ஏழாவது கட்ட தேர்தலில் 64 சதவீத ஓட்டுப்பதிவு

புதுடில்லி:லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஓட்டுப் பதிவு, நேற்றுடன் முடிந்தது. ஏழாவது கட்டத்தில், எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள, 59 தொகுதிகளில், 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஏழு கட்டங்களிலும், சராசரியாக 66.39 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
கடந்த மாதம், 11ம் தேதி துவங்கிய ஓட்டுப் பதிவு, இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும், 23ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.நாட்டில், 17வது லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, மார்ச், 10ல், தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.கடந்த மாதம், 11ம் தேதி நடந்த முதல் கட்டத்தில், 20 மாநிலங்களில் உள்ள, 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு, 18ல் நடந்த இரண்டாவது கட்டத்தில் ஓட்டுப் பதிவு நடந்தது. வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதால், தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கு, தேர்தல்
ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம், 23ல், மூன்றாவது கட்டத்தில்,116 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து, 29ல், 71 தொகுதிகள்; மே, 6ல், 51 தொகுதிகள்; 12ல், 59 தொகுதிகள் என, மொத்தம், ஆறு கட்ட ஓட்டுப் பதிவு முடிவடைந்து உள்ளது.


இந்த நிலையில், எட்டுமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, மீதமுள்ள, 59 தொகுதிகளுக்கு, நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. காலையில் இருந்தே, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.


பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில், தலா, 13; மேற்கு வங்கத்தில், ஒன்பது; பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில், தலா, எட்டு; ஹிமாச்சல பிரதேசத்தில், நான்கு; ஜார்க்கண்டில், மூன்று; சண்டிகரில், ஒரு தொகுதி என, 59 தொகுதி களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.


சில இடங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது.அதையடுத்து, மாற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மற்றபடி, ஏழாவது கட்டத் தேர்தல், மிகவும் அமைதியாகவே நடந்தது.பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு, நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. உத்தர பிரதேசத்தில், 55.52 சதவீதம், வாரணாசியில், 53.58 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.


கடந்த, 2014ம் ஆண்டு, தேர்தலில், 66.4 சதவீத ஓட்டு
பதிவானது. வியக்கத்தக்க வகையில், இந்த தேர்தலிலும், சராசரியாக, 66.39 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது.லோக்சபா தேர்தலுடன், நான்கு மாநிலங் களுக்கான சட்டசபை தேர்தலும் நடந்தது. முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான,தெலுங்கு தேசம் அரசு அமைந்துள்ள ஆந்திராவில், 175 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. முதல்வர், பிமா காண்டு தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தின், 60 சட்டசபை தொகுதிகளும் தேர்தலை சந்தித்தன.


முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் அரசு உள்ள, ஒடிசாவின், 147 தொகுதிகள்; முதல்வர், பவன் குமார் சாம்லிங் தலைமையிலான, சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ள சிக்கிமின், 32 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்து உள்ளது. இதைத் தவிர, தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடந்துள்ளது; இவற்றுக்கான தேர்தல் முடிவுகளும், 23ல் வெளியாக உள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)