எனக்காக ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததே தங்க தமிழ்செல்வன் தான்!

மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வென்ற சட்டசபை தொகுதிகள் அடங்கிய தேனி லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன். ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும், பா.ஜ., கூட்டணியில் தினகரன் களம் காண்பது இதுதான் முதன்முறை.

அவர் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதை பிரசாரம் செல்லும் இடங்களில் உணர்ந்தேன். தேனி தொகுதியில் போட்டியிட்டு ஏற்கனவே நான் வென்று இருக்கிறேன். எம்.பி.,யாக இருந்த கால கட்டங்களில் நன்றாக செயல்பட்டதால், மக்கள் அதை இன்றும் மறக்காமல் உள்ளனர். எனக்குப் பின், கடந்த 20 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தவர்கள் நன்றாக செயல்பட்டிருக்கலாம். அவர்கள் செய்யவில்லை.

அதனால், என்னையும் அவர்களையும் இப்போது மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து என்னை மீண்டும் விரும்புகின்றனர். மற்றபடி, பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தமிழகம் முழுதும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவர்.

மீண்டும் அ.தி.மு.க., ஒன்றுபட வாய்ப்புஉள்ளதா? எந்த அடிப்படையில் ஒன்றுசேரும் என சசிகலா சொல்லி வருகிறார்?

இதற்கு சசிகலா தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் தைரியமாக சொல்வேன். பழனிசாமி இருக்கும் வரை தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பு இல்லை.

ஏனெனில், அவர் சுயநலத்தின், துரோகத்தின் உச்சம். சுயநலம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் அ.தி.மு.க., தொண்டர்கள் இணைய முடியும்.



உங்கள் மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. அதிலிருந்து தப்பிக்கவே நீங்கள் பா.ஜ., கூட்டணி பக்கம் சென்றதாக சொல்கின்றனரே?

கடந்த 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட போதே, என் மீது இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அப்போது என்னுடன் இருந்து தேர்தல் வேலை பார்த்தவர்தான் தி.மு.க., வேட்பாளர். 2019 ஜூலை வரை என்னுடன் இருந்தார். வழக்கை நேரடியாக சந்திப்பேன். அதற்கும் பா.ஜ., கூட்டணியில் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

'விதவைகள் மறுவாழ்வு திட்டத்தில் பயன் பெறுங்கள்' என இந்திராவை நக்கலாக பேசியதற்காகத்தான் 'மிசா'வில் கைதாகி ஓராண்டு சிறையில் வைத்தனர். ஆனால், மீண்டும் 1979ல், 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என அந்தர் பல்டி அடித்தார் கருணாநிதி. ஊழலுக்கு ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க., ஆட்சிதான்.

போதைப் பொருள் விற்பனை தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது. இதை பிரதமர் மோடியே வருத்தப்பட்டு பேசும் அளவுக்கு நிலைமை சீரியஸாகி இருக்கிறது. அப்படிப்பட்ட தி.மு.க.,வினர் தான், என் மீது வழக்கு இருக்கிறது என்று சொல்லி, என் மீது இல்லாத கறையை பூசப் பார்க்கின்றனர்.

மீண்டும் கச்சத்தீவு பிரச்னையை கிளப்பி, அதை தேர்தலுக்கு பயன்படுத்தப்

பார்க்கிறதா பா.ஜ., கூட்டணி?


தமிழக முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் ஊழல் வழக்கில் கைதாகக் கூடாது என்ற பதற்றத்தில் கச்சத்தீவையே தாரை வார்க்க ஒப்புக் கொண்டார். அதனால்தான் தமிழக மீனவர்கள் இன்று வரை பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசியலை நோக்கி பிரதானமாக பயணித்த நீங்கள், மீண்டும் எம்.பி.,யானால் உங்களின் தமிழக அரசியல் கனவு என்னவாகும்?

நான் எங்கே சென்றாலும் தொகுதி இதுதான். இத்தொகுதியின் வளர்ச்சிக்காகத்தான் என் அனைத்துப் பயணமும் இருக்கும். தமிழகம் தான் என் பிரதான அரசியல் களம்.

