வைகோவிற்கு ஒரு நியாயம், உங்களுக்கொரு நியாயமா? அழகிரியை உசுப்பேற்றும் உடன் பிறப்புக்கள்

மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதியில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., வீரஇளவரசன் மறைவுக்கு பின், நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில், லதா அதியமானை, 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தவர், மு.க.அழகிரி. அந்த தொகுதி, அ.தி.மு.க., விற்கு ஆதரவானது. எனினும், தி.மு.க.,வை வரலாறு காணாத வகையில் வெற்றி பெற வைத்தார். இதற்காக அவர் எடுத்து கொண்ட அசுர ஆயுதம், நாட்டையே, 'திருமங்கலம் பார்முலா' என, திரும்பி பார்க்க வைத்தது.

அமைப்பு செயலர் பதவி:அந்தளவிற்கு இரவு, பகல் பாராமல் கட்சிக்காக உழைத்தவர், அழகிரி என, இன்றளவும் ஆதரவாளர்கள் பெருமைப்படுகின்றனர். திருமங்கலம் வெற்றிக்கனியை, தந்த அழகிரிக்கு, தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை தந்தார், கருணாநிதி. சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும், அழகிரியுடன் இணைந்து ஸ்டாலின் பணியாற்றினார். அப்போது ஸ்டாலினிடம் நிருபர்கள், 'அழகிரியுடன் இணைந்து செயல்பட மறுப்பதாக செய்தி வருகிறதே' என கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ''இப்போது கூட நானும், அழகிரியும் இணைந்து தான் இங்கிருக்கிறோம்' என்றார். எனினும், ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கடைசி வரை, 'ஒட்டவே' இல்லை.


தலைகீழ்:கடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, 'முதல்வர்' பதவி ஆசை காட்டி தன் பக்கம் இழுத்தும், கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்தும், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மூன்றாவது அணி அமைத்து, படுதோல்வி அடைந்தார். அந்த தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடிக்க இயலவில்லை; எதிர்கட்சியானது. ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. ஜெ., வெற்றி குறித்து வைகோ, 'என் ராஜதந்திரத்தால் தான், தி.மு.க., தோல்வி அடைந்தது' என, பகிரங்கமாக கூறினார். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து, தி.மு.க., - காங்கிரசை, வைகோ தன்னால் முடிந்தளவு வறுத்தெடுத்தார். தற்போது நிலைமையே தலைகீழ். கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க.,வுடன் ஐக்கியமான வைகோ, 'என் வாழ்நாளில் ஸ்டாலினை, முதல்வராக ஆக்காமல் விடமாட்டேன்' என சூளுரைத்து, தேர்தல் பணியில், 'பிசி'யாக உள்ளார்.

கேவலமாக விமர்சனம்:கருணாநிதி, ஸ்டாலின், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த, வைகோவை, வாரி அணைத்து, ம.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் ஸ்டாலினின் செயல்பாடு, அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தி.மு.க., தலைவர், கருணாநிதியை தவிர, வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது' என, கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை, ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி குரல் கொடுத்து வந்தார். கருணாநிதி மறைவுக்கு பின், 'ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயாரா' என, கேள்வி எழுப்பினார்.

தன் ஆதரவாளர்களுடன், கருணாநிதி நினைவிடம் சென்று, பலத்தை காட்டினார். எனினும், ஸ்டாலின் தரப்பு மசியவில்லை. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தவுடன், 'என் முடிவை ஒரு வாரத்தில் அறிவிப்பேன்' என, அழகிரி கூறினார். தி.மு.க.,வில், அவர் மீண்டும் இணைவது, எட்டாக்கனியாகி விட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

'படுகேவலமாக விமர்சனம் செய்த வைகோவிற்கு ஒரு நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயமா? அப்படி ஒன்றும் நீங்கள், தி.மு.க.,விற்கு அநீதியாக செயல்படவில்லையே...' என, ஆதரவாளர்கள் அழகிரியை உசுப்பேற்றி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாக, அழகிரி குரல் கொடுக்க உள்ளதாக, நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)