/ செய்திகள் /  மூன்று முறை மூக்கறுபட்ட பா.ஜ.,

 மூன்று முறை மூக்கறுபட்ட பா.ஜ.,

- நமது நிருபர் - 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; 50 தொகுதிகளில் பா.ஜ., போட்டி; த.வெ.க., தலைவர் விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர போகிறோம்' என்றெல்லாம் முழக்கமிட்ட பா.ஜ., இன்று எதுவுமே செய்ய முடியாமல் மூக்கறுபட்டு நிற்கிறது. அ.தி.மு.க.,வை கைக்குள் கொண்டு வந்து, கூட்டணி ஆட்சியை நிறுவ, பா.ஜ., பல வியூகங்களை வகுத்தது. அதில் ஒன்று தான் டில்லி முக்கியஸ்தர்கள் செங்கோட்டையனை கிளப்பி விட்டது. சசிகலா, பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அணியை உருவாக்கி, பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ., முயன்றது. ஆனால், செங்கோட்டையனை அசால்ட்டாக கட்சியில் இருந்து நீக்கி, அந்த வியூகத்திற்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது ஒரு முறை பா.ஜ., மூக்கறுக்கப்பட்டது. --- இரண்டாவது வியூகமாக, த.வெ.க., தலைவர் விஜயை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ., முயன்றது. இந்த முயற்சிக்கு பின்னால், தே.ஜ., கூட்டணிக்குள் விஜயை கொண்டு வந்து, அ.தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிடுவதை தடுக்கவும், ஒரு திட்டம் ஒளிந்து கொண்டு இருந்தது.

துருப்பு சீட்டு

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைவதற்கு முன்பே, விஜயை இழுக்க பழனிசாமி முயற்சித்தார். எதற்குமே விஜய் ஒத்துவரமாட்டார் என தெரிந்தபின்தான், இந்த ஆண்டு துவக்கத்தில், விஜயை பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இருப்பினும், 'விஜயை நாங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருகிறோம். பீஹார் பாணியில், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' என கூறி, பா.ஜ., வரிந்துகட்டியது. அதற்கு ஏற்றாற்போல், கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை என்னும் துருப்பு சீட்டு பா.ஜ.,வுக்கு சிக்கியது. அதோடு, ஜனநாயகன் பட விவகாரம், வரி ஏய்ப்பு வழக்கு என அடுத்தடுத்து பா.ஜ., தரப்பிடம் விஜய் சிக்கினார். முதலில், ஜனநாயகன் தொடர்பாக தான் நகர்வு இருந்தது. அதற்காக, விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் மற்றும் நண்பர் விஷ்ணு ரெட்டி, பா.ஜ., மேலிடத்தை அணுகினர். அப்போது, 'நீங்கள் காங்கிரசுடன் கூட்டணி பேசுகிறீர்கள். அதை கைவிட்டால், என்ன உதவி செய்ய முடியும் என பார்க்கிறோம். எங்களுடன் கூட்டணி வைத்தால், 45 தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் கொடுப்போம்' என பா.ஜ., மேலிடம் தெரிவித்தது. அதையடுத்து தான், 'அ.தி.மு.க., கூட்டணியில், 100 தொகுதிகளை பெறப் போகிறோம். தே.ஜ., கூட்டணியில் முன்பிருந்த, அ.ம.மு.க, - பா.ம.க., - ஐ.ஜே.கே., உள்ளிட்ட எல்லாருக்கும் பா.ஜ.,தான் தொகுதி பங்கீடு செய்யும்; பா.ஜ., 35 தொகுதிகளுக்கு குறையாமல் நிற்கும்' என்றெல்லாம் நாள்தோறும் செய்திகளை கசிய விட்டனர்.

மீண்டும் அழைப்பு

அவர்களிடம், விஜய் தரப்பினர் சம்மதமும் தெரிவித்தனர். ஆனால், விஜயின் ஆலோசகர்களான ஆதவ் அர்ஜுனாவும், ஜான் ஆரோக்கியசாமியும் தொடர்ந்து காங்கிரசுடன் பேசி வந்தனர். அப்போது தான், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்துவிடும் என்ற பேச்சு உச்சத்தில் இருந்தது. ஒரு பக்கம், பா.ஜ.,வின் திட்டம் தெரிந்ததால், விஜய் உடனான பேச்சுக்கு, பழனிசாமி தடைபோட்டார். 'அ.தி.மு.க., தலைமையில்தான் கூட்டணி; அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும்' என பழனிசாமி அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தார். மறுபக்கம், ஜனநாயகன் படம் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்ற பாணியில் விஜய் தரப்பினர் செயல்பட்டது பா.ஜ.,விற்கு அதிர்ச்சியை தந்தது. இது, அவர்களுக்கு இரண்டாவது மூக்கறுப்பு. ராஜ்யசபா தேர்தலை ஒட்டி தி.மு.க., -- காங்., கூட்டணி உறுதியானது. அதனால், மீண்டும் கூட்டணி அழைப்பு, மார்ச் முதல் வாரத்தில் சி.பி.ஐ., சம்மன் வாயிலாக விஜய்க்கு வந்தது. இந்த முறை பல்முனை அழுத்தம் மற்றும் அவசரத்துடன் கூட்டணி பேச்சு நடந்தது. காரணம், பா.ஜ.,விற்கு ஐ.பி., அனுப்பிய சர்வே தகவல். அதில், த.வெ.க., குறைந்தபட்சம் 18 சதவீதம் ஓட்டுகளை பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க.,வின் மெகா கூட்டணி பிம்பமும் பண பல பிம்பமும் பா.ஜ.,விற்கு உண்மையிலேயே பீதியை ஏற்படுத்தியது.