தமிழகத்தில், 2 முறை முதல்வர், 3 முறை எம்.எல்.ஏ.,வான பன்னீர்செல்வம், தற்போது ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?

பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திலும், குக்கர் சின்னத்தில் நானும் போட்டியிடுவதற்கு காரணமே பழனிசாமி செய்த சதிதான். அவர் ஆட்சி பொறுப்புக்கு வர காரணமாக இருந்தது நானும் எங்கள் குடும்பமும். நான்கரை ஆண்டுகள் ஆட்சி தொடர காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். இரு தரப்புக்கும் துரோகம் இழைத்தவர் பழனிசாமி.

நான்கு ஆண்டு காலம் மத்திய அரசு வாயிலாக எல்லா உதவிகளையும் செய்தது பா.ஜ., இறுதியில் அக்கட்சியினருக்கு மாபெரும் துரோகத்தை செய்தவர் பழனிசாமி. இப்படி பழனிசாமியின் பட்டியல் போடப் போனால், பக்கங்கள் பத்தாது. அவருடைய இளம் வயதில் இருந்தே துரோகப் பட்டியல் துவங்குகிறது. இதற்கான பலனை மிக விரைவிலேயே அவர் அனுபவிப்பார்.



மனைவி அனுராதா உங்களுக்காக பிரசாரம் செய்கிறார். அ.ம.மு.க.,வும் வாரிசு அரசியலை நோக்கி செல்கிறதா?

தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவித்து 15 முதல் 20 நாட்கள்தான் தேர்தல் பிரசாரத்திற்காக நேரம் வழங்கியுள்ளது. மார்ச் 24 முதல் 31 வரை முதல் கட்ட தேர்தல் பிரசாரத்திற்கு பல தொகுதிகளுக்கு சென்று விட்டேன். ஏப்., 1 முதல், ஒரே ஒரு நாள் தான் தேனியில் இருக்க முடிந்தது. கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய வேண்டிய பணியும், கடமையும் கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் எனக்கு உண்டு.

இதனால், என் தொகுதியில் நான் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் எனக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என் மனைவி அனுராதா. போகும் இடங்களில் அவர் அரசியல் பேசவில்லை. யாரையும் எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை. அரசியல் குறித்து என் கணவரிடம் கேளுங்கள் என்று தான் கூறியுள்ளார். கணவருக்காக ஓட்டு கேட்பது தவறில்லை.

நாகரிகமான அரசியல் தான். குடும்பத்தை வைத்து கொள்ளையடிப்பவர்களுக்கு மத்தியில், நாகரிகமான அரசியல் மேற்கொள்ளும் என் மனைவி பிரசாரம் மேற்கொள்வதை யாரும் குடும்ப அரசியல் என சொல்லக் கூடாது.



திருச்சி தொகுதியை அ.ம.மு.க.,வுக்காக கேட்டு பெற்று இருக்கிறீர்கள். அங்கு வலுவாக இருக்கும் அமைச்சர் நேருவை மீறி வெல்ல முடியுமா?

அமைச்சர் நேரு, தன் மகன் அருணை வெற்றி பெற வைப்பதற்காக பெரம்பலுார் சென்று விட்டார். அதனால், அவர் திருச்சியிலேயே இல்லை. திருச்சியில் துரை தான் போட்டி யிடுகிறார். அவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க, நேரு போட்ட நாடகம் எடுபடவில்லை. அதன்பின், தி.மு.க.,வினர் துரைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

திருச்சியில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் பி.செந்தில்நாதன் மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர். அவருக்கு திருச்சி மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும், செல்வாக்கும் உள்ளது. அவருக்காக மூன்று நாட்கள் அங்கேயே தங்கி பிரசாரம் செய்தேன். அவர் கட்டாயம் வெற்றி பெறுவார்.

ஜெயலலிதா தேனி தொகுதிக்குள் வரும் ஆண்டிபட்டியில் போட்டியிட்ட காலம் முதல், தேனி தொகுதியில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லையே?

