யாருக்கு வெற்றி; உச்சகட்டத்தில் தேர்தல் சூதாட்டம்!

சென்னை : லோக்சபா மற்றும் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் யாருக்கு வெற்றி என்பதை மையமாக வைத்து சூதாட்டம் களைகட்டி வருகிறது.

லோக்சபா தேர்தல் தொடர்பான அறிவிப்பை மார்ச் 10ல் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ல் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் இடைத்தேர்தலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் அ.தி.மு.க. பிரசாரத்தை மேற்கொண்டது.

அனைத்து தொகுதிகளிலும் வென்று காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் தி.மு.க. தேர்தலை சந்தித்தது. இதனால் இரு கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலுார் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.

துரைமுருகன் ஆதராவளர்கள் வீடு, குடோன்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் வேலுாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 38 மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ல் திட்டமிட்டபடி லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

இருப்பினும் தேர்தல் முடிவுக்கு மே 23 வரை காத்திருக்க வேண்டும் என வாக்காளர்கள் கவலை அடைந்தனர். தேர்தல் பிரசாரம் களைகட்டிய சமயத்தில் தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதை மையமாக வைத்து சென்னையில் வேப்பேரி, மண்ணடி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளை தலைமையிடமாக வைத்து சிலர் பணம் வைத்து சூதாட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஓட்டுப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன் பறக்கும் படையினர் வருமான வரித்துறை என அதிரடிய சோதனையை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது.

இதனால் சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அமைதி காத்தனர். பிற மாநிலங்களில் நடக்கும் ஏழாம் கட்ட தேர்தலுடன் துாத்துக்குடி - ஒட்டப்பிடாரம்; கரூர் - அரவக்குறிச்சி; மதுரை - திருப்பரங்குன்றம்; கோவை - சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஞாயிற்று கிழமை இடைத்தேர்தல் நடக்கிறது.

நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை அடுத்த வாரத்தின் வியாழக் கிழமை நடக்கிறது. அதற்கு இன்றுடன் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் எந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பதை வைத்து தற்போது பல லட்சம் ரூபாய் வரை பந்தயம் வைத்து சூதாட்டம் நடக்கிறது. அதில் அரசியல் கட்சியினர் அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)