ஜெயப்ரதாவை ஆபாசமாக பேசிய ஆசம் கான் மீது வழக்கு

லக்னோ:நடிகையும், உ.பி., மாநிலம், ராம்பூர் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளருமான, ஜெயப்ரதாவை ஆபாசமாக பேசியதாக, சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


உத்தர பிரதேச மாநிலத் தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ராம்பூர் லோக்சபா தொகுதி யில், பா.ஜ., சார்பில், பிரபல நடிகை, ஜெயப்ரதா, 56, போட்டி யிடுகிறார். இவரை எதிர்த்து, சமாஜ்வாதி சார்பில், அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், 70, போட்டியிடுகிறார்.ஜெயப்ரதா, ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியில் இருந்த போது, அவருக்கும், ஆசம் கானுக்கும், தகராறு இருந்தது.


ஆசம் கான், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ஜெயப்ரதா கூறியிருந்தார்.இந்நிலையில், தற்போதைய தேர்தலில், இருவரும் ஒரே தொகுதியில், எதிரும் புதிருமாக, இவர்கள் களம் இறங்கியிருப்பது, உ.பி.,யில், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சர்ச்சை


சமீபத்தில், ராம்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில், ஆசம் கான் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியதாவது:ராம்பூர் தொகுதி மக்களுக்கு, அந்த நடிகையின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்வதற்கு, 17 ஆண்டுகளாகி விட்டது. ஆனால், அவர், காக்கி உள்ளாடை அணிந்தவர் என்பது, எனக்கு, 17 நாட்களிலேயே தெரிந்து விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.ஜெயப்ரதா, ஆர்.எஸ்.எஸ்., பின்னணி உள்ளவர் என, மறைமுகமாக குறிப்பிடும் வகையில், ஆசம் கான் இவ்வாறு பேசியதாக, சர்ச்சை எழுந்தது.


கொடுமைகள்


இது குறித்து, ஜெயப்ரதா கூறியதாவது:ஆசம் கான் பேசியது, எனக்கு ஆச்சரியம் அளிக்க வில்லை. அவர், இப்படிப்பட்டவர் தான் என, ஏற்கனவே தெரியும். பலமுறை இது குறித்து தெரிவித்துள்ளேன். ஆனால், யாருமே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.நான் ஒரு பெண். அவரைப் போல், தரக்குறைவாக பேச முடியாது.


பெண்களுக்கு எதிரான குணம் உடைய ஒருவரை, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர் வெற்றி பெற்றால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும். ஜனநாயகமே இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, ஆபாசமாக பேசியதாக, ஆசம் கானுக்கு எதிராக, உ.பி., போலீசார், வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.


தேசிய மகளிர் ஆணையமும், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, ஆசம் கானுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.ஜெயப்ரதா, சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மவுனம் ஏன்?


தங்கள் கட்சி பிரமுகர், ஒரு பெண்ணை, தரக்குறைவாக விமர்சிப்பதை, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன்? மகாபாரதத்தில், திரவுபதி அவமதிக்கப்படும்போது, பீஷ்மர் மவுனமாக இருந்தது போல், நீங்களும் அமைதியாக இருக்கிறீர்களா?


சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)