சோனியாவிடம் போணியாகாத பா.ஜ.,

புதுடில்லி: வலுவான வேட்பாளர் இல்லாததால் ரேபரேலி தொகுதியில் சோனியாவை தோற்கடிப்பது பா.ஜ.,வுக்கு சவாலாகவே உள்ளது.

உ.பி.,யில் உள்ள ரேபரேலி தொகுதி, இந்திரா குடும்பத்திற்கு நெருக்கமானது. காலம் காலமாக காங்.,கிற்கு ஓட்டளிப்பது அந்த தொகுதி மக்களின் வழக்கம். நேரு, அவரது மருமகன் பெரோஸ்காந்தி, மகள் இந்திரா என வரிசையாக அந்த குடும்பத்தினர் இங்கிருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த தொகுதியில் போட்டியிடும் சோனியாவை எதிர்த்துப் போட்டியிட பா.ஜ., சார்பில் முன்னாள் காங்., எம்.எல்.சி., தினேஷ் பிரதாப்சிங் நிறுத்தப்பட்டுள்ளார். காங்., கட்சியில் சோனியாவுக்கு நெருக்கமாக இருந்த இவர் சென்ற ஆண்டு தான் பா.ஜ.,வில் சேர்ந்தார். மோடியை அழைத்து ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்து விட்டார்.ஆனாலும், சோனியாவுக்கு தினேஷ் பிரதாப் சரியான போட்டியை தர முடியாது. ஏனெனில் ரேபரேலியில் ஜாதி, மதம் கடந்து சோனியாவுக்கு மக்கள் ஓட்டளிப்பர். கணிசமான முஸ்லீம் வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் காங்.,கிற்கு ஓட்டளித்தே பழகியவர்கள்.


2014 தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் அஜய் அகர்வாலை 3.53 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார் சோனியா. இருந்தாலும் 2017 சட்டசபை தேர்தலில் ரேபரேலிக்குள் அடங்கிய 5 சட்டசபை தொகுதிகளில் மூன்றில் பா.ஜ., வெற்றி பெற்றது.உடல்நிலை சரியில்லாததால் சமீபகாலமாக சோனியாவால் ரேபரேலிக்கு அடிக்கடி வர முடியவில்லை. இதனாலேயே இம்முறை சோனியாவுக்குப் பதில் மகள் பிரியங்கா அங்கு போட்டியிடுவார் என பேச்சு அடிபட்டது.ஆனால் மீண்டும் சோனியாவே போட்டியிடுகிறார். 2004 முதல் இந்த தொகுதியில் ஜெயித்து வரும் சோனியா இப்போது ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறார்.


இதில் இன்னொரு வினோதம் என்னவென்றால் 2007 முதல் சட்டசபை தேர்தல்களில் இந்த தொகுதியில் காங்., தோல்வி அடைந்தே வருகிறது. ஆனால் லோக்சபா தேர்தல் என்றால் காங்., மட்டுமே வெற்றி பெறுகிறது.அமேதியில் ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இராணி போன்ற வலுவான வேட்பாளரை நிறுத்திய பா.ஜ., ரேபரேலியில் மட்டும் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

காரணம் என்ன:அமேதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அருகில் உள்ள ரேபரேலியில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என பா.ஜ., கருதுவது காரணமாக இருக்கலாம். அமேதியிலும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் போட்டியிடும் அசம்கர் தொகுதியில் வெற்றி பெறுவோம் என பேசும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ரேபரேலி வெற்றி பற்றி பேசுவதில்லை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)