'2026ல் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் புல்லட் ரயில் பறக்கும் ! '

ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சத்தமில்லாமல் சாதிப்பவர் என்று பெயர் எடுத்தவர். கடந்த 10 ஆண்டுகளாக, நம் நாட்டில், ரயில்வே துறை கண்டு வரும் புதுமைக்கும் அதிவேக வளர்ச்சிக்கும் முக்கிய காரணமான இவர், தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கடந்த 10 ஆண்டுகளில், இந்திய ரயில்வேயில் 31,000 கி.மீ., துாரத்துக்குப் புதிய பாதைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

திறனை மேம்படுத்துவது தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. ரயில்வே பல்வேறு பிரிவுகளின் ஒற்றிசைவு. அவற்றில் ஆறு பிரதானம். பாதை அமைப்பு, மேல்நிலை மின்சார கட்டமைப்பு, ரயில் அமைப்பு, சமிக்ஞை அமைப்பு, ரயில்வே நிலைய அமைப்பு, ஐ.ஆர்.சி.டி.சி. உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவை அமைப்பு ஆகியவை இந்த பிரிவுகள். இவற்றின் திறன்களை மேன்மேலும் செம்மைப்படுத்த வேண்டியிருந்தது. அப்போது தான் ரயில்வே சீராக இயங்க முடியும்.

கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், அவர்கள், புதிய ரயில்களை அறிவித்துக்கொண்டே இருந்தனரே தவிர, அதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடு செய்யவில்லை. புதிய பாதைகளை அமைப்பது மற்றும் மின்மயமாக்குவதும் மிகவும் முக்கியமான பணிகள். அவர்கள் ஏன் செய்யவில்லை?

ஓட்டுகளை பெறுவதற்காக புதிய ரயில்களை அறிவித்ததை தவிர, காங்கிரஸ் அரசுகள், ரயில்வே துறைக்கு என்ன செய்தன? அத்துறையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதை ஒட்ட ஒட்ட கறந்தது தான் மிச்சம். இது தான் அடிப்படை பிரச்னையாக இருந்தது, இதைத் தான் இப்போது பிரதமர் மோடி மாற்றி அமைத்திருக்கிறார்.

இந்திய வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகள் முக்கியமானவை. ரயில்வே துறையில், 60 ஆண்டுகளில், 20,000 கி.மீ., மின்மயமாக்கப் பட்டது. ஒப்பிடும் போது, கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கி.மீ., மின்மயமாக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில், 31,000 கி.மீ., துாரத்துக்கு புதிய பாதைகள் போடப்பட்டு உள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 15 கி.மீ.,க்கு கட்டுமானத்தை மேற்கொள்கிறோம், முன்பு அது ஒரு நாளைக்கு 4 கி.மீ.,யாக மட்டுமே இருந்தது.

இந்த ஆண்டு மட்டும் ஏற்கனவே 5,300 கி.மீ., துாரத்துக்கு பாதை போட்டுவிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சுவிட்சர்லாந்து நாட்டு ரயில் பாதை அளவுக்கு நாம் அமைத்து வருகிறோம்.

இது தான் நாம் மேற்கொண்டு வரும் பணியின் வேகம். இதன் வாயிலாக, நாம் கூடுதலான மக்களையும், சரக்குகளையும் கொண்டு செல்கிறோம். 2014க்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும், 30 ரயில் நிலையங்களை உருவாக்கி வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு ஆண்டும், 500 ரயில் நிலையங்களை உருவாக்கி வருகிறோம்.

இந்த சாதனை இலக்குகளை அடையும் பாதையில் வேறு என்ன சவால்கள் இருந்தன?

எந்த உள்கட்டுமானத் திட்டத்திலும் எண்ணற்ற சவால்கள் இருக்கும். இதில் மொத்த அமைப்பும் பங்களிக்க வேண்டும். ரயில்வேயை போன்ற எந்தப் பெரிய நிர்வாக அமைப்பிலும் மாற்றங்களுக்கு எப்போதும் ஏதேனும் எதிர்ப்பு இருந்துகொண்டு தான் இருக்கும். பணியாளர்களுடைய மனநிலையை மாற்ற வேண்டும்.

இதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம். உதாரணமாக, தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பு பின்பற்றப்படுகிறது. ரயில்வே துறை 1,000 மேம்பாலங்களை கட்டியது. முறையான அணுகுமுறை இல்லை என்றால், இது சாத்தியமாகி இருக்காது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் இலக்கு என்ன? இதே வேகத்தில் புதிய ரயில் பாதைகளை உருவாக்குவீர்களா?

அடுத்த 10 ஆண்டுகளில், நாம் 40,000 கி.மீ., புதிய பாதைகளை அமைக்க வேண்டும். மூன்று புதிய ரயில் வழித்தடங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 40,800 கி.மீ., துாரத்துக்குப் புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும். இது, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட, நாற்கரச் சாலை போன்ற மிகப் பெரிய திட்டமாகும்.

மேலே சொன்ன மூன்று வழித்தடங்களில், முதலாவது, எரிசக்தி, உலோகம், சிமென்ட் வழித்தடமாகும். இதன் வாயிலாக சாலையில் ஏற்படும் மாசு குறையும், போக்குவரத்து செலவு குறையும். இரண்டாவது, துறைமுகங்களுக்கான வழித்தடம். இதன் வாயிலாக, பல்வேறு துறைமுகங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து 'கதி சக்தி' நோக்கில் உருவாக்கப்படும்.

மூன்றாவது, நெரிசல் பகுதிகளை இனங்கண்டு, அவற்றை நீக்கியிருக்கிறோம். அடுத்த 30- - 40 ஆண்டுகளின் தேவையை கணித்துள்ளோம். வருங்காலத்தில் நிலைமை சிக்கலாவதற்கு முன்பே சரி செய்ய பார்க்கிறோம். இந்த மூன்று வழித்தடங்களின் வாயிலாக அனைத்து மாநிலங்களும் பயன்பெறும்.

அடுத்த தலைமுறை வந்தே பாரத் ரயில்கள், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் ஓடும் என்று சொல்லப்படுகிறது. அவை எந்த வழித்தடத்தில் ஓடத் துவங்கும்?

நரேந்திர மோடி, 2014ல் பிரதமரான போது, பெரும்பாலான ரயில் பாதைகளில் ரயில்கள் மணிக்கு 80 கி.மீ., வேகத்திலும், ஒருசில வழித்தடங்களில் மணிக்கு 100 கி.மீ., வேகத்திலும் மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தன. நாங்கள் பெரும்பாலான வழித்தடங்களை மணிக்கு 130 கி.மீ., வேகத்திலும், இன்னும் கொஞ்சம் வழித்தடங்களை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்கள் ஓடக் கூடியவையாக தரம் உயர்த்தி வருகிறோம்.

பல உயர்மட்ட வழித்தடங்கள் மணிக்கு 250 கி.மீ., வேக திறனுக்கு தரம் உயர்த்தப்படும். தரம் உயர்த்துதல் என்பது ஒரு தொடர் நிகழ்வு.

குறித்த நேரத்தில் ரயில்கள் ஓடுவதில் முன்னேற்றம் இருக்கிறதா? அது கவலைக்கான விஷயமாக தொடர்கிறதா?

ரயில்களின் தாமதத்துக்கு காரணமான நெரிசலான பகுதிகளில், தற்போது நெரிசல் குறைந்துள்ளது. நான்கு ரயில்வே மண்டலங்களில், 99 சதவீதம், குறித்த நேரத்தில் ரயில்கள் ஓடுகின்றன.

நாம், புதிய பாதைகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருவதால், இன்று ஆண்டுக்கு 700 கோடி பேர் பயணம் செய்யும் திறன் உள்ள இடத்தில், 2030ல் 1,000 கோடி பேர் பயணம் செய்யும் திறன் உருவாகும். அதே போல், ஆண்டுக்கு 300 கோடி டன் சரக்கு ஏற்றிச்செல்லும் திறனும் உருவாகும். கூடவே, 95 சதவீதத்திற்கு மேல் ரயில்கள் குறித்த நேரத்தில் இயங்கும் திறன் உருவாகும்.



நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'கவச்' போன்ற தானியங்கி பாதுகாப்பு அமைப்பை மட்டுமே நம் ரயில்வே துறை சார்ந்திருக்குமா? இதை எவ்வளவு துாரம் நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள்?

'கவச்' என்பது பாதுகாப்பு அமைப்பிலேயே மிகச் சிறப்பானது. ரயில் பாதைகளை ஒட்டி ஓர் ஒளியிழை வடம் பதிக்கப்படுகிறது. ஒவ்வொரு 6 அல்லது 7 கிலோமீட்டரில் ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் சிறிய தரவு மையம் அமைக்கப்பட்டு, தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

இந்த தரவுகள் அனைத்து, மத்திய ரயில் கட்டுப்பாட்டு அமைப்புக்கு செல்கின்றன. ஒவ்வொரு ரயிலிலும் 'கவச்' அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது. இது தொலைத்தொடர்பு மையங்களோடு ஒருங்கிணைந்து, தரவுகளை அந்தந்த ரயில் நிலையங்களுக்கு கொடுக்கின்றது. இந்த கட்டமைப்பில் சமிக்ஞை அமைப்பும் ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளது.

நாம் ஐரோப்பியர்கள் பயன்படுத்திய ஐரோப்பிய ரயில் தொடர்பு அமைப்பைப் பயன்படுத்தி இருக்க முடியும். அதைத் தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்தத் தொழில்நுட்பம் 80களிலும் 90களிலும் உருவாக்கப்பட்டது. அந்த தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு நாம் பெரும் பாய்ச்சல் எடுக்க முடிவு செய்தோம்.

நாம், 'கவச்' வடிவமைத்து உள்ள விதத்தை உலகமே பாராட்டுகிறது. இது, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்து அதிநவீன தொழில்நுட்பங்களோடும் இணைந்து வேலை செய்யக்கூடியது. அடுத்த 12 ஆண்டுகளில், இந்த கவச் கட்டமைப்பை 35,000 கி.மீ.,க்கு நீட்டிக்கப் போகிறோம்.



பயணியர் சேவைகளில் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

நமக்கு ஒரு சமூக கடமை இருக்கிறது. நாம், ஏழை, எளியோர், மத்தியதர வர்க்கத்தினருக்கு தான் சேவை வழங்குகிறோம். அவர்களுக்கு நாங்கள் சகாய விலையில், பாதுகாப்பான, சவுகரியமான பயண அனுபவத்தைக் கொடுக்க விரும்புகிறோம். அதனால், இதற்காக நாம் 55 சதவீத அளவுக்கு மானியம் வழங்குகிறோம். உதாரணமாக, பயணச் செலவு 100 ரூபாய் என்றால், நாம் 45 ரூபாய் தான் கட்டணமாக வசூலிக்கிறோம். இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய்.

வந்தே பாரத் ரயில் கட்டணம், பாமரர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது. அது குறையும் என, எதிர்பார்க்கலாமா?

பிற நாடுகளில், இதே தரத்தில் உள்ள ரயில்களுக்கு, நம்மைவிட 5-7 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய கட்டணத்திலேயே கேரளாவில், வந்தே பாரத் ரயில்களின் இருக்கைப் பதிவு 150 சதவீதம், தமிழகத்தில் 130 சதவீதம், மொத்த நாட்டிலும் 95 - -96 சதவீதமாக இருக்கிறது.

இந்திய ரயில்வே துறையில், 'மேக் இன் இந்தியா' திட்டம் எப்படிச் செயல்படுகிறது? ஏற்றுமதியில் தன் முத்திரையை ரயில்வே பதிக்குமா?

ரயிலுக்கு தேவைப்படும் அனைத்து முக்கிய பாகங்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவேண்டும் என்பது தான் நோக்கம். அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறோம்.

