100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு
திருப்போரூர்:திருப்போரூர் சட்ட சபை தொகுதியில் ஓட்டு அளிப்பதற்கான அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணி நடந்தது.
தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. திருப்போரூர் சட்ட சபை தொகுதியில், 369 ஓட்டுச்சாவடிகளில், 2.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், பையனுார் தனியார் கல்லுாரியில் ஹோட் 100 சதவீதம் என்ற வாசகத்தின் வடிவமைப்பில் மாணவ, மாணவியர்கள் வரிசையாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து கலெக்டர் முதன் முதலாக ஓட்டு அளிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, உறுவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் 100 சதவீதிம் ஓட்டு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார்.
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பிளக்ஸ் பேனர் வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம், கந்தசுவாமி கோவில் வளாகம், சட்ட சபை உறுப்பினர் அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், பொது இடம் என பல்வேறு இடங்களில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, திருப்போரூர் தாசில்தார் ஆறுமுகம், பையனுார் வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பையனுார், மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிகள் ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு, ஓட்டுப்பதிவிற்கான பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்