கைவிட்டது கோவை; அதிர்ச்சியில் பா.ஜ.,! காரணங்களை ஆராயும் கட்சி தலைமை

கோவை:லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் பா.ஜ., அடைந்திருக்கும் தோல்வி, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பா..ஜ., போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில், நிச்சய வெற்றி என்று அக்கட்சியினர் நம்பியிருந்த தொகுதி, கோவை. அப்படிப்பட்ட தொகுதியில், அதுவும், மார்க்சிஸ்ட் கட்சியிடம் அடைந்திருக்கும் தோல்வி, பா.ஜ., கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, தர்மசங்கடத்தில் தள்ளியிருக்கிறது. கட்சி தலைமைக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகியுள்ள நிர்வாகிகள், புலம்பி வருகின்றனர்.
கோவையில், 1996ம் ஆண்டு வெறும், 5.3 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பா.ஜ., பெற்று டிபாசிட் இழந்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த மத ரீதியான மோதல்கள், தொடர் குண்டு வெடிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, 1998 தேர்தலில், பா.ஜ., விஸ்வரூபம் எடுத்து வெற்றிக்கனியை பறித்தது. அ.தி.மு.க., கூட்டணியுடன் போட்டியிட்ட அந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு 55 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட ராதாகிருஷ்ணன், முதல் முறையாக வெற்றி பெற்றார்.
அடுத்தாண்டு, மீண்டும் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.,வுக்கு, 49 சதவீதம் ஓட்டுகளும், வெற்றியும் கிடைத்தன. மூத்த கம்யூ., தலைவர் நல்லகண்ணுவை தோற்கடித்து, பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார்.
தொடர்ச்சியாக இரண்டு முறை பெற்ற வெற்றி, கோவை தொகுதியை, 'பா.ஜ.,வின் கோட்டை' என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால், 2004 தேர்தலில், தமிழகம், புதுவையில், 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தேர்தலில், கோவையில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூ., கட்சியின் சுப்பராயன், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.அடுத்து நடந்த, 2009 தேர்தலில், பா.ஜ., தமிழகத்தில் தனித்து விடப்பட்டது. அந்த தேர்தலில், கோவையில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட செல்வகுமார், 37,909 ஓட்டுகள் பெற்றார். இது, 4.6 சதவீதம் மட்டுமே.
இந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றார்.கடந்த, 2014 தேர்தலில், கோவையில் அ.தி.மு.க., வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார். அவர், 4,31,717 ஓட்டுகள், 36.69 சதவீதம் பெற்றார். எதிர்த்து, மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ., கட்சியின் ராதாகிருஷ்ணன், 3,89,701 ஓட்டுகள் பெற்றார்.
இது, 33.12 சதவீதம். இதில், அப்போது கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,- கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சியினரின் ஓட்டுகளும் அடங்கும். இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் 18.45 சதவீதம், காங்., வேட்பாளர் 4.84 சதவீதம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் 2.91 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 3,92,007 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

இது, பதிவான ஓட்டுகளில், 31.34 சதவீதம். எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன், 5,71,150 ஓட்டு பெற்றுள்ளார். இது, பதிவான ஓட்டுகளில், 45.66 சதவீதம். இவ்வளவு பெரும் வித்தியாசத்தில், மார்க்சிஸ்ட் கட்சியிடம் தோல்வி அடைந்தது, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வட மாநிலங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வை, கோவையில் தோற்கடித்து தொகுதியை கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியினர், பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
2016 சட்டசபை தேர்தல் ஓர் ஒப்பீடு!
கடந்த, 2016 சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. பா.ஜ.,வும் கூட்டணியின்றி, அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், கம்யூ.,க்கள்,-தே.மு.தி.க.,-ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சியினர் போட்டியிட்டனர்.
இதில், கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் சேர்த்து, அ.தி.மு.க., வேட்பாளர்கள், 5,29,518 ஓட்டுகளையும், பா.ஜ., வேட்பாளர்கள், 1,15,013 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். அதேபோல, தி.மு.க.,- காங்., கூட்டணி, 6 தொகுதிகளிலும், 4,29,637 ஓட்டு பெற்றுள்ளனர். மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் வாங்கியவை, 74.910 ஓட்டுகள்.இந்த புள்ளி விவரங்களை கொண்டு பார்த்தால், பா.ஜ.,-அ.தி.மு.க., கூட்டணிக்கு, இந்த தேர்தலில் குறைந்தபட்சம், 6 லட்சம் ஓட்டு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், பா.ஜ., வேட்பாளருக்கு கிடைத்தவை, 3,92,007 ஓட்டுகள் மட்டுமே. எனவே, அ.தி.மு.க.,- பா.ஜ., ஓட்டு வங்கியின் பெரும்பகுதி, அந்த கூட்டணியின் வேட்பாளருக்கு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமாகிறது.

எதிர் அணியில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு, 5,71,150 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதாவது, கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி வாங்கிய ஓட்டுகளை காட்டிலும், கூடுதலான ஓட்டுகளை, மார்க்சிஸ்ட் வேட்பாளர் அறுவடை செய்துள்ளார். இதன் மூலம், 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த வாக்காளர்கள் பலர், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர் என்பது வெளிப்படுகிறது.
பா.ஜ., வாங்கிய ஓட்டு சதவீதம்
தேர்தல் வேட்பாளர் ஓட்டு சதவீதம்1989 நாராயணன் 25132 3.241991 நாராயணன் 47267 6.781996 நடராஜன் 43289 5.31998 ராதாகிருஷ்ணன் 449269 55.851999 ராதாகிருஷ்ணன் 430068 49.212004 ராதாகிருஷ்ணன் 340476 38.742009 செல்வகுமார் 37909 4.62014 ராதாகிருஷ்ணன் 389701 33.122019 ராதாகிருஷ்ணன் 392007 31.34
தொண்டர்கள் கூறும் காரணங்கள்!l அ.தி.மு.க., ஓட்டு வங்கியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும், சிறுபான்மையினருக்கும் முக்கிய இடமுண்டு. அக்கட்சி தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், இந்த சமூகத்தினர் ஓட்டுகளில் பெரும்பகுதி கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததில் விருப்பமில்லாத அந்த சமூகத்தினர், ஓட்டுகளை, மாற்றிப் போட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வினர் பலர், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காமல் விட்டதும், ம.நீ.மை.,- நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டு பெற்றதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.l சபரிமலை போராட்டம், பா.ஜ., கட்சியினர் எதிர்பார்த்த பலனை தரவில்லை. கோவையில் மலையாள மொழி பேசக்கூடிய வாக்காளர்கள், ஒரு லட்சத்தும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களது ஓட்டுகளில் பெரும்பகுதி, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு கிடைத்திருக்கலாம்.

'தமிழகத்தை, பா.ஜ., புறக்கணிக்கிறது' என்கிற தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் பிரசாரம், பல மாதங்களாக வலுவாக முன்னெடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பேசிப்பேசி, எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி விட்டனர் என கூறப்படுகிறது. எனினும், தோல்விக்கான காரணங்களை பல கோணங்களிலும் தமிழக பா.ஜ., தலைமை ஆராய்ந்து வருகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)