யாரும் இறுமாப்புடன் இருக்கக்கூடாது: பா.ஜ.,வினருக்கு சந்தோஷ் அறிவுரை
சென்னை: “தொகுதி பங்கீட்டில் பா.ஜ.,வுக்கு 20 சதவீத தொகுதிகள் கிடைக்கும்,” என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை தி.நகர் கமலாலயத்தில், நேற்று நடந்தது.
கூட்டத்தில், சந்தோஷ் பேசியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 50 - 60 நாட்கள் கூட கிடையாது. அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., உட்பட பல கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டில், பா.ஜ.,வுக்கு 20 சதவீத தொகுதிகள் கிடைக்கும்; அங்கு மட்டும் நாம் போட்டியிடுவதாக பா.ஜ.,வினர் கருதக்கூடாது.
தே.ஜ., கூட்டணி சார்பில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு, பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பா.ஜ., பூத் கமிட்டி என்று கருதாமல், தேசிய ஜனநாயக கூட்டணி என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்.
கூட்டணி கட்சியினருடன் அனுசரித்து செல்ல வேண்டும். இந்த முறை பலமான கூட்டணி அமைந்துள்ளது. எனவே, தி.மு.க.,வை தோற்கடித்தே தீர வேண்டும்.
பா.ஜ.,வில், 'நான் தான் பெரியவன்' என்று யாரும் இறுமாப்புடன் இருக்கக்கூடாது. சட்டசபை தேர்தலில், எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கவில்லை என்றால், மற்றவர்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும். உழைக்கும் எல்லாருக்கும், எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படும்.
தி.மு.க.,வின் ஊழல்களை வீடுதோறும் மக்களிடம் கொண்டு சென்று, அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். உட்கட்சி விவகாரம், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Advertisement
சென்ற தேர்தலை விட பலம் குறைந்தது தான் இந்த தேர்தலின் அதிமுக கூட்டணி. அதை உணராதவர் தான் கூட்டணி தலைவர். ஆளும் கட்சியின் திறனற்ற தன்மை தான் இந்த கூட்டணியின் பலம். அதை நான்கரை ஆண்டுகள் கண்டு கொள்ளாதது பெரும் பலவீனம்.

பழனிச்சாமி ஒருவரது இறுமாப்பு போதாதா கூட்டணி வீழ்ச்சிக்கு?