நெருங்குது தேர்தல்: 'டென்ஷனில்' நவீன்

வரும், 11ல், நாடு முழுவதும், 91 லோக்சபா தொகுதிகளுக்கு, முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது. 21 தொகுதிகள் உள்ள ஒடிசாவில், நான்கு தொகுதிகள், முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்கின்றன. வெற்றி வாய்ப்பு குறித்து எதிர்மறையான கணிப்புகள் வந்துள்ளதால், முதல்வர், நவீன் பட்நாயக், 'டென்ஷனில்' உள்ளார்.

நாபரங்க்புர், கோரபுட், காலஹந்தி, பெர்ஹாம்புர் ஆகிய நான்கு தொகுதிகள், 11ல் தேர்தலை சந்திக்க உள்ளன. பிரதமர், நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர், ராகுல் போன்றோர், இங்கு பிரசாரம் செய்துள்ளனர்.

முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளத்தின் நிலைமை, ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், அதன் வெற்றி வாய்ப்பு மங்கியுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு என்ற, அரசு சாரா நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், '18 ஆண்டுகளாக, பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்தாலும், இந்த நான்கு தொகுதிகளும், மிகவும் பிற்பட்ட தொகுதிகளாகவே உள்ளன' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

'காலஹந்தி தொகுதியில், 1980களில், வறட்சி, பட்டினி இருந்தது. தற்போது அந்த அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும், இப்போதும் அந்தத் தொகுதி, மிகவும் பின்தங்கிய தொகுதியாகவே உள்ளது' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளில், காங்கிரஸ், பா.ஜ., மற்றும் பிஜு ஜனதா தளம் போட்டியிடுவதால், கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய சூழ்நிலையில், இந்தத் தொகுதிகளை தக்க வைக்க முடியுமா என்ற நிலையில், மிகப் பெரிய சவால், நவீனுக்கு ஏற்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து, பல மூத்த தலைவர்கள் விலகி, பா.ஜ.,வில் இணைந்தது; ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை, லோக்சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற கவலையில் உள்ளார், அவர்.
- சாந்தனு பானர்ஜி -சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)