இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம் : அ.தி.மு.க.,வை சாடிய திருமாவளவன்

"தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். இரண்டு தொகுதிகளுக்கு மேல் தர மறுத்தால் மீண்டும் கேட்போம்" என வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் தி.மு.க., தலைமை ஈடுபட்டுள்ளது. ஐ.யூ.எம்.எல், கொ.ம.தே.க., இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, இன்று (மார்ச் 2) வி.சி.., நிர்வாகிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதற்குப் பதில் வி.சி.,யின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. தி.மு.க., உடனான தொகுதிப் பங்கீடு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

தி.மு.க., உடன் ஓரிரு நாள்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முதல்வரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் சந்திப்போம். கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்துவது உண்மை தான்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த அவசரத்தையும் தி.மு.க., காட்டவில்லை. கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. கட்சி கூட்டம் தாமதமாக தொடங்கியதால் இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை. அதை தி.மு.க.,விடமும் கூறிவிட்டோம். மறற்வர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக அவசரப்பட முடியாது.

எங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்று கேட்கிற உரிமை உள்ளது. அதை மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம். எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். 2 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க மறுத்தால் மீண்டும் மீண்டும் கேட்போம்.

தி.மு.க., காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தையில் இடைவெளி உருவாகும். அதன் பிறகு உள்ளே நுழையலாம் என கனவு காண வேண்டியதில்லை. கூட்டணி கட்சிகளுக்கு இடையே இடைவெளி ஏற்படாது. இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டியதில்லை.

எங்களின் உழைப்பு, பங்களிப்பு, வலிமை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் அறிவார். இந்த புரிதலோடு தொகுதிப் பங்கீடு அமையும். பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிகள் அமைதியாக இருப்பதால் தி.மு.க., கூட்டணி குறித்த பேச்சு அதிகரித்துள்ளது.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்