ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தான் தூக்கம் போய்விட்டது: பழனிசாமி

"தி.மு.க., அரசு மீது நாங்கள் கொடுத்த ஊழல் புகார்களின் மீது கவர்னர் நடவடிக்கை எடுத்திருந்தால் லோக்சபா தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்திருக்கும்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, பழனிசாமி பேசியதாவது:

நாட்டு மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய தலைவர்கள், மக்கள் மனதில் வாழ்வார்கள். ஒரு தலைவர் தன் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார் என்றால், அது கருணாநிதி தான். இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டவர்கள் எல்லாம் அடையாளம் இல்லாமல் போய்விட்டார்கள்.

வரக்கூடிய லோக்சபா தேர்தல் மிக முக்கியமானது. கூட்டணியை நேசிக்கக் கூடிய கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. ஆனால், தி.மு.க.,வில் சீட்டை கொடுத்துவிட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளரை கண்ணீர் வடிக்க வைக்கின்றனர். தி.மு.க., மற்றவர்களை வாழ வைத்த சரித்திரம் கிடையாது. கூட்டணிக்குப் போனால் மென்று விழுங்கிவிடுவார்கள்.

ஸ்டாலினும் உதயநிதியும் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு தூக்கமே போய்விட்டது. ஆனால், யாருக்கோ தூக்கம் போய்விட்டது என்கிறார்கள்.

பட்டாசு தொழில்கள் நிறைந்துள்ள பகுதியாக சிவகாசி இருக்கிறது. பட்டாசு தொழிலின் நிலையை நன்கு உணர்ந்து வைத்திருக்கிறேன். அவர்களைப் பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றம் வரையில் சென்று போராடினோம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த காரணத்தால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமையும்போது பட்டாசு தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பட்டாசு தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க தி.மு.க., எதையும் செய்யவில்லை.

தி.மு.க.,வின் 38 எம்.பி.,க்களும் நாடாளுமன்றத்தில் பேசி அழுத்தம் கொடுத்திருந்தால் பட்டாசு தொழிலுக்கான தடை நீக்கப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் நலமா என முதல்வர் கேட்கிறார். தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரையில் யார் நலமாக இருக்க முடியும்?

விருதுநகரில் என்னைப் பற்றி பேசிய ஸ்டாலின், 'கவர்னரை எதிர்த்துப் பேசவில்லை' என்கிறார். எங்கள் மீது குற்றம் சுமத்தி கவர்னருக்கு மனு கொடுத்தவர் தான் ஸ்டாலின். அப்போதெல்லாம் கவர்னர் நல்லவராக தெரிந்தார். தவறு செய்வதை தட்டிக் கேட்டால் கவர்னர் தவறானவர்.

துறைவாரியாக தி.மு.க., செய்த ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் கொடுத்தோம். இதுவரை கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் லோக்சபா தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்திருக்கும். ஊழல் மலிந்த அரசாக தி.மு.க., இருக்கிறது.

வீட்டு வரியை 100 சதவீதம் உயர்த்தியுள்ளனர். கடைக்கு 150 சதவீதமாக வரியை உயர்த்தியுள்ளனர். மின்கட்டணம் 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. கடைகளுக்கு பீக் ஹவர் என்ற பெயரில் இரு மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும். தண்ணீர் வரியையும் ஏற்றிவிட்டனர்.

இவ்வளவு வரியை போட்ட பிறகும் அரசு கடனில் தான் இருக்கிறது. கச்சா எண்ணெயை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. ஆனால், வரி மட்டும் 70 சதவீதம் வருகிறது. மக்களின் துன்பங்களை உணர்ந்து மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

அதி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதையும் தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. இன்று ஒரு பவுன் 50 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. தி.மு.க.,வின் செயலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடுகிறது.

தமிழகத்தில் போதைப் பொருள் கிடைக்காத இடமே இல்லை. போதைப் பொருள் கடத்திய ஜாபர் சாதிக்குடன் முதல்வர் ஸ்டாலின் எடுத்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. போதைப் பொருள் கடத்துவதற்காக தான் அயலக அணியை அமைத்துள்ளனர்.

இப்போது பிடிபட்டது மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் என்கின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கூறி வருகிறோம். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களே துணைநிற்கும்போது இவர்களால் எப்படி போதைப் பொருளைத் தடுக்க முடியும்?

பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லை என முதல்வர் பேசுகிறார். என் பலத்தை சோதிக்க நினைத்தால் வரட்டும். விவசாயம் செய்த உடல் இது. ஒரு முதல்வராக பொறுப்பை உணர்ந்து ஸ்டாலின் பேச வேண்டும். நாங்களும் ஒரு எல்லை வரை தான் பொறுத்திருப்போம். நாங்களும் பேச ஆரம்பித்தால் உங்கள் நிலை மோசமாகிவிடும்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அ.திமுகவினரை மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது என முடக்க நினைக்கிறார்கள். என்னுடைய ஆட்சியில் எத்தனை தி.மு.க.,வினர் மீது வழக்கு போட்டிருக்க முடியும். என் மீது கூட நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் என வழக்கு போட்டார். சட்டரீதியாக நிரபராதி என நிரூபித்தேன். அதை எதிர்த்து தி.மு.க., உச்ச நீதிமன்றம் சென்றது. அங்கு வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

ஸ்டாலின் மீது புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான ஊழல் புகாரை ஜெயவர்தன் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கை ரத்து செய்துவிட்டனர். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.


SIVA - chennai, இந்தியா
28-மார்-2024 20:57 Report Abuse
SIVA நீங்கள் செய்யும் அரசியல் குளறுபடியால் அவர்களுக்கு வெற்றி மகிழிச்சியில் தூக்கம் போய் விட்டது , அவர்களுக்கு உங்களால் எவ்வளுவு நல்லது செய்ய முடியமோ அதை செய்து விட்டர்கள் ....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்