யாருக்கு ஓட்டு - மக்கள் பேட்டி
திராவிட கட்சிகள் வேஸ்ட்
தி. மு.க., -- அ.தி.மு.க., ஆகிய திராவிட கட்சிகளின் செயல்பாடுகள் சரியில்லை. மக்கள் கொதிப்பில் உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருக்கிறான். பெண்களுக்கு பாதுகாப்பு, நிம்மதி வேண்டும். நாம் தமிழர் சீமானின் பேச்சுகள் முரண்பாடாக உள்ளன. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விஜய் நினைக்கிறார். எனவே அவருக்கே என் ஓட்டு. கூட்டணி சேர்ந்தால் பலவீனமாகிவிடும் என்பதால், த.வெ.க., தனித்து களமிறங்க வேண்டும்.
- சீனிவாசன்,
மதுரை
தடுக்கும் அதிகாரிகள்
குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகை , இலவச பஸ், கல்லுாரி மாணவியருக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களால் இந்த முறை, என் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான். ஆனால், பலருக்கு மகளிர் உரிமை தொகை, மாணவியர் உதவி தொகை கிடைக்கவில்லை. திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை கண்காணிப்பதில் அரசின் கவனம் அதிகரிக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகள் முதல்வருக்கு சென்று சேராமல் அதிகாரிகள் அளவில் 'பில்டர்' செய்யப்படுகின்றன.
- சசிகலா,
மதுரை
நம்பி ஏமாந்தேன்!
கடந்த தேர்தலில் வேலைவாய்ப்பு, சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் என நம்பி ஓட்டு போட்டேன். வளர்ச்சி திட்டங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எங்கு பார்த்தாலும் ஒரே பிரச்னை தான். சமூக வலைதளங்கள் மூலம், வேட்பாளர்களின் செயல்பாடுகள், வாக்குறுதிகளை ஆய்வு செய்வேன். கட்சி சார்பை விட வளர்ச்சி, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு அமையும் அரசியல் கூட்டணிக்கு என் ஓட்டு நிச்சயம்.
- பகவதி, 24,
காரியாபட்டி, விருதுநகர்
சோம்பேறி ஆக்கும் கட்சிகள்
ம த்திய அரசின் 100 நாள் வேலை திட்டம், இலவச பேருந்து சேவை, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, இலவச அரிசி, வீடு கட்டும் திட்டம் போன்ற இலவசங்களால், மக்கள் முழு சோம்பேறி ஆகிவிட்டனர். வேறு யாரும் வந்தால் இலவசம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால், மீண்டும் ஸ்டாலினே வரவேண்டுமென விரும்புகின்றனர். இலவச மருத்துவ திட்டம், நான் முதல்வன் ஆகிய திட்டம் அவசியமானவை.
- எஸ்.பிரான்சிஸ், 63,
கடம்பத்துார், திருவள்ளூர்
யாரைத்தான் நம்புவதோ?
நா ன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். இரண்டு முறை தி.மு.க.,வுக்கு தான் ஓட்டு போட்டேன். கல்விக்கடன் வாங்கி பி.இ., படித்து முடித்தேன். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., கடந்தமுறை அறிவித்ததை செய்யவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. த.வெ.க.,விலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. யார் தான் மாற்றம் தருவர் என்று எதிர்பார்க்கிறேன்.
- நிவேதா,
கொட்டாம்பட்டி, மதுரை
என்.டி.ஏ., கூட்டணி தான்!
தி. மு.க., ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தால், பெரும் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தவிர, அரசு அலுவலகங்களில் முன்பைவிட லஞ்சம் தாராளமாக விளையாடுகிறது. மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. இது நீடித்தால், தமிழகம் திவாலாகும் நிலை ஏற்படலாம். கடந்த 2024 எம்.பி., தேர்தலில், மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்த நான், இந்த தேர்தலில் என்.டி.ஏ., கூட்டணிக்கு ஓட்டளிக்க உள்ளேன்.
- வி.ராஜா, 43,
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
Advertisement

வாசகர்கள் கருத்துகள்