கடந்த 2006க்கு பின், ஒரு சில ரோடுகள் தவிர, எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. ஆண்டிபட்டி பகுதிக்கு செல்லும்போது கஷ்டத்தை உணர்ந்தேன். சேடபட்டி தொகுதியில் ஏழுமலை அருகில் டி.கிருஷ்ணாபுரம் சென்றேன். அங்குள்ள மக்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், 'நீங்கள் எம்.பி.யாக இருந்தபோது அமைத்த ரோடு இது. 20 ஆண்டுகளாக யாரும் புதிய ரோடு அமைக்கவில்லை. குண்டும் குழியுமாக உள்ளது. மீண்டும் ரோடு அமைத்து கொடுங்கள்' என கூறியிருந்தனர். இந்த நிலையை நான் மீண்டும் எம்.பி.,யானதும் மாற்றுவேன்.



ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றார் தினகரன் என, தி.மு.க., தேனி வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் கூறுகிறாரே?

டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றேன் என்று இன்றைக்குக் கூறுகிறவர், அன்றைக்கு என்னோடு கூடவே தானே இருந்தார். அது உண்மை என்றால், அன்றைக்கே அவர் என்னை விமர்சித்து விட்டு கட்சியை விட்டு வெளியே சென்றிருக்கலாமே. 2019 வரை என்னுடன் இருந்து, கடந்த லோக்சபா தேர்தலில் இதே தேனியில் என் வேட்பாளராக பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டார்.

பின் தி.மு.க.,விற்கு ஓடிவிட்டார். மக்கள் என் மீது வைத்துள்ள பாசம் எல்லாம் அவருக்கும் தெரியும். ஒரு வேட்பாளராக ஏதாவது சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர், அப்படித்தான் பேசியாக வேண்டும்.

ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் ஆர்வ மிகுதியில் மக்களுக்கு டோக்கன் கொடுத்தனர். அது குறித்து எனக்குத் தெரியாது. தெரிந்ததும், கண்டித்தேன். டோக்கன் கொடுத்தவர்களில் தேனி தோகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வனும் ஒருவர்.

அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் தான் போட்டி. அ.ம.மு.க.,விற்கு ஓட்டு வங்கி கிடையாது என தங்க தமிழ்செல்வன் கூறுகிறாரே?

ஓட்டு வங்கி இல்லை எனில் ஏன் என்னை திட்டி பேச வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் என் கட்சியின் சார்பில் பரிசு பெட்டகம் சின்னத்தில் லட்சக்கணக்கான ஓட்டுகளை அவர் எப்படிபெற்றிருக்க முடியும்.

தி.மு.க.,வும் பழனிசாமியும் கள்ள கூட்டணி வைத்திருக்கின்றனர். அதனால் தான் தி.மு.க., குறித்து பழனிசாமி பெரிதாக எதுவும் பேசுவதில்லை.

முதல்வர் ஸ்டாலின் தேனி பிரசாரத்துக்கு வந்தபோது அ.தி.மு.க., வேட்பாளர் குறித்து எதுவும் பேசவில்லை. அவர்கள் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதை இதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். மற்றபடி எனக்கு ஓட்டு வங்கி இல்லை என்று கூறுவதெல்லாம் பிதற்றல்.



இரட்டை குடியுரிமை பெற்றவர் தினகரன் என பிற வேட்பாளர்கள் கூறுகின்றனரே?

இந்தியாவின் குடியுரிமை பெற்றவன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சிங்கப்பூர் நாட்டின் ஓட்டுப்பதிவு செய்யக் கூடிய உரிமை தவிர, பிற அனைத்து உரிமைகளும் பெற்றவன் நான். இதை புரியாத சிலர், விபரம் தெரியாமல் பிதற்றுகின்றனர்.

தேனி தொகுதி வளர்ச்சிக்கான உங்கள் வாக்குறுதிகள் குறித்து?

தேனி மருத்துவக் கல்லுாரியை கொண்டு வந்தேன். அதேபோல் உலகத்தரம் வாய்ந்த மத்திய அரசு பல்கலை. ஐ.ஐ.டி., மாதிரி கல்வி நிறுவனம், இங்கு கொண்டு வரப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். திண்டுக்கல் - - சபரிமலை அகல ரயில்பாதை, போடி வரை உள்ள ரயில் பாதையை கூடலுார் வரை நீட்டிக்கச் செய்வேன்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்