சிதறுண்டு போன 'சிவப்பு கோட்டைகள்': கம்யூ.,க்கு மிஞ்சியது 5 தொகுதிகள்

புதுடில்லி: கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், சிவப்பு கோட்டைகள் சிதறுண்டு போன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரே ஆறுதலாக தமிழகம் மாறியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., கட்சிகள் தலா இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளன.

மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஜோதிபாசு 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். அவருக்குப்பின் புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானார். மம்தா பானர்ஜியின் எழுச்சியால் கம்யூ., கட்சி மேற்கு வங்கத்தில் இருந்து கரைந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த கம்யூனிஸ்டுகள் தற்போதைய லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. திரிபுராவில் பா.ஜ., எழுச்சியால் மா.கம்யூ., ஆட்சியை இழந்தது. இதேபோல் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்ட கேரளாவிலும் அந்த கட்சியால் லோக்சபா தேர்தலில் பெரும் அளவில் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் ஆலப்புழா தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது.


தமிழகத்தில், தி.மு.க., வுடன் அமைத்து, கம்யூ., கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. இதனால் கோவை, மதுரை தொகுதிகளில் மார்க்சிஸ்டும் திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் இந்திய கம்யூ., கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே இக்கட்சிகள் வெற்றி பெற்று மொத்தம் ஐந்து தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. கேரளாவில் ஆளும் கட்சியாக இருந்தும் மிக மோசமான தோல்வியை மா.கம்யூ., கட்சி சந்தித்துள்ளது. இதற்கு சபரிமலை விவகாரம், உட்கட்சி பூசல்கள், பினராயி விஜயன் அரசுக்கு எதிரான அலை போன்ற, பல காரணங்கள் உள்ளன.


தோல்வி குறித்து மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ''கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பதால் இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நாட்டு மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீர்க்கமான முடிவு எடுத்து வெற்றியை தந்துள்ளனர். எங்கள் தரப்பில் தோல்விக்கு என்ன காரணம்; தவறு எங்கே நடந்தது என, ஆராயப்படும். கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் மே 26-27 தேதிகளிலும், மத்தியக் குழு கூட்டம் ஜூன் 7 முதல் 9ம் தேதி வரையும் நடக்கிறது. அந்த கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்படும. தோல்விக்கு தார்மீக பொறுப்பு உள்ளதால், நான் பதவி விலகுவது குறித்தும் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)