முழு வீச்சு

அதனால் மூன்றாவது வியூகமாக, 'எப்பாடுபட்டாவது விஜயை கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும்' என்று முடிவெடுத்தனர். கள நிலவரங்களை கவனித்து வந்த பழனிசாமியும், விஜயை இழுக்க சம்மதித்தார். அவரும் கூட்டணி பேச்சுக்கு உதவினார். 'முழு வீச்சில் முயற்சி செய்ய வேண்டும்' என அமித் ஷா உத்தரவு போட்டார். அவரது மகன் ஜெய் ஷா, அனந்த் அம்பானி, பீயூஷ் கோயல், பா.ஜ.,வின் அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் சிலர் களம் இறக்கி விடப்பட்டனர். முதல் கட்டமாக, மும்பையில், விஜயின் தோழி த்ரிஷாவிடம் பேசிப் பார்த்தனர். அப்போது, '90 சீட் வேண்டும். முதல்வர் முகம் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும்' என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'முதல்வர் முகம் பற்றி பேசிக் கொள்ளலாம். ஆனால், 60 சீட் தான் தர முடியும்' என, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களும் 60 சீட்டுக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால், பழனிசாமி, '45க்கு மேல் தரவே முடியாது. முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன்' என்று கூறி விட்டார். அடுத்தகட்டமாக, த்ரிஷாவும் விஜயும் மார்ச் 21 அன்று மும்பைக்கு சென்று திரும்பினர். அங்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, திரைப்பட இயக்குனர் அட்லியின் மனைவிக்கு சீமந்தம் என்று சொல்லி, இயல்பாக நடந்த ஒரு விழாவை விஜய் தரப்பில் காரணம் காட்டினர். த்ரிஷாவும், சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வது போல, மும்பை சென்று திரும்பினார்.அப்போது, 55--60 தொகுதிகளை பெற்றுக் கொண்டு, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய விஜய் ஒப்புக் கொண்டார். முதல்வர் வேட்பாளர் விஷயத்தை ஓரிரு நாட்களில் சுமுகமாக பேசி முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., தரப்பு, வலுவான கூட்டணி கட்டமைக்கப்பட்டு விட்டது என, சந்தோஷத்தில் இருந்தது. ஆனால், ஓரிரு நாட்களிலேயே அது மாறியது. அடுத்த கட்ட பேச்சுக்கு, விஜயின் தூதுவராக அமித் ஷாவின் குழுவை சந்திக்க சென்றார் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. அவர், கால் மீது கால் போட்டுக்கொண்டு, '90 சீட் என்றால் பேசலாம்' என்று, தெரிவிக்க, பா.ஜ., தரப்பிற்கு பெரும் அதிர்ச்சி. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய காலகட்டத்தில், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே விஜய் வருவார் என, பா.ஜ., தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இது, பா.ஜ.,விற்கு மூன்றாவது மூக்கறுப்பு.விஜய்க்கு கூட்டணிக்கு வர விருப்பமில்லை. ஆனாலும், அதை நேரடியாக சொல்ல மனமுமில்லை. எங்கே பா.ஜ.,வால் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சமும் வாட்டியெடுக்க, நிலையில்லாமல் பேசி வருகிறார் என்பதை புரிந்து கொண்ட பின் தான், பா.ஜ., தரப்பு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க துவங்கியது. இதனால், 'நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. விஜய், சிறுபிள்ளைத் தனமாக டீல் செய்கிறார். அவருக்கு அரசியல்வாதிக்கான மெச்சூரிட்டி வரவில்லை. அவரை நம்பி, தேர்தலை எதிர்கொள்வது சிரமம்' என்று பியூஷ் கோயல் சொல்லவே, 'பழனிசாமியிடம் பேசி, இருக்கும் கூட்டணிக்குள் பிரச்னையில்லாமல் தொகுதி பங்கீட்டை முடியுங்கள்' என, பீயூஷ் கோயலிடம் சொல்லி அனுப்பினார் அமித் ஷா. நம்பிய தன்னை விஜய் ஏமாற்றி விட்டார் என்ற கோபம் அ.தி.மு.க.,வை காட்டிலும் பா.ஜ.,வுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

subramanian
மார் 27, 2026 08:44

இந்த கட்டுரை ஒரு கட்டு கதை.


jkrish
மார் 27, 2026 03:35

நேற்று வந்தவர் ஆனால் பாடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது யாருக்கு ?


