/ செய்திகள் /  உண்மை தொண்டர்களுக்கு தி.மு.க.,வில் எதிர்காலம் இல்லை: அ.தி.மு.க., மாஜி கணிப்பு

 உண்மை தொண்டர்களுக்கு தி.மு.க.,வில் எதிர்காலம் இல்லை: அ.தி.மு.க., மாஜி கணிப்பு

மதுரை: ''தி.மு.க., பலவீனமாக இருப்பதால் அ.தி.மு.க.,வில் இருந்து வருவோருக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, பதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்தார். அவர் கூறியதாவது: தொடர்ந்து சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க.,வை பழனிசாமி பாதுகாத்து வருகிறார். ஆனால், தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க., பொதுச் செயலரை மாற்றி விடுவர் என்ற பச்சை பொய்யை முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதை போல ஸ்டாலினும், பன்னீர்செல்வமும் அ.தி.மு.க., குறித்து கவலைப்படுகின்றனர். அ.தி.மு.க., வை ஒரு சாமானியர் வழிநடத்தி வருவதால், ஸ்டாலின் அச்சத்தில், 22 கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துள்ளார். அ.தி.மு.க.,வில் காலாவதியான தலைவர்களை கரையேற்றுகிறேன் என முதல்வர் வாக்குறுதி கொடுக்கிறார். தி.மு.க., பலவீனமாக இருப்பதால், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து இந்த ஆசை வார்த்தைகளைக் கூறுகிறார். அமைச்சர் பதவி வழங்குகிறார். இதன் வாயிலாக, தி.மு.க.,வின் உண்மை தொண்டர்களுக்கு தி.மு.க.,வில் எதிர்காலம் இல்லை என்று சூசகமாக சொல்கிறார். நீங்கள் எத்தனை துரோகம் செய்தாலும், உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.,வை யாரும் அசைக்க முடியாது. வரும் தேர்தலில் மக்கள் துரோகத்துக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர். ஜெ.,வின் பெயரால் சம்பாதித்த பணத்தை, அவரை அழிக்க நினைத்தோருக்கு செலவு செய்ய பன்னீர்செல்வம் துணிந்து விடடார். இந்தப் பாவம் பன்னீரை சும்மா விடாது. இதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். துரோகத்தை முகமூடியாக கொண்டுள்ள பன்னீர்செல்வம் விசுவாச வேஷம் போடுவதை மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !