யாருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி? எதிர்பார்ப்பில் ஸ்டாலின், வைகோ வாரிசுகள்

ஜூலை மாதம் நடைபெறவுள்ள, ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு, புதிய எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க.,வில், யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அ.தி.மு.க.,வை சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; தி.மு.க.,வை சேர்ந்த கனிமொழி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, டி.ராஜா ஆகிய, ஆறு பேரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், ஜூலை, 24ல், முடிவடைகிறது. தற்போதைய, எம்.எல்.ஏ.,க்கள் நிலவரப்படி, அ.தி.மு.க.,வுக்கு, மூன்று எம்.பி.,க்களும், தி.மு.க.,விற்கு, இரண்டு எம்.பி.,க்களும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால், இடைத்தேர்தலை சந்திக்கும், 22 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்த பின், ஆறாவது எம்.பி., பதவியை, யார் கைப்பற்றுவர் என்பதற்கு விடை கிடைக்கும். இடைத்தேர்தலில், தி.மு.க., ஐந்து தொகுதிகளில், வெற்றி பெற்றால், ஆறாவது எம்.பி., பதவி, அக்கட்சிக்கே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால், தற்போது தி.மு.க.,- காங்கிரஸ், முஸ்லிம் லீக் கூட்டணிக்கு, 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. இந்த கணக்கில், தி.மு.க.,விடம், 97 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், அக்கட்சிக்கு, இரண்டு எம்.பி.,க்களை தேர்வு செய்ய, 68 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் போதும். மீதம், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், ஐந்து தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றால், 34 எம்.எல்.ஏ.,க்கள் பலம் கிடைத்து விடும். அந்த சூழல் வந்தால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், தலா, மூன்று எம்.பி.,க்களை தேர்வு செய்ய முடியும்.

லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., அணியில், பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி வெற்றி பெற்றால், அவரது மனைவி சவுமியாவுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கலாம். அதேசமயம், அன்புமணி தோல்வி அடைந்தால், அவருக்கு தான், ராஜ்யசபா எம்.பி., பதவி போகும் என, அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அ.தி.மு.க.,வில், மைத்ரேயன், தளவாய்சுந்தரம், கோகுலஇந்திரா, வைகைச்செல்வன் போன்றவர்களின் பெயர்கள், பரிசீலனையில் உள்ளன. ஒருவேளை, கரூர் தொகுதியில், தம்பிதுரை தோல்வி அடைந்தால், அவரும் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்பார். லோக்சபா தேர்தலில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத, 'சிட்டிங்' எம்.பி.,க்கள் சிலரும், ராஜ்யசபா தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதியும், தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். எனவே, உதயநிதிக்கு எம்.பி., பதவி கிடைக்கலாம் என்றும், அவர் மறுத்து விட்டால், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு கிடைக்கலாம் என்றும், அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா, 'சீட்' தருவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ,எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.அதை, அவர் விரும்பவில்லை என்றால், அவரது மகன், துரை வையாபுரிக்கு, அந்த பதவி கிடைக்கலாம் என தெரிகிறது. சமீப காலமாக, அக்கட்சியில், துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

இப்படி சில கட்சிகளில், தலைவர்களின் வாரிசுகளும், குடும்பத்தினரும், ராஜ்யசபா எம்.பி., பதவியை விரும்புகின்றனர்.அதேபோல், கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளும் விரும்புகின்றனர். இவர்களில், யாருக்கு, கட்சிகளின் தலைமை, பதவி தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)