கர்நாடகாவில் பறக்கும் காவிக்கொடி: காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு ஆபத்து

பெங்களூரு, மே 24-கர்நாடகாவில், ஆளும், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணியை முறியடித்து, பா.ஜ., வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகளால், ஆளும் கட்சி கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளதால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில், இங்கு, பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின், காங்கிரசும், மதச் சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடித்தன. சமீபகாலமாகவே, கூட்டணிக்குள், கடும் குழப்பம் நிலவியது.இரு கட்சி தலைவர்களும், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கட்சி தலைவர்கள் மீதே, குற்றச்சாட்டை சுமத்தினர். ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த குளறுபடி, மக்களிடையே, கடும் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. இந்த வெறுப்பு, லோக்சபா தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.மொத்தம் உள்ள, 28 தொகுதிகளில், பா.ஜ., 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, அசத்தியுள்ளது. காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், தலா, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.மாண்டியா தொகுதியில், பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட, பிரபல நடிகை சுமலதா, முதல்வர் குமாரசாமி மகன் நிகிலை தோற்கடித்து, வெற்றி பெற்றுஉள்ளார்.இதையடுத்து, மத்திய அமைச்சரவையில், இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என, பேச்சு எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, துமகூரு தொகுதியில் தோல்வியை சந்தித்து உள்ளார்.பெங்களூரு மத்திய தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்ட, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், தோல்வி அடைந்துள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகளால், ஆளும் கூட்டணி கட்சியினரிடையேயான மோதல் அதிகரித்துள்ளதால், குமாரசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)