கிழக்கு டில்லியில் மும்முனை போட்டி!

டில்லியில் உள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு, நாளை தேர்தல் நடக்க உள்ளது. இதில், கிழக்கு டில்லியில், பலத்த போட்டி நிலவுகிறது.பா.ஜ.,வில் சமீபத்தில் சேர்ந்துள்ள, பிரபல கிரிக்கெட் வீரர், கவுதம் கம்பீர் இந்த தொகுதியில் நிற்பதால், நாடு முழுதும் தெரியும் தொகுதியாக மாறியுள்ளது.எனினும், ஒழுங்கற்ற சாலைகள், குப்பை சூழ்ந்துள்ள தெருக்கள், ஆங்காங்கே காணப்படும் காயலான் கடைகள், திறந்த வெளி கழிப்பறைகள், தண்ணீர் தட்டுப்பாடு, வாகனங்கள் நிறுத்த இடமின்மை என, ஏராளமான பிரச்னைகளின் பூமியாக இந்த தொகுதி விளங்குகிறது.
ஏற்கனவே சொன்னது போல, பா.ஜ., சார்பில் கவுதம் கம்பீர்; காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித்தின் நீண்ட கால உதவியாளர், அரவிந்த் சிங் லவ்லி; ஆம் ஆத்மியின் ஆதிஷி மர்லேனா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.இந்த தொகுதியில், 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 15 மற்றும் 20 சதவீதமாக இருக்கும் தலித் மற்றும் முஸ்லிம் ஓட்டுகள் தான், வெற்றியை தீர்மானிக்கும் வகையில் உள்ளன. அந்த ஓட்டுகளை குறிவைத்தே, காங்கிரஸ், லவ்லியை களமிறக்கியுள்ளது.அதே நேரம், பிரதமர் மோடியின் நிர்வாகம், நடுநிலையாளர்கள், அரசு அதிகாரிகள், சிறந்த நிர்வாகத்தை விரும்பும் மக்களின் ஓட்டுகளை நம்பி, கம்பீரை களம் இறக்கியுள்ளது.
ஆம் ஆத்மியின் வேட்பாளர், ஆதிஷி மர்லேனா, ஆக்ஸ்போர்டில் படித்தவர். ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார்.இந்த தொகுதியில், ஓராண்டிற்கும் மேலாக, ஆதிஷி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தான் வேட்பாளர் என, ஆம் ஆத்மி முன்னதாகவே அறிவித்து விட்டதால், அவரின் பிரசாரம் பல சுற்றுகளாக நிறைவடைந்துள்ளது.காங்கிரஸ் வேட்பாளர் லவ்லி, 'முதல்வராக ஷீலா தீட்ஷித் இருந்த போது நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களை நானும் தொடர்வேன்' என கூறி, பிரசாரம் மேற்கொள்கிறார்.கம்பீர், 'சாலைகளை ஒழுங்குபடுத்துவேன்; வாகனங்கள் நிறுத்த வளாகங்களை கட்டித் தருவேன்; நகரங்களை சுத்தப்படுத்துவேன்' என்கிறார்.ஆம் ஆத்மியின் ஆதிஷி, 'என்னை தான் இந்த தொகுதி மக்கள் தேர்ந்தெடுப்பர். ஒட்டுமொத்த வளர்ச்சியை அளிப்பேன்' என, உறுதியளிக்கிறார்.போட்டி பலமாகவும், வெற்றி குறைந்த ஓட்டுகள் வித்தியாசமாகவும் இருக்கும் எனக், கூறப் படுவதால், இந்த தொகுதியின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


- கே.எஸ்.நாராயணன் -நமது சிறப்பு நிருபர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)