மதுரை: மதுரையில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்கள், உதவியாளர் என அடுத்தடுத்து மோசடி புகார்களில் சிக்கி கைதாவது தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வுக்குள் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வின் அமைச்சரவையில் ஆரம்பத்தில் அசைக்க முடியாத அமைச்சராக தியாகராஜன் வலம் வந்தார். ஆங்கிலப் புலமை, அதிகம் படித்தவர் என சுட்டிக்காட்டப்பட்டார். இவரது சம்மதத்திலேயே மதுரையில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அச்சமயத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க., பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி எல்லைக்குள் இருந்த நகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி., பொன்முத்துராமலிங்கம், நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., ஆகியோர் கோலோச்சிய போதும் இவர், 'பவர் சென்டராக' இருந்தார். மாநகராட்சி மேயர்
ஆனாலும் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர்களை மீறி கட்சிக்குள் அறிமுகமே இல்லாத கவுன்சிலர் இந்திராணியை மேயராக கொண்டு வந்தார். மார்க். கம்யூ.,க்கு துணைமேயர் பதவி வழங்கியதிலும் இவரது 'அரசியல்' இருந்தது. மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள் என அவரது ஆதரவாளர் களுக்கே பதவிகள் வாரிவழங்கப்பட்டன. நகர் செயலாளர் தளபதியாக இருந்தாலும், தி.மு.க., தலைமையில் இருந்த செல்வாக்கால் கட்சி நிர்வாகத்திலும் அமைச்சரின் மத்திய தொகுதியில், வட்டம், பகுதி செயலாளர் பதவிகளை ஆதரவாளர்களுக்கு பெற்றுத்தந்தார். அமைச்சரின் நெருங்கிய வட்டத்தில் இருந்த அப்போதைய மேயரின் கணவர் பொன்வசந்த், அமைச்சரின் உதவியாளர்கள் பாலாஜி, இலக்குவணன், முன்னாள் துணைமேயர் மிசா பாண்டியன் ஆகியோரின் மறைமுக கட்டுப்பாட்டில் தான் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இருந்தது. ஆனால் தி.மு.க., குடும்பம் குறித்து தியாகராஜன் பேசியதாக வெளியான சர்ச்சை ஆடியோ சம்பவத்திற்கு பின் அவரது செல்வாக்கு கட்சிக்குள் குறைய தொடங்கியது. மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கியது. மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்துவரி முறைகேட்டில் சிக்கியது பெரும்பாலும் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்களே. இதில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, வரிக்குழுத் தலைவர் விஜயலட்சுமி உள்பட பலர் பதவிகளை இழந்தனர். மேயரின் கணவர் பொன் வசந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம், அமைச்சரிடம் ஓராண்டிற்கு முன்பு வரை உதவியாளராக பணிபுரிந்த பாலாஜி மோசடி வழக்கில் மனைவியுடன் கைதாகி உள்ளார். இது, எதிர்க் கட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகி அமைச்சருக்கும், தி.மு.க.,விற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. பலரை சிக்க வைக்க போகும் பாலாஜி
தி.மு.க.,வினர் கூறியதாவது: அமைச்சரிடம் நெருக்கமாக இருந்த மாஜி உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட மூவர் வைத்தது தான் மாநகராட்சிக்குள் சட்டமாக இருந்தது. மேயருக்கு உதவியாளராக அர்ச்சனா என்பவரை அமைச்சர் நியமித்தார் (மேயர் ராஜினாமா செய்த நிலையிலும் அவருக்கு இப்போதும் மாநகராட்சி சம்பளம் வழங்கப்படுகிறது). இவர்கள் மூலம் தான் பெரிய நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவோர், கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான முக்கிய 'பைல்'கள் நகரும். அந்த சமயத்தில் தான் தற்போது பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் புகார் அளித்த பிரபல கட்டுமான நிறுவன உரிமை யாளரும் பாதிக்கப்பட்டார். அமைச்சருடன் இருந்த பலர் அவரது பெயரை கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தெரிந்து 'டென்ஷன்' ஆகி முன்னாள் உதவியாளர், கட்சி ஐ.டி., முன்னாள் நிர்வாகி, தற்போதைய மாநில நிர்வாகிகள் இருவர், 2 கவுன்சிலர்கள் உள்ளிட்டோரை விரட்டியடித்துவிட்டார். அவர்களில் பலர் மீது புகார்கள் உள்ளன. விரைவில் அவர்களும் சிக்குவர். தற்போது கைதான பாலாஜியின் வாக்குமூலத்தில் மேலும் சிலர் கைதாகும் வாய்ப்பு உள்ளது என்றனர். அமைச்சர் ஆதரவாளர்கள் கூறுகையில், 'அமைச்சர் மனதில் உள்ளதை அப்படியே பேசக் கூடியவர். யாரையும் சீக்கிரம் நம்பிவிடுவார். கூடவே இருப்பவர்கள் தவறு செய்தது தெரிந்தால் உடனே விரட்டி விடுவார். கைது செய்யவும் சிக்னல் கொடுத்து விடுவார். கட்சி தலைமை யிடம் சரியாகவே உள்ளார். இதனால் தான் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளார்' என்றனர்.