பிற நாடுகளில் 'ஸ்டான்டர்ட் கேஜ்' ரயில் பாதை தான் பெருமளவில் உள்ளது. அதற்கேற்ப, வந்தே பாரத்தின் ஏற்றுமதி வகையை உருவாக்க துவங்கி உள்ளோம். சென்னையில் உள்ள ஐ.சி.எப்.,ல் ஏற்றுமதிக்கான வந்தே பாரத் ரயில்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்படும். ஐரோப்பாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்.

இது தவிர, வட மற்றும் தென் அமெரிக்காவும் பெரிய சந்தைகளாக உள்ளன. மிக விரைவில், ரயில்வே தொழில்நுட்பத்தில் பெரும்பாலான நாடுகளை நாம் முந்திவிடுவோம்.

கடந்த 2022ல் தாமத நிலையில் 56 ரயில்வே திட்டங்கள் இருந்தன. இதுவே 2023ல், 98 ஆக உயர்ந்துவிட்டன. என்ன காரணம்?

பிரமாண்டமான திட்டங்களை மேற்கொள்ளும் போது, மாநில அரசுகளின் உதவி மிகவும் முக்கியம். நில ஆர்ஜிதம், வன துறை ஒப்புதல், கட்டுமானத்திற்கு தேவையான அனுமதி என, அவர்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

தாமதமான திட்டங்களில் கணிசமானவை கேரளாவிலும் தமிழகத்திலும் உள்ளன. அந்த மாநில அரசுகளிடம் இருந்து ஒத்துழைப்பே இல்லை. மத்திய-, மாநில அரசுகள் இணக்கத்தோடு பணியாற்றினால் தான் நம் நாட்டுக்கு தேவையான வேகத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

முதல் புல்லட் ரயில் திட்டம் எப்போது நிறைவேறப் போகிறது? இதர மாநிலங்களிலும் புல்லட் ரயில் எதிர்பார்க்கலாமா? இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நீண்ட காலம் ஆவதால், பிற வழித்தடங்களுக்கான பூர்வாங்க பணிகளை கூட ஏன் துவங்கவில்லை?

இந்த திட்டம் நன்கு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. குஜராத்தில், புல்லட் ரயில் வழித்தடத்தின் 284 கி.மீ., பாலம் தயாராகிவிட்டது. இதேவேகத்தில் தற்போது மஹாராஷ்டிராவிலும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

புல்லட் ரயில் திட்டம் மிகவும் கடினமானது. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை, ஆனால், ஒரு மிகப்பெரிய பணக்கார நாடு, கடந்த 20 ஆண்டுகளாக, புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது. நாம் அதைவிட நல்ல நிலையில் இருக்கிறோம்.

கடந்த 2017ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே கடினமான வடிவமைப்பு பணி முடிக்கப்பட்டது. மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் ரயில் ஓடினால் அது ஏற்படுத்தக்கூடிய அதிர்வு எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதற்கேற்ப பாதையை வடிவமைக்க வேண்டி இருந்தது. அதையெல்லாம் முடித்து இப்போது கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது.

வரும் 2026ல் நாட்டின் முதல் புல்லட் ரயில் ஓடும். இந்த திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவோம். ஆனால், தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கூடுதல் விபரங்களை சொல்ல முடியாது.



ஐரோப்பிய நாடுகளை போல், நகரங்களுக்கு இடையே மணிக்கு பல முறை ரயில்கள் நம் நாட்டில் எப்போது வரும்? நாம் அந்த நிலையை நோக்கி நகர்கிறோமா? அந்த நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?

வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர், வந்தே சேர் - கார் போன்ற திட்டங்களை வைத்திருக்கிறோம். வந்தே மெட்ரோ என்பது மண்டல அளவிலானது. உதாரணமாக, சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் எப்போதும் தேவை அதிகம். அதேபோல், கோவை -- சென்னை மற்றும் மதுரை -- சென்னை. இதில் ஏதேனும் ஒரு வழித்தடத்தில் வந்தே மெட்ரோ ரயில் சேவையை துவங்குவோம்.

