அ.தி.மு.க., ஓட்டு வங்கிக்கு 'செக்' வைத்த தி.மு.க.,

திருப்பரங்குன்றத்தில் அக்னி வெயிலின் தாக்கத்தை விட இடைத்தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. இன்னும் தேர்தலுக்கு ஏழு நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.,விற்கு அதிக ஓட்டு வங்கி உள்ள சில பகுதிகளில், தி.மு.க., இறங்கி வேலை செய்து ஓட்டுக்களை சிதைக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக வெளியான தகவல் ஆளும் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நான்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு சாதகமாக உள்ள தொகுதியாக திருப்பரங்குன்றம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் பல தேர்தல்களாக அ.தி.மு.க.,விற்கு ராசியானது என்ற முத்திரையுடன் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகே அமைக்கப்பட்ட, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தை இந்த முறை தி.மு.க., கைப்பற்றி முந்திக்கொண்டது.இதுகுறித்து ஆரம்பத்திலேயே அந்த இடத்தை அ.தி.மு.க., கோட்டை விட்டது என கட்சிக்குள் விமர்சனம் எழுந்தது. இத்தொகுதியில் 2016 தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட மணிமாறன் 70,462 ஓட்டுக்கள் பெற்றார். அதையடுத்து அதே ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட சரவணன் 70,362 ஓட்டுக்கள் பெற்றார். இந்த வகையில் தி.மு.க., ஓட்டு என்பது சிதறாமல் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
நடந்த இரண்டு தேர்தல்களிலும் திருநகர், நிலையூர், கைத்தறி நகர், சவுராஷ்டிரா காலனி உட்பட சவுராஷ்டிரா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி, வலையங்குளம், எலியார்பத்தி, நல்லுார், சோழங்குருணி, வலையப்பட்டி, பாரைப்பத்தி என முத்தரையர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, வடபழஞ்சி உட்பட பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள ஓட்டுக்களே அ.தி.மு.க., வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இப்பகுதிகளில் ஆய்வு செய்த தி.மு.க., தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு அ.தி.மு.க., ஓட்டுக்களை சிதைக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.


இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: ஆரம்பத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியை, யார் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பாவிற்கு இடையே பெரிய பலப் பரீட்சையே நடந்தது. முதல்வர் பழனிசாமி முதற்கட்ட பிரசாரத்திற்கு பின் தான் அ.தி.மு.க., தொகுதிக்குள் எழுச்சி பெற்றது. ஆனால் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே தி.மு.க.,வினர் களத்தில் இறங்கி விட்டனர்.அவர்கள் முதலில் அ.தி.மு.க., கட்சி அலுவலகமாக இருந்தஇடத்தை கைப்பற்றினர். சமூக ரீதியாக அதிக ஓட்டுக்கள் உள்ள தெற்கு ஒன்றியத்தை மூன்றாக பிரித்து, அங்கு அதிகம் வாழும் சமூக சார்ந்த நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன.


அ.தி.மு.க., ஓட்டு வங்கி உள்ள பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில், தினகரனின் அ.ம.மு.க., கட்சி விசுவாசிகளாக தற்போது உள்ளனர். இதனால் வெற்றிக்கு காரணமாக இருந்த, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை' உடைக்கும் பல உட்குத்து வேலைகளில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது. சவராஷ்டிர சமூக ஓட்டுக்களை கணிசமாக பிரிக்க முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோருக்கு பிரத்யேகமாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு பூத்திற்கு 100 பேர் தேர்வு செய்து ஐந்து குழுக்களாக பிரிந்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கணக்கில் அ.தி.மு.க.,வை தோற்கடிக்கும், தி.மு.க., வியூகங்களுக்கு அ.ம.மு.க., கடந்த சில நாட்களாக கை கொடுத்தும் வருகிறது.


ஆனால் அ.தி.மு.க.,வின் நிலை அமைச்சர்களையும், கடைசி நேர 'கவனிப்பையும்' நம்பி உள்ளது. தி.மு.க., கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுக்களை, இந்த தேர்தலில் பெற விடாமல் அதை உடைக்கும் வியூகத்தை அ.தி.மு.க., கையில் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் சூழ்நிலை உள்ளது என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)