2026ல் அ.தி.மு.க.,வே இருக்காது ! :பா.ஜ., பொதுச்செயலர் ராம ஸ்ரீனிவாசன் நம்பிக்கை

பா.ஜ., தலைவர்களில் அழகு தமிழில் ஆழ்ந்த கருத்துக்களுடன் பேசுபவர்; மேடைகளை பயன்படுத்தி இளமை துடிப்புடன் இயக்கத்தை வலிமைப்படுத்த நினைப்பவர்; காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்; கட்சியின் டில்லி தலைவர்களுடனும் நெருக்கம் காட்டுபவர் என்றெல்லாம் அறியப்பட்டவர் பா.ஜ., பொதுச்செயலர் ராம ஸ்ரீனிவாசன். தமிழக அரசியல் யதார்த்தத்தை உணர்ந்து அ.தி.மு.க., கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பரவாயில்லை என, கட்சியின் போக்கை அறிந்து களமாடும் அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

விருதுநகரில் போட்டியிட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தீர்கள். பின்னர் திருச்சி என்றாகி, தற்போது மதுரை என, தொகுதி மாற்றத்திற்கு என்ன காரணம்? மார்க்சிஸ்ட் வென்ற இத்தொகுதியில் உங்களுக்கு என்ன செல்வாக்கு உள்ளது?



பா.ஜ., தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வெல்ல நினைப்பதால், வலிமையான வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். நான் மதுரையில் கட்சிப் பணியாற்றியுள்ளேன். எனவே, வலிமையான வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளனர். விருதுநகர் தொகுதியை தயார்படுத்தும் பொறுப்பை எனக்கு தந்திருந்தனர்.

அங்கு போட்டியிட எனக்கு விருப்பமும் இருந்தது. அதன்பின் கூட்டணியில் ராதிகாவுக்கு கொடுக்கும்போது, நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பமல்ல. அது, கட்சியினுடைய விருப்பம். இதில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.

அ.தி.மு.க., இல்லாமலே வெல்வோம் என்று பேசி வருகிறீர்கள். கருத்துக்கணிப்புகள் கூட, பா.ஜ.,வுக்கு 15 சதவீத ஓட்டுகள் தான் வரும் என்கின்றன. அதை மட்டும் வைத்து எப்படி வெல்ல முடியும்?



எம்.ஜி.ஆர்., 1977ல் ஆட்சியை பிடித்த பின், தொடர்ந்து இருமுனை போட்டியாகத் தான் உள்ளது. காங்., - கம்யூ., வைகோ, விஜயகாந்த், பா.ம.க., - த.மா.கா., என மூன்றாவதாக எழுந்த கட்சிகள், அ.தி.மு.க., - தி.மு.க.,வை சார்ந்தே மாறி மாறி நிற்பது தான் தமிழக கள எதார்த்தம். இன்று தமிழக மக்கள் மும்முனை அரசியலுக்கு மாறி உள்ளனர்.

அதனால், யாருக்கு எத்தனை சதவீதம் ஓட்டு கிடைக்கும்? யார் ஜெயிப்பர்? தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு போட்டியா? தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் போட்டியா என எல்லாருக்கும் குழப்பம் உள்ளது.

ஆனால், தேர்தல் முடிவுகள் இனி தி.மு.க.,வுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்று தெளிவாக காட்டும். இந்த மும்முனை அரசியல் இத்தேர்தலுக்கு மட்டும் தான். அடுத்த தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., என இரு முனையாகிவிடும். அ.தி.மு.க., இருக்காது. அவர்கள் எடுத்த தற்கொலை முடிவால், அக்கட்சி இல்லாமல் போய்விடும்.

கூட்டணிக்கு வராவிட்டால் அ.தி.மு.க., பெரிய விலை கொடுக்க நேரிடும் எனக் கூறினீர்கள். அந்த பெரிய விலை அமலாக்கத்துறை ரெய்டா? கட்சிகளை அமலாக்கத்துறையை வைத்து பா.ஜ., மிரட்டுகிறது என்கின்றனரே...