இது பயணியரின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும். அடுத்த சில வாரங்களில், முதல் வந்தே மெட்ரோ ரயில் ஓட ஆரம்பிக்கும். இது கபுர்தலாவில் தயாராகி வருகிறது. அதே போல், வந்தே ஸ்லீப்பர் பெங்களூருவில் தயாராகி வருகிறது. வந்தே சேர் கார் ஏற்கனவே ஓடிக்கொண்டு இருக்கிறது. 250 கி.மீ. வரை வந்தே மெட்ரோ; 600 முதல் 700 கி.மீ., வரை வந்தே சேர் - கார்; 700 கி.மீ.,க்கு மேல் வந்தே ஸ்லீப்பர் என்பது தான் திட்டம்.



அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்வே துறையிடம் இருந்து தமிழகம் என்ன எதிர்பார்க்கலாம்?

2014க்கு முன்பு, தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சராசரியாக, ஆண்டுக்கு வெறும் 870 கோடி ரூபாய் தான். தற்போது, பிரதமர் மோடி, தமிழகத்திற்கு, சராசரியாக ஆண்டுக்கு 6,104 கோடி ரூபாய் ஒதுக்குகிறார். இது, 7 மடங்கு உயர்வு. இதனால், பல பத்தாண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டு இருந்த திட்டங்கள் மீண்டும் வேகம் பிடித்துள்ளன.

பல கனவு திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. 48 ரயில் நிலையங்கள் நவீன தரத்தில் புதுப்பிக்கப் படுகின்றன. பாம்பன் பாலம் நிறைவடையும் நிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு தான் அதிக வந்தே பாரத் ரயில்கள் ஒதுக்கி உள்ளோம். அதனால், சென்னையில் இருந்து எல்லா திசைகளிலும் வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன.



எந்த சாதனை உங்களை பெருமைப்பட செய்கிறது?

புல்லட் ரயில் திட்டம் நம் ரயில்வே வரலாற்றில் முக்கிய மைல்கல். வந்தே பாரத் உற்பத்தி திறனை அதிகரித்ததும் மிக முக்கியமானது. அதே போல் வந்தே பாரத்தின் தரத்தில் அதிவேக முன்னேற்றம். முதல் வகை 2019ல் வந்தது. இரண்டாவது 2022லியே வந்துவிட்டது. இரண்டுக்கும் இடையில் தரத்தில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளோம். இரண்டாவது வகையில், மணிக்கு 180 கி.மீ.,யிலும் குவளையில் வைத்த நீரின் ஒரு சொட்டுகூட சிந்தவில்லை. அந்த பிழையற்ற தரம் தான் சாதனை!

கணினி 'சிப்' உற்பத்திக்கு அரசு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது? அந்த துறையில் முதலீடு செய்பவர்களுக்கும் நிறைய சலுகைகளை கொடுத்து வருகிறதே, ஏன்?

சில தொழில்கள் மிக மிக முக்கியமானவை. அவற்றை அஸ்திவார தொழில்கள் என்கிறோம். அவை இருந்தால் தான் அவற்றின் மீது பிற தொழில்கள் வளர முடியும். கணினி 'சிப்' உற்பத்தி அது போன்ற ஒன்று. நாம் இன்று பயன்படுத்தும் அனேக சாதனங்களில் 'சிப்' இருக்கிறது. லேப்டாப், மொபைல், கார், ரயில்; ஏன் வீட்டில் உள்ள பிரிஜ், ஏசியில் கூட இருக்கிறது.

ஏற்கனவே 'சிப்' வடிவமைப்பில் நம் நாடு வலுவான நிலையில் உள்ளது. சமீபத்தில், சென்னையில், குவால்காம் நிறுவனத்தின் புதிய 'சிப்' வடிவமைப்பு மையத்திற்கு சென்றேன். மிக பிரமாதமாக இருந்தது. அதிநவீன 'சிப்' வடிவங்கள் அங்கு தயாராகி வருகின்றன.

