ஓட்டுக்கேற்ப கிராமங்களுக்கு வசதி; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேனகா

சுல்தான்பூர்: ''எனக்கு எந்த கிராமத்தில் அதிக ஓட்டு கிடைக் கிறதோ, அங்கு முன்னுரிமை அடிப்படையில் வசதிகளை செய்து தருவேன்,'' என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், மேனகா தெரிவித்தது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சுல்தான்பூர் லோச்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில், மேனகா போட்டியிடுகிறார். அவர், சமீபத்தில், 'முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்காவிட்டாலும், வெற்றி பெறுவேன் என்பதால், என் தயவு தேவை என்பதை, அவர்கள் மறக்கக் கூடாது' என, எச்சரித்தார்.

மேலும், 'எனக்கு ஓட்டளிக்காத முஸ்லிம்கள், வேலை உதவி கேட்டு வரவேண்டாம்' என்றும் கூறினார். இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து, மேனகாவிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்நிலையில், சுல்தான்பூர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில், மேனகா கூறியதாவது: என் மகன் வருண் போட்டியிடும், பிலிப்பிட் தொகுதியில், நாங்கள் தொடர்ந்து வென்று வருகிறோம். அங்கு, பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டளித்த கிராமங்களை, 'ஏ, பி, சி, டி' என, தரம் பிரித்து உள்ளோம். திட்டங்களை செயல்படுத்தும்போது, அதிக அளவில், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த, 'ஏ' கிராமங்களுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. அடுத்து தான், 'பி, சி, டி' கிராமங்களுக்கு வசதி கிடைக்கிறது.

இதேபோல, சுல்தான்பூரிலும், எனக்கு அதிக அளவில் ஓட்டு போட்ட, கிராமங்கள், தேர்தலுக்கு பின், 'ஏ, பி, சி, டி' என, பிரிக்கப்பட்டு, அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் நன்மை செய்யவே, தேர்தலில் போட்டியிடுகிறேன். அதனால், எனக்கு குறைவாக ஓட்டளித்து, 'டி' பிரிவில் யாரும் சேரவேண்டாம் என்பதே, என் வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பதவிப் பிரமாணத்தின்போது, 'அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக, விருப்பு, வெறுப்பின்றி பாடுபடுவேன்' என, உறுதிமொழி ஏற்கின்றனர். இந்நிலையில், தனக்கு விழும் ஓட்டுகள் அடிப்படையில், கிராமங்களுக்கு வசதி கிடைக்கும் என, மேனகா தெரிவித்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)