Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யுங்க; தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் எதிர்பார்ப்பு

 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யுங்க;  தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் எதிர்பார்ப்பு


ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டு சாவடிகளில் சுகாதார வளாகம், குடிநீர், மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல சாய்வு தளம், ஓய்வறை, போதிய மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் 100 சதவீதம் செயல்பாட்டில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் தற்போதே உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தமிழக தேர்தல் ஆணையமும் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1999 ஓட்டு சாவடிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 ஓட்டு சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலரும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்தல் அறிவிப்புக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பை பொறுத்தவரை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் உள்ள பதட்டமான ஓட்டு சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் நியமிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகமும் தயார் நிலையில் உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட அரசு நிர்வாகமும், போலீஸ் துறையும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பணிக்காக வெளியூர்களிலிருந்து நியமிக்கப்படும் அலுவலர்கள் முதல் நாள் மாலையே சம்பந்தப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று, ஓட்டுப்பதிவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் ஓட்டு சாவடிகளில் தங்க வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு நியமிக்கப்படும் ஓட்டு சாவடி அலுவலர்களில் பெரும்பாலும் பெண் அலுவலர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் தங்குவதற்கான ஓய்வறை, சுகாதார வளாகம், குடிநீர், மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும்.

இதில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் நகர்பகுதியில் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் போதிய அடிப்படை வசதிகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இருக்காது. இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் பயன்பாடு இன்றி காணப்படும். இதனால் பெண் அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.

இதேபோல் பல ஓட்டு சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்வு தளம் இல்லாத நிலை காணப்படுகிறது. கிராமப்புற பள்ளி கட்டடங்கள் சேதமடைந்து சுகாதார குறைபாடுடன் காணப்படுகிறது.

எனவே, நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகள் வரை அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சுகாதார வளாகம், குடிநீர், ஓய்வறை, சாய்வு தளம், போதிய மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செயல்பாட்டில் இருப்பதை தற்போதே மாவட்ட நிர்வாகம் உறுதி செய்வதும், குறைபாடுகள் காணப்படும் ஓட்டு சாவடிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டு சாவடி அலுவலர்களும், வாக்காளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement