ஆளும்கட்சிகள் மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி

சென்னை: மத்திய மாநில ஆளும் கட்சிகளான அ.தி.மு.க. - பா.ஜ. கட்சிகள் தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு அவற்றின் மீதான அதிருப்தியே முக்கிய காரணம். எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் தேர்தலுக்காக ஒரே அணியில் சேர்ந்ததும் கூட்டணி கட்சிகளை குப்புறத் தள்ளியுள்ளது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடனும் அணி சேராமல் தனித்து நின்று ௩௭ தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. 'மோடியா லேடியா' என சவால் விடுத்து தேர்தலை சந்தித்தவர் ஜெயலலிதா. 'பா.ஜ. வுடன் கூட்டணி சேர மாட்டோம்' என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லை. எந்த கட்சியை கடுமையாக ஜெ. எதிர்த்தாரோ அதே கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டு சேர்ந்து லோக்சபா தேர்தலை சந்தித்தது.

'நீட்' தேர்வு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை 'கஜா' புயல் பாதிப்பின் போது பிரதமர் நேரில் வராதது என பா.ஜ. வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எதிர்கட்சிகள் முன்வைத்தன. மத்திய பா.ஜ. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு எடுத்தது. மேலும் அ.தி.மு.க. அரசை பா.ம.க. தலைவர் ராமதாஸ் அன்புமணி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா கடுமையாக விமர்சித்து வந்தனர். எதிரும் புதிருமாக இருந்த இந்த கட்சிகள் தேர்தலுக்காக ஒரே அணியில் சேர்ந்தது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சொல்லப் போனால் அந்த கட்சிகளின் தொண்டர்களே கீழ்மட்டத்தில் இணைக்கமாக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று வரை எதிரும் புதிருமாக இருந்து விட்டு திடீரென அவர்களால் கைகோர்க்க முடியவில்லை.

சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பா.ம.க. அன்புமணி வழக்கு தொடுத்தார். மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டது; வழக்கில் வெற்றியும் பெற்றனர். இருந்தும் இந்த திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தது பா.ம.க. வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. உடனான கூட்டணியை நியாயப்படுத்தவே பா.ம.க. சிரமப்பட வேண்டியதாக இருந்தது.


அ.தி.மு.க. வுடன் கூட்டணி பேச்சு தொடர்ந்த நிலையில் தி.மு.க. வுடனும் தே.மு.தி.க. பேசியது; அதை தி.மு.க. அம்பலப்படுத்தியது; 'சீட்' ஒதுக்குவதில் ஏற்பட்ட இழுபறி என அந்த கட்சிக்கு எதிரான உணர்வை அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆளும் அ.தி.மு.க. - பா.ஜ. கட்சிகள் மீதான அதிருப்தியை தி.மு.க. கூட்டணி அறுவடை செய்தது. லோக்சபா தேர்தல் மட்டுமல்லாமல் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. இது அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை தான் காட்டுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)