/ செய்திகள் /  இன்னும் 3 நாளில் பரபரப்பு ஏற்படும் என்கிறார் பா.ம.க., ராமதாஸ்

 இன்னும் 3 நாளில் பரபரப்பு ஏற்படும் என்கிறார் பா.ம.க., ராமதாஸ்

திண்டிவனம்: “இன்னும் மூன்று நாட்களில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பா.ம.க., இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, சமூக ஊடகப் பேரவை ஆகியவற்றின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், ராமதாஸ் அளித்த பேட்டி: பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, சட்டசபை தேர்தல் பணி செய்ய உற்சாகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், கட்சியின் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. முக்கியமான காலகட்டத்தில் பா.ம.க., இருக்கிறது. கட்சியின் கிளை, ஒன்றியம், பேரூராட்சி, வட்டம் மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும், கட்சியை வளர்ப்பது குறித்தும் தினந்தோறும் ஆலோசித்து வருகிறோம். தைலாபுரம் அரசியல் பயிலரங்கில் கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகமும் தெம்பும் அளிக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்ததும், ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். அதுவரை கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். 'நாங்கள் பயணம் செய்ய வாகனம் ரெடி' என ஏற்கனவே கூறி இருந்தேன். 'அந்த வாகனத்தில் மாற்றம் இருக்குமா?' என கேட்கிறீர்கள். அரசியலில் மாற்றங்கள் வருவது இயற்கைதான். ஆனால், ஒரு முடிவு எடுத்து விட்டால், அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். அடுத்து வரும் மூன்று நாட்கள், தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பை, அனைத்து ஊடகங்களும் நிச்சயமாக பறைசாற்றும். இன்னும் மூன்று நாட்களில், பா.ம.க.,வின் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !