12 தொகுதிகளில் 'ரெட்' அலர்ட்

'லோக்சபா தேர்தலில், சில தொகுதிகளில், இதுவரை காணாத வன்முறை வெடிக்கலாம்' என, தமிழக அரசுக்கு உளவுத்துறை போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். பதற்றம் மிகுந்த, 12 தொகுதிகளை தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. 'இவற்றில் எப்போது வேண்டுமானாலும் சம்பவங்கள் நடக்கலாம்' என, சிவப்புக் கொடியை ஏற்றியிருக்கிறது.1. மத்திய சென்னை2. ஸ்ரீபெரும்புதுார்3. தர்மபுரி4. கிருஷ்ணகிரி5. அரக்கோணம்6. ஆரணி7. விழுப்புரம்8. சிதம்பரம்9. திண்டுக்கல்10. தேனி11. நாமக்கல்12. கன்னியாகுமரி
இதில், ஏழு தொகுதிகளில், பா.ம.க., போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகளுக்கும், பா.ம.க.,வுக்கும் இடையே பிரச்னைகள் உள்ளன. வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வந்தால் சென்றால், ஊருக்குள் விடாமல் விரட்டி அடிப்பதாக, பரஸ்பரம் புகார் கூறுகின்றனர்.அரக்கோணம் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை, திருத்தணி பகுதியில், காலி குடங்களுடன் தலித் பெண்கள் தடுத்து அனுப்பி விட்டனர். தர்மபுரியில் அன்புமணி, கிருஷ்ணகிரியில் முனுசாமி உள்ளிட்ட பலரும், இதே பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம், ரவிக்குமார் போட்டியிடும் விழுப்புரம் தொகுதிகளில், இந்த பிரச்னையை, பா.ம.க.,வால் எதிர்கொள்கின்றனர். அதையும் மீறி, இருவரும் ஓட்டு கேட்டு சென்றாலும், அவர்கள் திரும்பி சென்ற பின், மோதல் வெடித்துள்ளது.
தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என, பா.ம.க.,வும், அன்புமணியை வீழ்த்தியே தீரவேண்டும் என விடுதலை சிறுத்தைகளும் சபதம் போட்டு வேலை செய்கின்றனர். தி.மு.க.,வும் இந்த தொகுதி மீது தனி கவனம் செலுத்துகிறது. இதனால், கட்சி சாராத பொதுமக்கள் பீதியுடன் நடமாடுகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்., செயல் தலைவர் எச்.வசந்தகுமார் மோதுகின்றனர். இந்துக்கள், 60 சதவீதம்; கிறிஸ்துவர்கள், 40 சதவீதம். கிறிஸ்துவர் ஓட்டு நமக்கு வராது என்ற எண்னத்தில் இந்து ஓட்டுகளை முழுமையாக அள்ள, பா.ஜ., பாடுபடுகிறது. ஆனால், கிறிஸ்துவர் ஓட்டு மட்டும் போதாது என்பதால் இந்து ஓட்டுகளை குறிவைத்து வசந்தகுமார் மிகத்தீவிரமாக வேலை செய்கிறார். இது, பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை. கோடை அனலைவிட கட்சிக்காரர்களின் மூச்சுக்காற்றில் உஷ்ணம் அதிகம் தெரிவதாக போலீஸ், 'ரிப்போர்ட்' சொல்கிறது.தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் குமார், அ.ம.மு.க., கொள்கை பரப்புச் செயலர் தங்கத் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகின்றனர். ஒருவரை ஒருவர் தோற்கடிக்க சத்தியம் செய்திருப்பதால், முட்டல் - மோதல்களின் உச்சகட்டமாக வன்முறை வெடிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. காங்., வேட்பாளர் இளங்கோவனுக்கு மொத்தமாக விழும் என நம்பப்பட்ட, முஸ்லிம் ஓட்டுகளை பிரிக்க, மற்ற இரு கட்சிகளும் மோதுவதால் இன்னும் பதற்றம்.
நாமக்கல் தொகுதியில் பெரும்பான்மை கவுண்டர்களுக்கும், தலித் அமைப்புகளுக்கும் இடையே விரோதம் நிலவுகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், தலித்களோடு சேர்ந்து ஓட்டு கேட்பது, அவர் மீது, கவுண்டர்களை கோபம் கொள்ள செய்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகுகூட, இதனால் வன்முறை நடக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஏனைய பல மாநிலங்கள் போல் இன்றி, தமிழகத்தில் தேர்தல் கலவரங்கள் நடப்பது இல்லை. பிரசாரத்தில், எள்ளும், கொள்ளும் வெடித்தாலும், ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடியும். இந்த முறை அந்த நல்ல பெயருக்கு களங்கம் உண்டாகாமல் தடுக்க, தேர்தல் கமிஷன் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)