Umashankar
மார் 26, 2026 16:50

பாஜக வின் அனைத்து தலைவர்களும் திமுகவை திட்டுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை , அவர்களுக்கான சுய விளம்பரம் அதிகம் , எப்போதும் போல பிளாக் மேஜிக் மெயில் செய்து வெற்றி பெற நினையாது உண்மையில் கொஞ்சம் நல்லது செய்யுங்க பா


panneer selvam
மார் 26, 2026 15:04

This article is nothing but fiction . Absolute lunatic narration


நிக்கோல்தாம்சன்
மார் 26, 2026 14:02

ஹா ஹா நீங்க சொன்னதால் மூக்கறுபட்ட பாஜக சிரிப்பு தான் வருது எடிட்டரே , அவர்கள் வலுவாக பலமாநிலங்களின் காலை ஊன்றி வருகின்றனர் , ஒவ்வொரு இடத்த்திலும் ஒவ்வொரு களப்பணியாளர் . இந்த நிலையில் எட்டப்பனின் தலை குட்டப்படும்போது விஜய் தலை நிமிருவார்


AN ORDINARY HUMAN
மார் 26, 2026 13:51

ஒன்றிற்கும் உதவாத இந்த மாதிரியான சினிமா கவர்ச்சி ஆட்களை நம்புவதற்கு பதிலாக, அண்ணாமலை போன்ற அறிவாற்றல், சொல்லாற்றல், சுயமாக சிந்திக்கும் திறமை படைத்த இன்னும் ஒரு 10 பேரை கட்சியில் சேர்த்து தமிழகத்தில் பா.ஜா.க - வை அடிமட்டத்தில் இருந்து வளர்க்கும் வேலையே பார்த்தால் நல்லது. இல்லையெனில் யார் நினைத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவே போவதில்லை.


Raja
மார் 26, 2026 11:51

அண்ணாமலை சொல்வடிகை கேட்டால் பிஜேபி வெற்றி பெரும் என்பதை அமித் ஷா உணர்ந்துவிட்டார்.


Muralidharan S
மார் 26, 2026 11:24

திராவிஷன்கள் அதிமுகவை பாஜகவின் அடிமை என்றனர்.. விஜயின் கட்சியை பாஜகவின் பி டீம் என்றனர்.. பாஜகவிற்கு 40 தொகுதிகள் என்றனர்.. தமிழக அரசியல்வியாதிகளின் ஊழல் பட்டியல் எல்லாம் அமித்ஷாவின் மேஜையில் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் தூசி தட்டி எடுக்கப்படும் என்றனர். இந்த தேர்தலில் கூட்டணியில் பாஜக வைத்ததுதான் சட்டம் என்றனர். அது எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றனர். அதிமுக இரண்டாக பிரிந்து ஒருபிரிவினர் பாஜகவுடன் சேர்ந்து பாதிக்கு பாதி என்று தேர்தலை சந்திப்பார்கள் என்றனர். கரூர் சம்பவத்தை வைத்து விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றனர்.. அல்லது விஜய்க்கு எதிராக இருக்கும் என்றும் சொன்னார்கள்.. அதே கரூர் சம்பவத்தில் திராவிஷா செந்தில் பாலாஜி வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு திராவிஷா வெற்றியை முடக்குவார்கள் என்றனர்.. திராவிஷா அமைச்சகர்களுக்கு எதிரான ஊழலில் தேர்தலுக்குள் நடவடிக்கை இருக்கும். திராவிஷா கூட்டணி உடையும்.. பல கட்சிகள் அதிமுகவுடன் சேரும். அதிமுக விஜய் கூட்டு சேர்ந்து பாஜகவை கழற்றிவிட்டு விடுவார்கள் .. கான்-cross உடைந்து விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்.. கனிமொழிக்கு வாய்ப்பு.. சபரீசன் உதயநிதி சண்டை.. இப்படி என்ன என்னவெல்லாமோ ஊடக செய்திகள்.. மக்கள் பொழுதை போக்குவதற்கு.... இன்னும் ஒரு மாதத்தில் வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளே மக்களுக்கு தேவையில்லை.. ஊடகங்களின் கற்பனைகள் போதும்..


Marai Nayagan
மார் 26, 2026 18:30

உண்மை....அருமை


SANKAR
மார் 26, 2026 20:00

excellent post in decent language murali .congrats.this board needs persons like you to improve quality.but none you mentioned were fiction and almost happened.


Madras Madra
மார் 26, 2026 09:48

முயற்சி எடுப்பது தவறு இல்லை அடுத்த பெரும் வெற்றிக்கு அது வழி வகுக்கும் காலம் வரும் வரை காத்திருந்து பெரு வெற்றி அடைவதில் பா ஜ வினர் கில்லாடிகள்


angbu ganesh
மார் 26, 2026 09:24

விஜய்க்கு இன்னும் இது சினிமான்னு தான் நெனச்சிட்டு இருக்கார், கூட இருக்கவனுங்க ஒவ்வொருத்தன கழன்றுட போறானுங்க தனியா கட்சி நடத்த போறார் காலம் பொறுமையா யோசிச்சு பதில் சொல்லும்