சுறுசுறுப்பு! டில்லியில் 21ம் தேதி எதிர்க்கட்சிகள் வியூகம்

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரு தினங்களுக்கு முன், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், டில்லியில் சந்திக்க திட்டமிட்டுள்ளதால், தேசிய அரசியல் களத்தில், அடுத்த கட்ட நகர்வு ஆரம்பமாகியுள்ளது.லோக்சபாவுக்கு, ஐந்து கட்ட தேர்தல் முடிந்து உள்ள நிலையில், கடைசி இரண்டு கட்டங்களுக்கான பிரசாரம் தீவிரமாகிஉள்ளது. வரும், 12 மற்றும் 19ம் தேதிகளில், தேர்தல் நடந்து முடிந்தவுடன், 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.

திருப்பம்:இந்நிலையில், பிரசாரக் களத்தில் தீவிரமாக இருந்த தேசிய அரசியல், தற்போது டில்லியை நோக்கி திரும்பியுள்ளது. அதன் துவக்கமாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, நேற்று, டில்லியில், காங்., தலைவர், ராகுலை சந்தித்துப் பேசினார்.


முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தன் அரசியல் எதிரியும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவ், தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையை கையாள்வதையும், முக்கிய தலைவர்களை அவர் சந்திப்பதையும், சந்திரபாபு நாயுடு உற்று நோக்கத் துவங்கியுள்ளார். கடந்த காலங்களில், மூன்றாவது அணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக, தான் வலம் வந்துள்ள நிலையில், தனக்கு போட்டியாக சந்திரசேகர ராவ் வருவதை, சந்திரபாபு நாயுடு விரும்பவில்லை.


கேரள முதல்வர், பினராயி விஜயன், கர்நாடக முதல்வர், குமாரசாமி ஆகியோருடன், சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தியதற்கு பதிலடியாக, ராகுலை சந்தித்தார் சந்திரபாபு. 'பெரடல் பிரண்ட்' என்ற பெயரில், சந்திரசேகர ராவ், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியின் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக பலருக்கும் சந்தேகம் உள்ளது.


இது குறித்து, ராகுலுடன் விரிவாக ஆலோசித்த சந்திரபாபு நாயுடு, கோல்கட்டா கிளம்பிச் சென்றார். மேற்கு வங்கத்தில், இன்றும், நாளையும் நடக்கும் திரிணமுல் காங்கிரஸ் பேரணியில், மம்தாவுடன் அவர் பங்கேற்கிறார். அப்போது, தேசிய அரசியல் குறித்து, மம்தாவுடன் ஆலோசனை செய்ய உள்ளார். சந்திரபாபு, ராகுல் சந்திப்பின்போது போது, முக்கிய முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

முடிவு:அதாவது, ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதும் பா.ஜ., தான் தனிப்பெரும் கட்சியாக வரும்; அந்த சமயத்தில், பா.ஜ.,வை ஆட்சியைமக்க, ஜனாதிபதி அழைத்து விடாமல் தடுக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. கடந்த, 1998ல், பா.ஜ., ஆட்சியமைக்க முயன்றபோது, அப்போதைய ஜனாதிபதி, கே.ஆர்.நாராயணன், பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வாங்கிய பின், வாஜ்பாய் ஆட்சியமைக்க அனுமதியளித்தார்.


அதேபோல இம்முறையும், பெரும்பான்மையை உறுதி செய்யும் அணிக்கே, ஆட்சியமைக்க வாய்ப்பளிக்க வேண்டுமென, ஜனாதிபதியை வலியுறுத்த, பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்கள் கூடி பேசவுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், 23ம் தேதிக்கு இரண்டு தினங்கள் முன், அதாவது, 21ம் தேதி, டில்லியில், காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட, 21 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாயாவதியின் அதிரடி திட்டம்: எதிர்க்கட்சிகளின், மெகா கூட்டணி யில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் நடத்திய பல ஆலோசனை கூட்டங்களில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்களான, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிகள் பங்கேற்றன. ஆனால், இந்த லோக்சபா தேர்தலில், இவ்விரு கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 'வாய்ப்பு கிடைத்தால், பிரதமர் பதவிக்கு தயார்' என, மாயாவதி கூறியுள்ளார். நாட்டிலேயே, 80 தொகுதிகள் உள்ள, உ.பி.,யில், அதிக தொகுதிகளில் வென்று, தேர்தலுக்குப் பின், தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற முனைப்பில், மாயாவதி உள்ளார். ஏழு கட்டங்களிலும், உ.பி., தேர்தலை சந்திப்பதால், அடுத்த இரண்டு கட்டங்களில் தேர்தல் நடக்க உள்ள, 27 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மெகா கூட்டணி நடத்தும் கூட்டத்தில், மாயாவதி, அகிலேஷ் பங்கேற்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராகுல், மம்தா திடீர் மனமாற்றம்: மேற்கு வங்கத்தில் உள்ள, 42 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த, ஐந்து கட்ட பிரசாரத்தின்போது, மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, பா.ஜ., மற்றும் காங்.,கை கடுமையாக விமர்சித்து வந்தார். அது போலவே, காங்., மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல், திரிணமுல் காங்.,கையும், மம்தாவையும் விமர்சித்து வந்தனர். தற்போது, தேசிய அளவில், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், புருலியா மாவட்டத்தில் நேற்று நடந்த தங்களுடைய கட்சியின் பிரசார கூட்டங்களில், ராகுல் மற்றும் மம்தா பானர்ஜி பங்கேற்றனர். ஆனால், காங்., குறித்து, மம்தா எதுவும் பேசவில்லை. அதேபோல், திரிணமுல் காங்., குறித்து, ராகுல் எந்த விமர்சனமும் செய்யவில்லை. இவ்விரு கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மனமாற்றம், மெகா கூட்டணியில், இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)