அ.தி.மு.க.,வின் பழனிசாமி பெரிய விலை கொடுப்பார் எனக் கூறியது நான் தான். அதை ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக ஊடகங்கள் தான் மாற்றிவிட்டன. நான் சொல்ல வந்தது, அ.தி.மு.க., வரவில்லையெனில் அது தனிமைப்படும் என்ற பொருளில் தான்.

அ.தி.மு.க., தனியாக பிரிந்தால், பல கட்சிகள் பா.ஜ.,விடம் தான் வரும் என்று அர்த்தம். தேர்தலில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டால், பழனிசாமிக்கு கட்சியில் பிடிமானமே இருக்காது என்பது தான்.

இதற்குத்தான் அப்படி கூறினேனே தவிர, யாரையும் 'கையை முறுக்குவது' என்பதில்லை. தானாக அணையப் போகும் விளக்கை நாங்கள் ஊதி அணைக்க வேண்டியதில்லை.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஓட்டுகளை இழக்கப் போகிறார் என்று சொல்கிறீர்கள். எதனால் இழப்பார்?



ஆதாரப்பூர்வமாக புள்ளிவிபரங்களை வைத்து சொல்ல தெரியாது. பெருந்திரள் எழுச்சி, எங்களுக்கான ஆதரவு, மக்களுடைய போக்கு எல்லாவற்றையும் களத்தில் பார்த்திருக்கிறோம். அதை வைத்து மதிப்பீடு செய்கிறோம்.

ஒருபுறம் அ.தி.மு.க., பலவீனப்பட்டுள்ளது, மறுபுறம் தி.மு.க., மதிப்பை இழந்துள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., மக்களின் கோபத்தை சம்பாதிக்கும். அப்போது நாங்கள், 'ஸ்வீப்' செய்துவிடுவோம்.

அ.தி.மு.க., விலகியது மகிழ்ச்சி தான் என்று சொன்னீர்கள். தமிழகத்தில் அண்ணாமலையைத் தவிர வேறு எந்த பா.ஜ., தலைவரும் அந்த நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை. நீங்கள் அண்ணாமலை அணியா?



அ.தி.மு.க., வராததால் மகிழ்ச்சி என்று அண்ணாமலை ஒருபோதும் பேசவில்லை. அடுத்த நிலையில் உள்ள சில தலைவர்கள் அப்படி கருத்து தெரிவித்தனர். அப்படி கருத்து சொல்லும் உரிமை எங்கள் கட்சிக்கு உள்ளது. மற்ற கட்சிகள் மாதிரி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த கட்சி இதுவல்ல.

கட்சி எப்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதோ, அதற்கு எதிராக நாங்கள் பேச மாட்டோம். பா.ம.க.,வுடன் கூட்டணி வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ நான் பேசும் உரிமை உள்ளது. கூட்டணி பற்றி கட்சி முடிவெடுத்து விட்டால், அதை முழுமையாக ஏற்று செயல்பட வேண்டும் என்பது தான் பா.ஜ.,காரனாக என் கட்டுப்பாடு.

கடைசி வரை நாங்கள் அ.தி.மு.க., கூட்டணியை விரும்பினோம். தமிழகத்தில் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய அளவில் நாங்கள் 400 இடங்களை பிடிப்போம். அதில் தமிழகத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தி.மு.க.,வை அடிமட்ட அளவில் தோல்வியை தழுவ வைக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க.,வை விரும்பினோம்.

மோடி பிரதமராவதற்கு அ.தி.மு.க., தேவையில்லை. ஆனால், ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற, இப்போதைய நிலையில் அ.தி.மு.க., ஆதரவு தேவை. இது, 2024ல் உள்ள நிலைமை. ஆனால், 2026ல் அந்நிலைமையும் இருக்காது. தனியாகவே நாங்கள் களம் காண்போம். அன்று அ.தி.மு.க.,வே இருக்காது.

பா.ஜ.,வை விட்டு விலகிய பின், அ.தி.மு.க., பழனிசாமி நெற்றியில் திருநீறு வைப்பதை விட்டுவிட்டாரே?



