குறார்கள் என்று டில்லி பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Bharath Sundar
ஏப் 04, 2026 08:56

ரௌடிகளை வளர்ப்பது அவர்களை , எதிர் வளைப்பின்- என்கௌண்டர் -மூலம் கொல்வது என்பது தீயமுக கொள்கை.உங்க கொள்கையை அடுத்தவருக்கு தாரை வார்க்காதீர்கள்


Savitha
ஏப் 04, 2026 09:16

எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதுக்கு , ஊர்ல உன்னை மிஞ்ச ஆள் இல்லைனும் பேசிக்கிறாங்க


VENKATASUBRAMANIAN
ஏப் 04, 2026 08:35

அதிமுகவின் ஸ்லீப்பர் செல் பாஜகவில் உள்ளது. அவர்களை களை எடுத்தாலே போதும். திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் அதிக இடங்களில் ஜெயிக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் ஜெயிக்க கூடாது. இதுதான் திட்டம். அப்போதுதான் கூட்டணி ஆட்சி என்று வராது.


arunachalam
ஏப் 04, 2026 16:16

நைனார் அதிமுகாவின் ஸ்லீப்பர் செல் தானே இது புரிய பெரிய கணக்கெல்லாம் தெரிய வேண்டாம்