இனி... கம்யூ.,களின் கடவுள் ஸ்டாலின்!

புதுடில்லி : இந்தியாவில் இந்தமுறை நடந்த லோக்சபா தேர்தலில் கம்யூனிஸ்டுகள் துடைத்து எறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இனிமேல் அவர்களுக்கு, 4 இடங்களை தமிழகத்தில் கொடுத்து வெற்றிக்கு உதவிய ஸ்டாலின் தான் கடவுள் அல்லது தலைவர் என்பது போன்ற கருத்து சித்திரங்களை கேரள பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.

இடது இழப்பு :




கடந்த 2014 தேர்தலில், கேரளாவில் 7 மற்றும் திரிபுரா, மேற்கு வங்கத்தில் தலா 2 என்று மொத்தம் 11 இடங்களையும், ஒரு ஆதரவு சுயேட்சையையும் பெற்றிருந்தது மா.கம்யூ., அதேபோல, இ.கம்யூ., கட்சி 4 இடங்களை மட்டுமே நாடு முழுவதும் வெற்றிபெற்று இருந்தது. ஆனால், இந்தமுறை கேரளாவில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே மா.கம்யூ., வென்றுள்ளது.

அதேநேரத்தில் திரிபுரா மற்றும் மே.வங்கத்தில் ஒரு இடத்தில் கூட மா.கம்யூ., உள்ளிட்ட இடதுசாரிகள் வெற்றிபெறவில்லை. தனது பாரம்பரியமான தளங்களை முற்றிலும் இழந்து தோற்றுப்போன கம்யூனிஸ்டுகள், தமிழகத்தில் தி.மு.க., தலைவர் மு.க.,ஸ்டாலின் கொடுத்த 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது.

கடவுள் ஸ்டாலின் :




இதனை கிண்டலடித்துள்ள மலையாள மனோரமா நாளிதழ், மா.கம்யூ., தலைமையகத்தில் ஸ்டாலின் படத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாட்டிவைப்பது போலும், பிரகாஷ் காரத் வாழ்க கோஷம் எழுப்புவது போலும் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினுக்கு அடுத்து போற்றப்படும் முக்கிய தலைவர். தி.மு.க., தலைவரின் பெயரும் அதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் இடதுசாரிகள் மொத்தமாக 61 இடங்களும், அதில் மா.கம்யூ., மட்டும் 43 எம்.பி.,க்களையும் பெற்றிருந்தது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது அக்கட்சியின் சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

சித்தாந்த தோல்வி




அதன் பின்னர், 2009 தேர்தலில் 24 தொகுதிகளாக சரிந்த இடதுசாரிகளின் வெற்றி, 2014 ல் வெறும் 16 தொகுதிகளாகவும், தற்போது அதுவே வெறும் 5 தொகுதிகளாக மாறி, இந்திய அரசியலில் இருந்து முற்றிலும் துடைத்து எறியப்பட்டுள்ளனர். இது, அக்கட்சிக்கு இந்திய மண்ணில் ஏற்பட்டுள்ள சித்தாந்த தோல்வி என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)