மோடி- பவார் கூட்டணி கணக்கு

புதுடில்லி: தேர்தலுக்குப் பிறகு கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மோடி - பவார் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மகாராஷ்டிராவில் உள்ள பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி பேசுவதாக இருந்தது. இந்நிகழ்ச்சியை மோடி திடீரென ரத்து செய்தார்.

பின்னணி என்ன ?இதன் பின்னணியில் சில அரசியல் உத்திகள் இருப்பதாக கூறுகின்றனர். தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்க சில இடங்கள் பா.ஜ.,வுக்கு தேவைப்படலாம். அப்படி ஒரு நிலைமை வந்தால், தேசியவாத காங்.,கின் ஆதரவை கேட்க வேண்டி இருக்கும். இதை மனதில் வைத்தே, அக்கட்சிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக, சுப்ரியாவுக்கு எதிரான பிரசார கூட்டத்தை மோடி ரத்து செய்துள்ளார் என்கின்றனர். மோடிக்குப் பதிலாக அமித்ஷா மட்டும் கூட்டத்திற்கு சென்றார். இங்கு நாளை (ஏப்.24) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மோடி இப்படி நினைத்தாலும், மகாராஷ்டிரா பா.ஜ., கட்சியினர் மோடியை எதிர்பார்த்தனர். ஏற்கனவே நடந்த 7 கூட்டங்களில் சரத் பவாரை குறிவைத்து பேசினார் மோடி. ஆனால் அப்போது கூட பவார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி அதிகம் பேசவில்லை. 8 வது கூட்டத்தை திடீரென மோடி ரத்து செய்தது தே.கா., கட்சியினரை குழப்பத்திலும் பா.ஜ.,வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 9 -12 இடங்களை தே.கா., பெறக்கூடும் என மோடிக்கு தகவல் கிடைத்துள்ளது. காங்.,கிற்கு 8-10 இடங்கள் கிடைக்கும் என்கின்றனர். ஒரு வேளை தொங்கு பார்லிமென்ட் ஏற்பட்டால், தே.கா., ஆதரவைப் பெறலாம் என மோடி எண்ணி உள்ளார். லாத்துாரில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, ‛‛பவார் ஒரு ஆளுமை மிக்க அரசியல்வாதி. அப்படிப்பட்டவர் காங்., போன்ற கட்சியுடன் எப்படி கூட்டணி வைத்தார்'' என்று கேள்வி எழுப்பினார்.


அகமத்நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, ‛‛காஷ்மீரில் இரண்டு பிரதமர்கள் இருப்பதைப் பற்றி பேசுகின்றனர். இதைக் கேட்டு எப்படி மவுனமாக இருக்க முடியும். காங்., உடன் கைகுலுக்கிய பிறகு, நமது நாட்டை வெளிநாட்டினரின் கண்கள் மூலம் பார்க்கிறீர்கள். இரவில் உங்களால் எப்படி துாங்க முடிகிறது'' என்று பவாரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். மோடி இப்படி பேசியதன் மூலம், பவாரை ஒரு தேசியவாத தலைவராக மோடி காண்பித்தார்.
சில இடங்களில் பவார் பற்றி மோடி கடுமையாக பேசினாலும், பவார் அதற்கு பதில் அளிக்கவில்லை. பாராமதி கூட்டத்தை மோடி ரத்து செய்தது பற்றி கருத்து கூறிய பவார், ‛‛மோடியை நினைத்தால் பயமாக இருக்கிறது. அடுத்து என்ன செய்வார் என்றே தெரியவில்லை. என்னிடம் இருந்து அரசியல் கற்றதாக ஒரு முறை மோடி கூறினார். ஆனால் இப்போதெல்லாம் இந்த மனிதர் (மோடி) என்ன செய்வார் என்று நான் தான் அஞ்ச வேண்டி உள்ளது'' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)