கேரளாவில் காங்கிரஸ், 'கெத்து' சபரிமலையில், 'விளையாடிய' இடதுசாரிக்கு கிடைத்தது பாடம்

திருவனந்தபுரம், மே 24-கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடிய, ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு, வாக்காளர்கள், தோல்வியை பரிசளித்துள்ளனர். பல மாநிலங்களிலும், தோல்வியை சந்தித்த காங்கிரஸ், கேரளாவில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, அசத்தியுள்ளது.நம் அண்டை மாநிலமான கேரளாவில், எப்போதும், மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மாறி மாறி வெற்றி பெறுவது வழக்கம்.கடந்த லோக்சபா தேர்தலில், காங்., தலைமையிலான கூட்டணி, 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடதுசாரி கூட்டணி, எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.ஆளும் கட்சியாக இருப்பதால், இந்த முறை, இடதுசாரி கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில், அந்த கட்சி தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் களமிறங்கினார்.இந்த முறை, சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக, ஆளும் கட்சியான, மார்க்சிஸ்ட் மீது, பா.ஜ.,வும், காங்கிரசும், கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்த விஷயத்தில், காங்கிரஸ், பக்தர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது.காங்கிரஸ் தலைவர் ராகுல், அந்த கட்சி பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர், காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், ஆளும், இடதுசாரி கூட்டணிக்கு, வாக்காளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். ஒரு தொகுதியில் மட்டுமே, அந்த கூட்டணிக்கு வெற்றி கிடைத்துஉள்ளது. அதே நேரத்தில், நாடு முழுவதும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ், கேரளாவில் மட்டும் வெற்றியை சுவைத்துள்ளது. காங்., தலைமையிலான கூட்டணி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.இது, நாடு முழுவதும் உள்ள காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு, சற்று ஆறுதலை அளித்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)