இடுக்கி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம்

கூடலுார்: 'நான் வெற்றி பெற்றால், பெரியாறு அணையை இடித்து, அதற்கு அருகில், புதிய அணை கட்டுவேன்' என, தேர்தல் வாக்குறுதி அளித்த, இடுக்கி தொகுதி வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜுக்கு எதிராக, தமிழக விவசாயிகள், அங்கு பிரசாரம் செய்கின்றனர்.

லோக்சபா தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, தமிழக - கேரள வேட்பாளர்கள், பெரியாறு அணைப் பிரச்னையை, தேர்தல் வாக்குறுதியாக அளிக்க தவறுவது இல்லை.இந்நிலையில் கேரளா, இடுக்கி லோக்சபா தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரவு பெற்ற, சுயேச்சை வேட்பாளரான தற்போதைய, எம்.பி., ஜாய்ஸ் ஜார்ஜ் களத்தில் உள்ளார்.

இவரை எதிர்த்து, காங்., சார்பில் டீன் குரிய கோஸ் போட்டியிடுகிறார்.இதில் ஜாய்ஸ் ஜார்ஜ், தன் தேர்தல் வாக்குறுதியில், 'பெரியாறு அணையை இடித்து, அதற்கு அருகில் புதிய அணை கட்டியே தீருவேன்' என்பது, முக்கிய இடம் பிடித்துள்ளது.இதைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர், எஸ்.ஆர்.தேவர் தலைமையில் விவசாயிகள், இடுக்கி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

அங்குள்ள பார்வர்டு பிளாக் கட்சியினருடன் இணைந்து, 20க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள், பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜாய்ஸ் ஜார்ஜுக்கு ஓட்டளிக்கக் கூடாது என, வலியுறுத்தி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)