பா.ஜ.,வின் கைப்பாவை, முதல்வர் ரங்கசாமி : ஸ்டாலின் பேச்சு

"தமிழகம் போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்க வேண்டும். இது தான் பா.ஜ.,வின் திட்டம்" என முதல்வர் ஸ்டாலின் பேசினார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தி.மு.க., காங்கிரசும் பாடுபட்டால் புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பா.ஜ., செயல்படுகிறது.

பா.ஜ.,வில் கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்களை புதுச்சேரி சட்டசபையில் நியமன உறுப்பினராக போட்டு, சட்டசபை ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கினார், ஒரு துணைநிலை ஆளுநர். அதுமட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அரசையே புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி ரேஷன் அரிசியை தடை செய்தார்கள்.

புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும், வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாராயணசாமிக்கு ஒத்துழைக்காமல் அரசியல் சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தையே பா.ஜ., சீர்குலைத்தது.

இப்படி செயல்பட்டது, துணைநிலை கவர்னராக இருந்த கிரண் பேடி. சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலை கவர்னராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார்.

தமிழகத்திலும் ஓர் ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐ.பி.எஸ்., ஆக இருந்தவர் தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.,வுக்கு பெரிய பிரசாரமே நடந்து கொண்டிருக்கிறது.

காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் கவர்னராக்கி அரசியல் சட்டத்தை மீறி பா.ஜ.,வின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள். இப்படி கவர்னர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி.

பா.ஜ., பொறுத்தவரை புதுச்சேரியின் முன்னேற்றம், மக்களின் வளர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பது தான் பா.ஜ.,வின் கொள்கை.

தமிழகம் போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்க வேண்டும். இது தான் பா.ஜ.,வின் திட்டம்.

ஒட்டுமொத்தமாக எல்லோரும் டில்லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜ,.வின் அஜெண்டா. அதனால்தான், கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பா.ஜ., அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார், புதுச்சேரி முதல்வர்.

இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயக பாதையில் நடைபோட வேண்டும். மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கொடுத்துள்ளது. காங்கிரசும், தி.மு.க., வும் நாட்டு நலன்களில் அக்கறை கொண்டு வாக்குறுதிகளை அளிக்கிறது.

2006ல் தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந்ததோ, அப்படி காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான் நாட்டைக் காக்கப் போகும் கதாநாயகன்.

ஆனால், பிரதமர் மோடி பிரசாரம் செய்வதைப் பார்க்கிறோம். ஒரு நாட்டின் பிரதமர், மதத்தின் பெயரால் பிரசாரம் செய்கிறார். சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார். ஆனால் ஒருமுறைகூட, சமூகநீதியைப் பாதுகாப்பேன் என்றோ, இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவேன் என்றோ எங்கும் மருந்துக்கு கூட சொல்லவில்லை.

மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்று எங்கேயாவது வாய் திறந்தாரா. ஆனால், மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று சொல்கிறார்.

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தான் அதிகம். கிரண் பேடி காமெடிகள் முடிந்த பிறகு தமிழிசை வந்தார். புதுச்சேரியில் உட்கார்ந்து கொண்டு, தமிழக அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் வந்ததும் பா.ஜ.,வுக்கே மீண்டும் சென்றுவிட்டார்.

புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற விடுதலையை, மக்களின் உரிமையை மத்திய அரசை பறிக்கவிட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி, இப்போது எந்த முகத்துடன் பா.ஜ.,வுக்காக ஓட்டு வாக்குகள் கேட்டு வருகிறார்?

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்