சகவாச தோஷம், கூடா நட்பு அவருக்கு இப்போது வந்துள்ளது. ஏன் திருநீறு வைக்கவில்லை என நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த தனிப்பட்ட நபரின் நம்பிக்கையில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அது பற்றி தெரிய, நீங்கள் அவரிடமே கேளுங்கள்.

ராமர் கோவில் கட்டியது தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்றனரே. அது சரியா?



ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்திய டிரஸ்டுக்கு இந்தியாவிலேயே அதிகளவு நன்கொடை கொடுத்தது தமிழகம் தான். மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திராவை விட தமிழகம் அதிகம்.

ராமர் கோவில் அங்கு வர வேண்டும் என நினைக்காமல், தமிழகத்தில் எப்படி அந்தளவு பங்களிப்பு செய்தனர்? அயோத்திக்கு செல்ல குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதில், அதிகம் பேர் பயணம் செல்ல முன்வந்த மாநிலம் தமிழகம் தான். அதனால், தமிழகத்தில் ராமர் பக்தி என்பது உச்சத்தில் இருக்கிறது.

மோடியின் சாதனை காஷ்மீர் போன்ற தேசிய விவகாரத்திலும், சர்வதேச அரங்கத்திலும் தான் உள்ளது. அது, தமிழக வாக்காளரிடம் இருந்து விலகிய விஷயங்கள் அல்லவா. அதை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா?



தமிழகம் இந்தியாவில் இல்லையா? அப்படியெனில், ஸ்டாலின் மதுரைக்கு என்ன செய்தேன் என்று சொல்லியா ஓட்டு கேட்கிறார்? ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் செய்ததை சொல்லித்தானே கேட்கிறார்? அதேமாதிரி தான் இதுவும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3,000 கி.மீ., நீள, அகலம் கொண்ட ஒரு நாட்டில், எங்கே பிரதமர் எது செய்தாலும் அது இந்தியர்களுக்கு பெருமை தான்.

தமிழகத்திற்கு அவர் என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள். 28 காசு பிரதமர் என உதயநிதி பேசுகிறார். அவரது வயது என்ன; பிரதமரின் வயது என்ன? டி.ஆர்.பாலு பார்லிமென்டில் பேசுகையில், நான் இவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என் வயது என்ன... அனுபவம் என்ன என்று தெனாவட்டாக கேட்கிறார்.

பிரதமர் மோடியும் அப்படி கேட்கலாமா? நேற்று வரை சினிமாவில் டூயட் பாடிக் கொண்டிருந்தவர், இன்று அரசியல் பேசுகிறாரே என மோடி கோவிச்சுக்கலாமா? அது நியாயமா? நாங்கள், 28 காசு தான். இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது பாக்கெட்டில் 28 காசுக்கு மேல் இருக்காது. உங்கள் பாக்கெட்டில், 30,000 கோடி ரூபாய் இருப்பதாக உங்கள் அமைச்சர் தியாகராஜனே கூறியுள்ளார்.

மேகதாது அணையை எதிர்த்து தமிழக பா.ஜ., குரல் கொடுத்தது. ஆனால், கர்நாடகா பா.ஜ., அதை ஆதரிக்கிறதே?



கர்நாடகாவில், 10 ஆண்டு பா.ஜ., ஆட்சி இருக்கும்போது, மேகதாது அணை கட்டுவோம் என்று ஏதேனும் முயற்சி எடுத்தனரா? அங்கு தேர்தல் அறிக்கையில் கூறினரா? இல்லையே. ஆனால், கடந்த தேர்தல் அறிக்கையில் கர்நாடகா காங்., மேகதாது அணை கட்டுவோம் என்றனர். அது தமிழர் நலனுக்கு உகந்ததா? அங்கு போய், அந்தக் கட்சிக்கு நம் முதல்வர் ஸ்டாலின் ஆதரவு திரட்டியுள்ளார். 10 ஆண்டு ஆட்சியில் இருந்து தமிழர் நலனுக்கு எதிராக பேசாத பா.ஜ.,வை தமிழர்களுக்கு எதிரானவர்கள் என பேசுகிறீர்கள். இவ்வளவு பொய் பேசுகிறோமே என, ஸ்டாலின் தினமும் துாங்கும்போது எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக முதல்வரும், பிரதமரும் சேர்ந்து இங்கு எத்தனை பொது மேடைகளில் பேசி உள்ளனர்? அது எல்லாமே தமிழக திட்டங் களுக்கானது தானே? தமிழகத்தில் 12 மருத்துவக் கல்லுாரிகளை பிரதமரை வைத்து முதல்வர் ஏன் திறந்து வைத்தார்? அது மத்திய அரசு நிதி திட்டம் என்பதால் தானே? சென்னையில் 32,000 கோடி ரூபாய் திட்டங்களை அர்ப்பணிக்க பிரதமர் வந்துள்ளார் என சொன்னது ஸ்டாலின் தானே?

