விவசாய சங்க தலைவர்களின் சுயநலம்: லோக்சபா தேர்தலில், 'பளிச்'

விவசாயிகளுக்கு பாடுபடுவதாக கூறிய, அனைத்து விவசாய சங்கத் தலைவர்களின் சுயநல முகமூடிகள், இந்த பார்லிமென்ட் தேர்தலில், கிழிந்து தொங்குகின்றன.


தமிழகத்தில், இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் எல்லாம், முக்கியமாக, காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றோர், காவிரி பிரச்னை ஆகட்டும், விவசாயம் தொடர்பான முக்கிய முடிவுகள் ஆகட்டும், எதுவாக இருந்தாலும், அப்போது இருந்த விவசாய சங்கத் தலைவர்களை அழைத்து, ஆலோசித்து, முடிவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதேபோல், அந்த தலைவர்களும் எப்போது வேண்டுமானாலும்,முதல்வர்களை சந்திக்கும் அளவுக்கு செல்வாக்குமிக்கவர்களாக இருந்தனர்.


போராட்டம்
அப்போது இருந்த விவசாய சங்கத்தின் தலைவர் யாரும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரை நிர்வாண ஊர்வலம் செல்லவில்லை; எலிக்கறி திங்கவில்லை, பயிர்களை, கலெக்டர் அலுவலகத்தில் கொட்டி போராட்டம் நடத்தவில்லை. குறிப்பாக, தனி நபர் பிரபலமாகும் வகையில், எந்த நுாதன போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால், தற்போதுள்ள விவசாய சங்கத்தினர், தினமும் ஊடகங்களில் தங்களது பெயர், போட்டோ வர வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு நுாதன போராட்டங்களை, 'விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம்' என்ற சாக்கில் செய்து வருகின்றனர்.


விவசாயிகளின் பிரச்னைக்காக ஒன்றுகூடி போராடாமல், ஆளாளுக்கு ஒரு விவசாய சங்கம் வைத்து, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்து, செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடைய நோக்கம், அவர்களின் பெயர், படம், ஊடகங்களில் தினமும் வெளிவர வேண்டும் என்பது மட்டுமே.இந்நிலையில் தான், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. விளம்பர பிரியர்களான சில குறிப்பிட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள், தங்களுக்கு, 'ஆதாயம்' கிடைக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பேச ஆரம்பித்துள்ளனர்.


விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாக்கண்ணு, டில்லியில் சென்று, அரை நிர்வாண போராட்டம் எல்லாம் நடத்தி, பல ஆண்டுகளாக எதிர்த்து வந்த, பா.ஜ., கட்சியை ஆதரித்து, ஒரே நாள் இரவில் அறிக்கை விடுகிறார்.'அரசியல் சார்பற்றது' எனக் கூறும், ஏரி, ஆற்றுப்பாசன விவசாய சங்கத் தலைவர் விஸ்வநாதன் என்பவர், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசார கூட்டங்களில் பங்கேற்று, ஸ்டாலினுக்கு முதல் ஆளாக வணக்கம் போடுகிறார்.


அந்தர்பல்டி
அய்யாக்கண்ணு, 'பா.ஜ., தேர்தல் அறிக்கை சூப்பர்' என்கிறார். பி.ஆர்.பாண்டியன், விஸ்வநாதன் ஆகியோர், 'காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கை சூப்பர்' என்கின்றனர்.முதல் நாள், தி.மு.க., பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அய்யாக்கண்ணு, அந்த கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது தன் கடமை என, பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சூளுரைத்தார். அடுத்த நாள், 'பா.ஜ.,வுக்கு ஆதரவு' என, அந்தர்பல்டி அடித்தார். விவசாயிகளின் நலனுக்காக, நடிகர் கமல், தினகரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் எல்லாம், தற்போது, அவர்களுக்கு எதிரான கட்சிகளுக்கு ஆதரவு கோஷம் போட்டு வருகின்றனர். இது, விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விவசாய சங்கத் தலைவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், அடியோடு குறைத்து விட்டது.

- பி.ஜெகன்னாத் -

சமூக ஆர்வலர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)