Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 த.வெ.க., விஜயை நோக்கி நகரும் பா.ம.க., ராமதாஸ்

 த.வெ.க., விஜயை நோக்கி நகரும் பா.ம.க., ராமதாஸ்

சென்னை: தி.மு.க., -- அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷன், பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ள நிலையில், அவர் கடந்த ஜனவரி 7ம் தேதி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைந்தார்.

அன்புமணி, அ.தி.மு.க., ஆதரவுடன் மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாகிறார். இது, ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அன்புமணி இருப்பதால், அ.தி.மு.க., கூட்டணியில் ராமதாசை சேர்க்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மறுத்து விட்டார்.

'பா.ஜ., - பா.ம.க., கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம்' என்பதில், வி.சி., தலைவர் திருமாவளவன் உறுதியாக இருப்பதால், தி.மு.க., கூட்டணியிலும் ராமதாசால் சேர முடியவில்லை.

திருமாவளவனை சரிக்கட்ட ராமதாஸ் தரப்பில், ஜி.கே.மணி எவ்வளவோ முயன்றும், 'பா.ம.க.,வுடன் கூட்டணி வைக்க முடியாது' என கூறிவிட்டார்.

இதனால், த.வெ.க., வுடன் கூட்டணி சேரும் நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார். கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த த.வெ.க., பட்டியலின மக்களின் ஓட்டுகள் கிடைக்காது எனக்கூறி, ராமதாசை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தது.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க, த.வெ.க., விரும்புவதாக கூறப்படுகிறது. த.வெ.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே அந்த முயற்சியில் ஈடுபட்டார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை, த.வெ.க., கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடக்காததால், ராமதாசை த.வெ.க., கூட்டணிக்கு கொண்டு வர, செங்கோட்டையன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வருவதாகவும், ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்றும், ராமதாஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Advertisement

மார் 07, 2026 07:14 am

திமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் அன்புமணி இந்த இரண்டிலும் போக முடியாது. மீதம் இருப்பது தவெக மற்றும் நாதக மட்டும் தானே.

Reply Rate this