கடந்த மாதம் துாத்துக்குடியில் 17,000 கோடி ரூபாய் ஹைட்ரோ கார்பன் திட்டம், குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணை தளம் ஆகியவற்றை அர்ப்பணித்தார். 12 மாநகராட்சிகளுக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்ததும் மோடி தானே? இன்றும் தமிழக ரேஷன் கடைகளில், 5 கிலோ அரிசி, 5 கிலோ பருப்பு இலவசமாக கொடுப்பது மத்திய அரசா, மாநில அரசா?

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத அட்டூழியங்களை ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., அரசு செய்வதாக சொல்கிறீர்கள். அப்படி என்ன நடந்துவிட்டது? கோவில்கள் திறந்துள்ளன. மக்கள் கோவிலுக்கு போய் கொண்டு தான் இருக்கின்றனர்.



தமிழகத்தில் எத்தனை கோவில்கள் பட்டியலில் இருந்தன? 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் எத்தனை கோவில்கள் உள்ளன? எத்தனை கோவில்களில் தேரோட்டம் நடந்தது; இன்று எத்தனை நடக்கிறது? எத்தனை கோவில்களில் தேர் இருந்தது? இன்று எத்தனை உள்ளது? தமிழகத்தில் இருந்து எத்தனை சிலைகள் திருடு போயின? எத்தனை சிவன் சிலைகளை பிரதமர், வெளிநாடுகளில் இருந்து கேட்டு வாங்கி தமிழகத்திற்கு கொடுத்துள்ளார்?

கோவில்களில் கட்டணம் நிர்ணயித்தது யார்? கோவில்களில் வி.ஐ.பி., தரிசனம் எதற்கு? அர்ச்சனைக்கு, மொட்டைக்கு கட்டணம். ராமேஸ்வரம் கடலில் சிரார்த்தம் செய்தால் கட்டணம். கோவில் விஷயத்தில் அரசாங்கம் என்பது பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் 'பெசிலிடேட்டராக' இருக்க வேண்டும்; கட்டுப்படுத்தும் 'கன்ட்ரோலராக' இருக்கக்கூடாது.


Sampath Kumar - chennai, இந்தியா
03-ஏப்-2024 09:12 Report Abuse
Sampath Kumar அட அண்ணா காவடி பயலுகள ஏங்கே வந்து என்னபேசுகின்றாய் பிஜேபி தான் ஒளிந்து போகும் இது கட்டாயம் நடக்காத இல்லையா என்று பாரு வந்துடாறு ஆருடம் சொல்ல
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS, யூ.எஸ்.ஏ
01-ஏப்-2024 14:08 Report Abuse
RAMAKRISHNAN NATESAN \ கோவில்களில் கட்டணம் நிர்ணயித்தது யார்? கோவில்களில் வி.ஐ.பி., தரிசனம் எதற்கு? அர்ச்சனைக்கு, மொட்டைக்கு கட்டணம். ராமேஸ்வரம் கடலில் சிரார்த்தம் செய்தால் கட்டணம். //// நாங்க இதுக்கெல்லாம் கவலைப்படமாட்டோம் ..... மத்திய ஹிந்துத்வா ஆட்சி பார்த்துக்கும் ..... எங்களுக்கு நம்பிக்கை இருக்குது ......
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்