இருபது கோடி ரூபாய் செலவு செய்வதாகக் கூறி, 'சீட்' பெற்ற, தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள், சொந்த காசை எடுக்க தயங்குவதுடன், கட்சி தலைமையிடம் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். இதனால், அதிருப்தி அடைந்த, காங்கிரஸ் தலைமை, 'இவர்களுக்கு ஏன், 'சீட்' கொடுத்தோம்' என, புலம்ப துவங்கி உள்ளது. இதற்கிடையில், தேர்தல் நன்கொடை என, வர்த்தகர்களிடம் வசூலித்த, கோடிக்கணக்கான ரூபாயையும், காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சியினர் கண்ணில் காட்டாமல், பதுக்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.
'உதார்!'
தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு நடந்தபோது, துவக்கத்தில், காங்கிரஸ் கட்சிக்கு, ஆறு தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., விருப்பம் தெரிவித்தது. காரணம், தி.மு.க., 'சீட்' கொடுக்க விரும்பிய, ஆறு வேட்பாளர்களும், பணம் பலம் படைத்தவர்கள் என்பதால், அவர்கள், தி.மு.க.,வின் தயவை எதிர்பார்க்க மாட்டார்கள்; சொந்த செலவில், தேர்தலை சந்திப்பர் என, தி.மு.க., கருதியது. ஆனால், காங்கிரஸ்
தலைவர் தலைவர் ராகுல் வலியுறுத்தல் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், 10 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கியது. தமிழக காங்கிரசில், விருப்ப மனு வாங்கியபோது, சீட் கேட்ட பெரும்பாலானோர், 'தொகுதிக்கு, 10 கோடி முதல், 20 கோடி ரூபாய் வரை செலவு செய்வோம்' என, 'உதார்' விட்டுள்ளனர்.
ரூ.2 கோடி:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடமும், தங்களால் இத்தனை கோடி செலவு செய்ய முடியும் என, உறுதி அளித்துள்ளனர். ஆனால், சீட் வாங்கிய பின், சில வேட்பாளர்களை தவிர, பெரும்பான்மையான வேட்பாளர்கள், கட்சித் தலைமையிடம், பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த, ஞானதேசிகன் வாயிலாக, முதல் கட்டமாக, 25 லட்சம், அடுத்தக்கட்டமாக, 25 லட்சம் ரூபாய் என, தலா, 50 லட்சம் ரூபாய் வரை, வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்காக, டில்லி மேலிடம் வழங்கியது.
தற்போது, தொகுதிக்கு, முதல் கட்டமாக, 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டில்லி மேலிடம் கொடுத்து அனுப்பிய பணத்தையும், சில வேட்பாளர்கள் சரிவர செலவு செய்யாமல், பதுக்கி விட்டனர். சில வேட்பாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைமையிடமும், மேலிட பொறுப்பாளர்களிடமும் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். அவர்களோ, 'இந்த மாதிரியான வேட்பாளர்களை, ஏன் தேர்வு செய்தோம்; செலவு செய்ய தயாராக
இருந்தவர்களை ஒதுக்கி விட்டு, இவர்களுக்கு, சீட் கொடுத்தது பெரிய தவறு' என, புலம்புகின்றனர்.
'பாதுகாப்பு'
நேர்காணலில், அவ்வளவு செலவு செய்வோம்; இவ்வளவு செலவு செய்வோம் என்றவர்கள், தற்போது, பணம் கேட்டு நச்சரிப்பதால், தமிழக காங்கிரஸ் தலைமை, கடும் விரக்தியில் உள்ளது. இதற்கிடையில், தி.மு.க., தரப்பிலிருந்து, குறிப்பிட்ட தொகை, பூத் கமிட்டி செலவுக்கு தரப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் ஏற்பாடுகளும், தி.மு.க., தரப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் செலவை, கடைசி கட்டமாக, தி.மு.க.,வே ஏற்பதாலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை வீசுவதாலும், சுலபமாக வெற்றி பெறலாம் என, காங்கிரஸ் வேட்பாளர்கள் கருதுகின்றனர். அதனால், வசூலித்த பணத்தை, பாதுகாப்பாக, வீட்டில் வைத்து விட்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து