மோடியின் 'கச்சத்தீவு' கொதிப்பு: 3 கேள்விகளை எழுப்பிய ஸ்டாலின்

"கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.,வின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது" என பிரதமர் மோடி கொதிப்பை வெளிப்படுத்த, "தேர்தலுக்காக மீனவர்கள் மீது பா.ஜ.,வுக்கு திடீர் பாசம் வந்துவிட்டது" எனப் பதில் கொடுத்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

ராமேஸ்வரம் - இலங்கைக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவை, 1974ம் ஆண்டுக்கு முன்பு வரையில் தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்த இந்தப் பகுதியை இலங்கையின் ஒரு பகுதியாக அங்கீகரித்து, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்தனர். இதனால் இன்று வரையில் இலங்கை கடற்படையால் ஏராளமான தொல்லைகளுக்கு தமிழக மீனவர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.

கச்சத்தீவு குறித்து கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, "தி.மு.க., செய்த பாவத்தால் தமிழக மீனவர்கள் இலங்கையிடம் இருந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், "ஒரு மாநில அரசு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்கும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் மோடி அப்பாவியா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கச்சத்தீவு தொடர்பாக ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவல்களை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 31) செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, "கச்சத்தீவு குறித்து பிரதமர் நேரு எழுதிய குறிப்பில், 'இந்த குட்டித் தீவுக்கு நான் எந்தவித மரியாதையும் கொடுக்கப் போவது கிடையாது. அந்த தீவை இன்னொருவருக்கு கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இதுபோன்ற சின்ன சின்ன பிரச்னைகள் தீர்க்கப்படடாமல் இருப்பது எனக்குப் பிடிக்காது' என்கிறார்.

ஆனால், கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை உள்ளதாக அன்றைய அட்டர்னி ஜெனரல் எம்.சி.செடல்வாட் கூறியிருந்தார். ஆனால், நேருவின் முடிவு வேறானதாக இருந்தது.

1973ல் இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை செயலர்களின் பேச்சுவார்த்தை குறித்த தகவல் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு தீவின் மீதான இந்தியாவின் உரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தெரிவித்தது. கச்சத்தீவை உரிமை கோர தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால், ராமநாதபுரம் ராஜாவிடம் உள்ள உரிய ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை. இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது" என்றார்.

இதே தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, நேற்று மீரட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து, இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களுக்காக தி.மு.க., எதையும் செய்யவில்லை. காங்கிரசும் திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை கொள்வார்கள். கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மையால் ஏழை மீனவர்களும் மீனவப் பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்காக கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

எனவே, திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ---



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்