'சிப்' தொழிலில் மூன்று பிரதான பிரிவுகள் இருக்கின்றன. வடிவமைப்பு, உற்பத்தி மற்றும்

இறுதி கட்ட பணி. இறுதி கட்ட பணியில் சேர்க்கை (பல்வேறு பாகங்களை சேர்ப்பது), சோதனை, குறியிடுதல், பொதிதல் என நான்கு கட்டங்கள் உள்ளன. மூன்று பிரதான தொழில் பிரிவுகளும் நம் நாட்டுக்கு வர வேண்டும் என்பதில் பிரதமர் முனைப்பாக இருக்கிறார். ஏனெனில் உலக அளவில் நம் நாட்டின் பலத்தை இந்த தொழில் அதிகரிக்கும். அதே நேரம், நம் நாட்டை 2047க்குள் வளர்ந்த நாடாக ஆக்குவதற்கு இந்த தொழில் அவசியம் என்று அவர் நினைக்கிறார்.

அவர் விடாப்பிடியாக இருப்பதால் தான், கடந்த 10 ஆண்டுகளில், இந்த துறை, மளமளவென முன்னேறி இருக்கிறது.

இந்த தொழிலுக்கு நிறைய முதலீடு தேவைப்படுகிறதே. அரசு இவற்றுக்கு மானியம் கொடுக்கிறதா?


உலகெங்கும் இந்த தொழிலுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த தொழிலில் ஏற்கனவே முதல் ஐந்து இடங்களில் உள்ள ஒரு நாட்டின் அரசு, 20 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இந்த தொழிலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து நாடுகளும் 5,000 கோடியில் இருந்து 40 ஆயிரம் கோடி டாலர் வரை முதலீடு செய்து வருகின்றன.

20) சமீபத்தில் ஒரு 'சிப்' உண்பத்தி தொழிற்சாலைக்கு குஜராத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்னும் தொழிற்சாலைகள் வருமா?

மேலும் நான்குக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது. அசாமில் ஒன்று, குஜராத்தில் மூன்று.

21) குஜராத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

* 'சிப்' உற்பத்திக்கு 250 ரசாயனங்கள் தேவைப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து இடம் தேர்வு செய்ய பல குழுக்கள் வந்தன. அவை குஜராத்தை தான் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில், குஜராத்தில் தகேஜ் என்ற இடத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய ரசாயன உற்பத்தி மையங்களில் ஒன்று இயங்குகிறது. அங்கு உள்ள நிறுவனங்கள் 'சிப்' உற்பத்திக்கு தேவையான அனேக ரசாயனங்களை தயார் செய்கின்றன.

அரசு தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் போய் பார்க்கச் சொல்கிறோம். 'சிப்' உற்பத்தி குஜராத்தில் வருவதால்; எலக்ட்ரானிக் பாகங்கள், சாதனங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய கர்நாடகா, தமிழகம் மற்றும் தெலங்கானா தோதான இடங்கள் என்று முதலீட்டாளர்களிடம் சொல்கிறோம். அப்படித்தான் 'ஆபிள்' மொபைல் உற்பத்தியை தமிழகத்திற்கு அனுப்பினோம்.

'சிப்' என்ற அஸ்திவார தொழிலை சுற்றி பல தொழில்கள் உருவாகும்.

22) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கணினி 'சிப்' இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்றீர்களே...

கண்டிப்பாக டிசம்பர் 2024ல் வந்துவிடும்.



23) இதனால், எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை குறையுமா?

'சிப்' என்பது அந்த சாதனங்களின் ஒரு பகுதி தான். ஆனால், நிச்சயம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

24) இந்த துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன எதிர்பார்க்கலாம்?

நாம் 'சிப்' தொழிலில் மிக முக்கியமான நாடாக மாறிவிடுவோம். அதற்கேற்ப திறன் உள்ளவர்களை உருவாக்க வேண்டி இருக்கிறது. நான்கு பல்கலைகளோடு இணைந்து 85 ஆயிரம் பேரை தயார் செய்ய முற்பட்டு இருக்கிறோம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்